நம்மையும், நம் குடும்பத்தையும் எப்போதும் ஆண்டவருடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ள ஒரு சில ஆலோசனைகள்..
முதலில் நம் ஆன்மாவுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் :
மாதாவின் மாசற்ற இருதயத்திற்குள் ஒரு கல்வாரி அமைத்து, ஆண்டவருடைய தெய்வீக சிலுவையில் நாம் எப்போதும் அறையப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அந்த சிலுவையில் நம்மை ஆண்டவர் இயேசுவோடு இனைந்து கொண்டு இருக்க வேண்டும். நான் திராட்சைக் கொடி நீங்கள் அதன் கிளைகள் என்று சொன்னாரல்லவா அதை அடிக்கடி நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்டவர் குறைந்தது மூன்று மணி நேரமாவது சிலுவையில் தொங்கினார் அல்லவா. அந்த மூன்று மணி நேரம்தான் நம் வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும்.. நாம் வாழ்க்கையில் எதாவது வேதனையில் ( உடல், உள்ள) சிக்கும்போதும், தவிக்கும்போதும் அதை அப்படியே ஆண்டவருடைய திருப்பாடுகளோடு ஒப்புக்கொடுக்க வேண்டும்.. ஒவ்வொரு நாளும் இதை நாம் செய்ய வேண்டும்.. அதிகாலை ஜெபிக்கும்போதே முக்கியமாக ஜெபமாலையின்போது நாம் இதை நினைவு கூர்ந்து ஒப்புக்கொடுக்க வேண்டும்.. உலகில் மிகச் சிறந்த பாதுகாப்பு இடம் இதைத்தவிர வேறு இல்லை.. மாதாவின் மாசற்ற இருதயம் சாத்தான் புக முடியாத இடம். கல்வாரி அவன் பக்கத்தில் கூட வரமுடியாமல் ஒடிவிடும் இடம்.. இது ஒரு நல்ல பயன் தரக்கூடிய ஆன்மீக முயற்சியாக கண்டிப்பாக இருக்கும்..
எதிரியின் தாக்குதலின் போதும், நாம் சோதனைக்கு உள்ளாகும் போதும், முக்கியமாக எதிரின் தந்திர சோதனைக்கு உள்ளாகும் போதும்.. நமக்கு மாதாவின் துணை கண்டிப்பாக இருக்கும் இனிப்பை ஈ மொய்க்கும் போது அதை எப்படி கை யை வீசி நாம் விரட்டுவோமோ.. அது போல நம் ஆன்மாவை பிசாசு தாக்கும்போதும், மொய்க்கும்போதும் நம் பரிசுத்த தேவ மாதா கைகளை வீசி விரட்டி விடுவார்கள்..
நம் குடும்ப பாதுகாப்பு : நம் குடும்பத்தை மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து விட வேண்டும்.. மேலே சொன்ன பக்தி முயற்சியை நம் குடும்பத்தோடு சேர்ந்தும் ஒப்புக்கொடுக்கலாம். நம் குடும்பதில் யாராவது கடவுள் பக்தி இல்லாமல் இருந்தால் அவர்கள் சார்பாக அவர்களை மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து அவர்களையும் ஆண்டவர் சிலுவையில் அறைந்து விடலாம்..
மொத்தத்தில் நாமும் நம் குடும்பமும் முழு பாதுகாப்பிற்கு வந்து விடுவோம்.. நம் ஆன்மா பாதுகாப்பாக இருக்கும்..
மேலும் சில பக்தி முயற்சிகள்..
வாரத்தில் திங்கள் கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புனிதரை துணைக்கு அழைத்து, அன்று முழுவதும் அவர்கள் நம்மை பாதுகாத்து நம்முடைய ஜெபங்கள், ஒறுத்தல் முயற்சிகள், அன்றைய சிலுவைகளை மற்றும் தவமுயற்சிகளை அவர்கள் மூலமாக ஆண்டவரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும்.. ஒவ்வொரு நாளும் ஒரு புனிதரோ அல்லது நமக்கு பிடித்த சில புனிதர்களையோ துணைக்கு அழைக்கலாம்..
உதாரணமாக,
திங்கள் : புனித லூயிஸ் மரிய மோன்ட்போர்ட், சுவாமி நாதர், புனித பிலோமினா, முத்தி பேறு பெற்ற பவுலின் ஜெரிக்கோ
செவ்வாய் : புனித அந்தோனியார்
புதன் : புனித சூசையப்பர்
வியாழன் : புனித சந்தியாகப்பர்
வெள்ளி : புனித பிரான்ஸிஸ் அசிசியார், புனித தந்தை பியோ, புனித தொன் போஸ்கோ, புனித தொமினிக் சாவியோ
சனி : புனித குழந்தை தெரசா, அன்னை தெரசா, புனித அவிலா தெரசா, புனித அல்போன்சா, புனித ஜெத்ரூத்தம்மா, புனித ஃபாஸ்டினா, புனித ரீத்தா
ஞாயிறு : முழுவதும் பிதாவான சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.. அன்று பாத்திமா சிறுமிகளான புனித பிரான்ஸிஸ், ஜெசிந்தா, லூசியா மூலம் ஒப்புக்கொடுக்கலாம்..
மேலும் தினமும் அவர்களோடு நம் பெயர் கொண்ட புனிதர்களையும், நம்முடைய காவல் சம்மனசையும் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல தினமும் ஒரு புனிதருக்கு பதிலாக இன்னும் ஒருவரையோ, இருவரையோ சேர்த்துக்கொள்ளலாம்.. உங்கள் விருப்பப்படி கிழமைகளுக்கு தக்கபடி புனிதர்களை வைத்துக் கொள்ளலாம்..
மேலே உள்ள பக்தி முயற்சிகள் முழு பலன் கொடுக்க வாரம் ஞாயிற்றுக்கிழமையாவது (தினசரி பூசை கிடைத்தால் பெரும் பாக்கியம்) தகுந்த தயாரிப்போடு திருப்பலியில் பங்கேற்று திருப்பலியில் நம்மையும் நம் குடும்பத்தையும், நம்முடைய தேவைகளையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.. தினமும் 53 மணி ஜெபமாலையாவது கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும்..
ஆரம்பத்தில் ஒரு சில தடைகள் வரலாம்.. சோர்வு வரலாம்.. ஆனால் இதைக்கடைப் பிடித்தால் நாம் ஆன்மீக சுறு சுறுப்போடு பாதுகாப்பாக பயமின்றி வாழலாம்.. தேவபாதுகாப்பு, தேவ பராமரிப்பு தேவ சித்தம் நம்மோடு இருக்கும்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !