வியாகுலங்கள் நிறைந்த மாதாவின் மீதுள்ள பக்தியானது எப்பொழுதுமே கத்தோலிக்கக் கிறீஸ்தவர்களின் மத்தியில் காணப்படுகிற அவர்களுக்கு மிகப் பிரியமான ஒரு பக்தி முயற்சியாகும்.
இந்த பக்தி முயற்சி திருச்சபையால் அங்கீகரிக்கப் பட்டு, பூசைப் புத்தகத்திலும், குருக்கள் மற்றும் துறவியரின் கட்டளை ஜெபப்புத்தகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வேசுரனுடைய திருத்தாயார், தனது திவ்விய குமாரனோடு உலகத்தில் வாழ்ந்தபோது, நம் நிமித்தமாக அவர்கள் அனுபவித்த விவரிக்க முடியாத வியாகுலங்களை நாம் எப்போதும் நம் மனக்கண் முன் கொண்டிருக்கும் பொருட்டு, மாமரியின் ஏழு வியாகுலங்களுக்குத் தோத்திரமாக திருச்சபை இரண்டு திருநாட்களைக் கொண்டாடுகிறது.
அவற்றில் ஒன்று பெரிய வெள்ளிக்கு முந்தின வெள்ளியன்றும், இன்னொன்று செப்டம்பர் 15 அன்றும் கொண்டாடப்படுகிறது.
ஏழு வியாகுலங்களின் ஜெபமாலையையும், வியாகுல மாதாவின் இன்னும் பல பக்தி முயற்சிகளையும் திருச்சபை எண்ணற்ற ஞானப் பலன்களால் வளப்படுத்தியுள்ளது.
“ஸ்தாபாத் மாத்தெர் தோலோரோஸா” (மைந்த னார் சிலுவை மீது) என்ற அருமையான பாடல் எவ்வளவாக நம் நெஞ்சைத் தொடுவதாக உள்ளது!
இது பொதுச் சிலுவைப் பாதையின்போது இடையிடையே பாடப்படும் பாடலாக திருச்சபையால் நமக்குக்கொடுக்கப்பட்டுள்ளது.