ஜெபமாலைகள் அதிகமாக ஜெபிக்கப்பட...

ஜெபமாலையை ஜெபிக்கும் போது முதலில் அவர்களுக்கு வரும் தடைகள் : சோம்பல், அலட்சியம், தூக்கம், மனம் ஒரு நிலைப்படாமை, சோர்வு, அலுப்பு எல்லாம் ஏற்படும். ஜெபமாலை பசாசுக்கு எதிரான ஆயுதம். அதனால் இதுபோன்ற பிரச்சனைகள் ஆரம்பத்தில் தலைதூக்கும். பாசாசு நம்மை ஜெபமாலை செய்ய விடாது. வேறு எதாவது வேலையிலோ அல்லது சீரியல், சினிமா போன்றவற்றிலோ, அல்லது பேச்சு சுவாரஸ்யத்திலோ நம்மை ஈர்க்கும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமர்ந்து ஜெபமாலை சொல்ல ஆரம்பிக்கவேண்டும். எந்த சோதனைகள் வந்தாலும் ஜெபமாலை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

தொடர்ந்து 53 மணிகள் சொல்லி முடித்த பின்பு மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். அப்படியே தினமும் தொடரவேண்டும். ஜெபமாலை தினமும் தொடர்ந்தால் எப்படியாவது ஒரு நாளைக்கு 53 சொல்லிய ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவோம். அப்படியே தொடரும்போது ஜெபமாலை ஜெபிக்காமல் தூக்கமே வராது. ஒவ்வொரு ஜெபமாலையின் முடிவில் நாம் பாதுகாப்பை உணர முடியும். கடவுளை உணரமுடியும். ஜெபமாலை நம்மை சகல ஆபத்துக்களின்றும் பாதுகாக்கும் கருவி. அதிலும் நம் ஆன்மா கடவுளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக்கொண்டே இருக்கும். ஆன்மீக தேடலுக்கும், விசுவாச உறுதிக்கும் ஜெபமாலை மிக மிக அவசியம்.

பயணம் செல்லும் போது, நடந்து செல்லும்போது, சும்மா இருக்கும் போது ஜெபமாலை ஜெபிக்கலாம். சில வேளைகளில் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப பத்து, பத்து மணிகளாக ஒவ்வொரு தேவ இரகசியமாக ஒவ்வொரு கருத்துக்களுக்காக ஒப்புக்கொடுக்கலாம்.

ஆகவே, ஆரம்பித்தில் ஜெபமாலை ஜெபிக்க தடைகள் வந்தால் நீங்கள் சொல்லும் ஜெபமாலையை வைத்தே விரட்டி அடியுங்கள். பசாசின் சோதனைகள் வந்தால் ஜெபமாலையை வைத்தே அவனை வெல்லுங்கள்...

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே….


நாம் நீண்ட பயணம் செய்யும்போது ஆரம்பத்தில் ஒரு ஜெபமாலை சொல்லிவிட்டால் பாதுகாப்பாக பயணிக்கலாம். குடும்ப ஜெபமாலையால் குடும்பத்தில் சமாதானம், மகிழ்ச்சி பிறக்கும்,

நாம் நமது அன்றாட ஜெபமாலையில் கடவுளுக்காக, கடவுளின் திட்டத்திற்காக ஒரு பத்துமணியாவது ஒப்புக்கொடுக்க வேண்டும். இயேசு-மாதா இருதயங்களுக்கு நிகழும் நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாக, மாதாவின் வெற்றிக்காக, இறையாட்சி மண்ணில் மலர, அலகையின் திட்டங்கள் முறியடிக்கப்பட நாம் ஜெபமாலை சொல்லவேண்டும்.

நம்மை நேசிக்கும், நமக்கு சகலமும் செய்யும் கடவுளுக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும். அது நம் ஜெபமாலையாக இருக்க வேண்டும். இயேசு தெய்வத்தின் நூறு சதவீத அன்பை நாம் பெற வேண்டுமானால் திவ்ய பலி பூசையில் பக்தியுடன் பங்கேற்றல், பக்தியோடு ஜெபமாலை ஜெபித்தல் அவசியம். ஜெப-தவங்கள், ஒறுத்தல் முயற்சிகள், பரிகாரங்கள் அவசியம்...

அக்டோபர் மாதம் வந்துவிட்டது. இது ஜெபமாலை மாதம். அதிகமாக ஜெபமாலைகள் ஜெபிக்கப்பட வேண்டும். மாதா மிகவும் விரும்புவது திருப்பலிக்கு அடுத்தபடியாக ஜெபமாலையே. ஒவ்வொரு கத்தொலிக்கரும் தினமும் 53 மணியாவது கண்டிப்பாக ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நான் மாதாவை நேசிக்கிறேன் என்று சொல்வதில் அர்த்தம் உள்ளது. 

ஜெபமாலை சொல்லாமல் மாதாவை நேசிக்கிறேன் என்று சொன்னால் அவர்கள் அன்னையின் மீது பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே ஜெபமாலை சொல்லும் பழக்கம் இல்லாதவர்கள் ஜெபமாலையை தொடங்குங்கள் (இன்றே). ஏற்கனவே 53 மணி சொல்பவர்கள் அதை 153 மணியாக உயர்த்துங்கள். அன்னையும் உங்களை உயர்த்துவார்கள். ஒரு ஜெபமாலை என்பது 153 மணிகளே.

எப்படி ஜெபமாலையை அதிகப்படுத்துவது. நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஜெபிக்கலாம், பயணம் செய்யும்போது ஜெபிக்கலாம். ஏன் நடந்து செல்லும்போது, வேலையின் இடைவெளியில் கூட ஜெபிக்கலாம். ஒவ்வொரு பத்து பத்து மணிகளாக சொல்லினால் கூட தூங்கும்முன் குறைந்தது 153 மணிகள் ஜெபித்துவிடலாம். ஒரு ஜெபமாலை சொல்வதற்கு 20 நிமிடம், ஒரு பத்துமணிகள் சொல்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் ஆகும். இப்படியாக நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓய்வு நேரத்திலும் ஒரு மூன்று நிமிடத்தை ஒதுக்கினாலே பத்துமணிகள் ஜெபித்துவிடலாம். ஒரு பாடல் கேட்கும் நேரம். இது தவிர ரிலாக்சாக ஒன்று, இரண்டு, மூன்று என்று பரலோக மந்திரங்களும், அருள் நிறை மந்திரங்களும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஒரு அருள் நிறை மந்திரம் ஒரு பொற்காசுக்கு சமம்.

பக்தியாக ஜெபமாலை சொல்லி எண்ணற்ற அற்புத அனுபவங்களை புனிதர்கள் பெற்றுள்ளார்கள் நம் புனிதர்கள் புனித சுவாமி நாதர், புனித குழந்தை தெரசம்மாள், தந்தை பியோ இன்னும் பல புனிதர்கள். 

ஒரு முறை புனித ஜெத்ரூத்தம்மாள் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருக்கும்போது எதிரே நம் இயேசு காட்சி தருகிறார். புனிதை ஒரு அருள் நிறை மந்திரம் சொல்லியதும் இயேசுவின் கையில் ஒரு பொற்காசு. அவர் ஒவ்வொன்றாக அருள் மந்திரங்கள் சொல்லச்சொல்ல இயேசுவின் கையில் பொற்காசுகள் கூடிக்கொண்டே இருக்கிறது. அதைக்கவனித்த புனித ஜெத்ரூத்தம்மாள், “ ஆண்டவரே என்ன அது ? “ என்று கேட்டதற்கு, இயேசு சொல்லிய பதில் , நீ சொல்லும் அருள் நிறை மந்திரங்கள்தான் தங்கக்காசுகளாக மாறுகின்றன. நாளை நீ மரித்த பின்பு பரலோகத்திற்கு நீ சென்றடைய உனக்கு ஆகும் ஆன்மீகச்செலவுக்கு இவைகள் பயன்படும்” 

பார்த்தீர்களா ஜெபமாலையின் பலனை. நாம் சொல்லும் ஒரு அருள் நிறை மந்திரம் கூட வீன்போகாது.

ஆகையினால் ஆன்மாவை சுத்தப்படுத்தும் ஜெபமாலை நமக்கு இன்றியமையாதது. ஆன்மீக செலவுக்கு பயன்படும் ஜெபமாலை மிக மிக இன்றியமையாதது.

ஆகவே, ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம். அதிலும் வரப்போகிற அக்டோபர் மாதத்தில் அதிகமாக ஜெபமாலை ஜெபித்து நம் அன்னையின் மலர்ப்பாதம் சமர்ப்பிப்போம்.

இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க