பாவிகளின் அடைக்கல செபம்!

பரலோக பூலோக இராக்கினியே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ நான் நாலாபக்கத்திலும் துன்பப்பட்டு அண்டவோர் ஆதரவின்றி மோட்ச நெறியை விட்டுப் பாவச் சேற்றில் அமிழ்ந்து நிற்கிறேன். 

சூது கொண்ட பசாசு ஓர் பக்கத்தில் தொந்தரை பண்ணுகிறது. பெரிய பூலோகம் தன் மாய்கையால் என்னை அலைக்கழிக்கின்றது. விஷமேறிய சரீரமோ என்னை எந்நேரமும் சஞ்சலப்படுத்துகின்றது. 

நான் உமது திருக்குமாரனுக்கு என் பாவத்தால் விரோதியானதால் என் இருதயத்தில் பயங்கரமுண்டாயிற்று. புத்தியில் கிலேசமுண்டாயிற்று. இப்படிப்பட்ட வேளையில் நான் எங்கே ஆதரவடைவேன்? 

என் பாவக் கொடுமையின் காற்றா லிழுக்கப்பட்ட தூசி போலானேன். அரவின் வாய்த் தேரை போலானேன். ஆலைவாய்க் கரும்பு போலானேன். அன்னையில்லாப் பிள்ளை போலானேன். புலியின் கைப் பட்ட பாலகனானேன். 

நான் பாதாளத்தில் ஒழிந்தாலும், அங்கேயும் ஆண்டவர் என் குற்றத்தைக் காண்கிறாரே. பூமியில் எந்த மூலையில் போனாலும் என் பாவம் என்னைத் தொடர்வதால், எனக்கு திகிலும் கிலேசமுமின்றி வேறென்ன வுண்டு? 

சர்வேசுரனுடைய நீதிக்குப் பயப்படுகிறேன். நீர் சர்வேசுரனுடைய தாயும் மனுக்குலத்துக்கு அரசியுமானதால் உமது அடைக்கலத்தில் ஓடி வந்தேன். 

மகிமையும் உலக மாட்சிமையும் வேண்டாம். என் பாவத்துக்காக அழுது வியாகுலப்பட்ட தாயே! என் பேரிலிரங்கி நான் படும் துயரை மாற்றி எனக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடும். 

எனக்குப் பூமியும் அதன் செல்வ சுகங்களும் வேண்டாம். சரீர இன்ப சுகமும், புகைபோல் மறையும் பேர் கீர்த்தியும் வேண்டாம். என் ஆண்டவரும், அவர் இராச்சியபாரமும், எனக்கு அகப்பட்டாலே போதும். 

அப்பாக்கியத்தை நினைத்து நினைத்து அனலில் விழுந்த புழுப்போல் துடிக்கிறேன். அம்பு தைத்த மான்போல் அலறுகிறேன். காட்டில் இராக்காலத்தில் அகப்பட்ட பிள்ளையைப் போல் திகைத்து நிற்கிறேன்.

நீர் சகல புண்ணியங்களைக் கொண்ட ஆண்டவளுமாய் இரக்கம் நிறைந்த என் தாயுமாகையால், அக்கினி பற்றி வேகும் வீட்டில் அகப்பட்ட பிள்ளைக்கு கைகொடுப்பார் போல, நீர் எனக்கு இந்தத் தருணத்தில் கைகொடும். 

கடலில் நீந்தி அமிழ்ந்தித் திரிபவர்க்குக் கப்பற்காரர் உதவுமாப்போல் நீர் எனக்கு இந்த ஆபத்தான வேளையில் உதவ வாரும், சீக்கிரமாக வாரும், தயையோடும் இரக்கத்தோடும் வாரும். 

நான் தெய்வத்துக்கேற்காத பாதகனென்றாலும், நான் உம்மை நோக்கி நீட்டிய கை பதறுவதைப் பாரும். நீர் பாவிகளுக்குத் தஞ்சமென்று எல்லோரும் சொல்கிறார்களே, உம்மையண்டி ஆதரவடையாமல் போனவர்களில்லையே. 

ஆகையால் பாவிகளில் பெரும் பாவியாகிய என்மேல் இரக்கம் வைத்து, என்னையும் ஆதரிக்கச் சீக்கிரமாய் வாரும். தாமதம் பண்ணாதேயும். 

திருச்சபை சொல்வதையெல்லாம் முழு மனதோடு விசுவசிக்கிறேன். என் நம்பிக்கை எல்லாம் ஆண்டவருக்குப் பின் உமது பேரில் வைக்கிறேன். 

உமது திருநாட்களையெல்லாம் உத்தம விதமாய் அனுசரிக்கிறேன். அற்பப் பாவத்தை முதலாய்க் கட்டிக் கொள்ள மனதில்லை. 

எந்நேரமும் உமது திருக்குமாரனும் எனது அன்புள்ள இரட்சகருமாயிருக்கிற சேசுநாதருக்கு பிரியப்படாமல் போவேனோ என்கிற பயமே யன்றி எனக்கு வேறே பயமில்லை . 

சுந்தரத் தாயே! உமது தஞ்சமென்று ஓடிவந்த என்னைத் தைரியமுள்ளவனாக்கி உலக காரியங்களில் நான் ஆழ்ந்து போகாமல் ஆனந்த ஞானக் கடலில் மூழ்க அனுக்கிரகம் பண்ணியருளும். 

ஆமென்.