பழைய ஏற்பாட்டு முதியவரான தோபியாஸ் தம் வாழ்வின் முடிவு நெருங்கி வருவதை உணர்ந்த போது, அவர் தம் மகனை அழைத்து, அவனுக்கு ஞானமுள்ள அறிவுரை களைத் தந்தார். அவனுடைய தாயாரைப் பற்றி, நெகிழ்ச்சி யூட்டும் விதத்தில் அவர் அவனுக்குப் பின்வருமாறு அறிவுரை தந்தார்: "... உன் தாய் உயிரோடிருக்கும் நாட்களிலெல்லாம் அவளைச்சங்கித்து வரக் கடவாய். அவள் உதரத்தில் நீ இருந்த போது, உன்னைப்பற்றி அவள் பட்ட அவதிகளையும், ஆபத்து களையும் நீ உன் ஞாபகத்தில் கொண்டிருக்க வேண்டும்” (தோபி.4:3-4). உண்மையாகவே நம் உலகத் தாயைப் பொறுத்த வரை இது நம் எல்லோருக்கும் ஓர் அழகிய பாடமாக இருக்கிறது. ஆயினும் நம் பரலோகத் தாயும், நம் ஆத்துமத்தின் தாயுமாகிய மாமரிக்கு இது இன்னும் அதிக சிறப்பாகப் பொருந்துகிறது. சிலுவையிலிருந்தபடி, “இதோ உன் தாய்” (அரு.19:27) என்று நம் நேச இரட்சகர் தம் அன்புச் சீடரிடம் கூறிய போது, தம்முடைய தாயை அவர் நம் ஒவ்வொரு வருக்கும் தாயாகத் தந்தார். -
“உன் வாழ்நாளெல்லாம் உன் தாயை சங்கித்து வா. அவள் உனக்காக எவ்வளவு துன்பப்பட்டாள் என்பதை ஒருபோதும் மறவாதே” என்றும் நம் ஆண்டவர் சொல்கிறார். நம் இரட் சணியத்திற்காக மாமரி அனுபவித்த அளவுகடந்த பெரும் வியாகுலங்கள் மற்றும் துன்பங்களின் காரணமாக, அவர்கள் நம் தயவிரக்கத்திற்கும், மிக உயர்ந்த மரியாதைக்கும் தகுதி யுள்ளவர்களாக இருக்கிறார்கள். நம் சொந்தத் தாய் நீண்ட காலமாக கடுமையான துன்பம் அனுபவித்து வருகிறாள் என்றால், அவள்மீது கொள்ளும் தயவிரக்கத்தின் மூலம் நாம் நம் அன்பையும், மரியாதையையும் அவளுக்குக் காட்டு கிறோம். பதிலுக்கு நம் தாய் முன்பை விட அதிகக் கனிவோடு நம்மை நேசிக்கிறாள். நம் பரலோக மாதாவாகிய மாமரியும் இப்படியேதான் செய்கிறார்கள். தன் பிள்ளைகள் அடிக்கடி தன் வியாகுலங்களை நினைப்பதன் மூலம் அவர்கள் மீது தயவிரக்கம் கொள்ளும்போது, அவர்கள் வெகுவாக மகிழ்ச்சி யடைகிறார்கள்.
ஒரு முறை தேவமாதா அர்ச். பிரிட்ஜித் அம்மாளிடம், “நான் மனிதர்களின் மக்களின் மீது என் பார்வையைத் திருப்பி, அவர்களில் யாராவது என்மீது இரக்கம் காட்டுகிறானா என்று தேடினேன். அப்படிப்பட்டவர்கள் ஒரு சிலரை மட்டுமே நான் கண்டேன்! பலர் என்னை மறந்து விட்டார்கள் என்றாலும், என் மகளே, நீயாவது என்னை மறவாதிரு. நான் எவ்வளவு அதிகமாகத் துன்புற்றேன் என்பதை நினைத்துக் கொள்” என்று சொன்னார்கள்! - - பரிசுத்த திருச்சபை தீர்க்கதரிசியான எரேமியாஸின் பின் வரும் வார்த்தைகளை வியாகுல மாதாவுக்குப் பொருத்திக் கூறுகிறது: “வீதி கடக்கும் நீங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள்; என் உபாதைக்குச் சமமான உபாதையுண்டா ?" (புலம்பல்.1:12); "ஜெருசலேம் குமாரத்தியே, உன்னை யாருக்கு ஒப்பிடுவேன்? உன்னை யாருக்குச் சமமென்பேன்?... உன் நெருக்கிடை கடலைப் போல் அபாரமாயிருக்கின்றதே; உனக்கு சிகிச்சை செய்கிறவன் யார்?” (புலம்பல். 2:13). மரியாயின் நேசமானது பெரும் நீர்த்திரள்களாலும் அணைக்க முடியாதபடி பற்றியெரிகிற நேசமாக இருக்கிறது. (உந். சங். 8:7). -