“உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விசுவசிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.
நானே உயிர் தரும் உணவு.
பாலைவனத்தில் உங்கள் முன்னோர் மன்னாவை உண்டனர்; ஆயினும் இறந்தனர்.
ஆனால், நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்வுணவு வானினின்று இறங்கியது.
நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.
அருளப்பர் 6 : 47-51”
ஆண்டவரைத் தொட அனுமதிக்கப்பட்டவர்கள்.. யார்? யார் ?
முதலில் தேவ மாதா : தன் உதிரத்தில் தாங்கவும், தன் வயிற்றில் சுமக்கவும், தன் மடியில் தாங்கவும், அவருக்கு உணவு ஊட்டி பேணி வளர்க்கவும் இறுதியில் தன் மடியில் கல்வாரித் தாலாட்டுவரை அனுமதிக்கப்பட்ட நம் தேவ மாதா..
அடுத்து புனித சூசையப்பர் : தன் தோலில் சுமக்கவும், தன் மடியில் தாலாட்டவும், அவருக்கு உணவு ஊட்டவும், கரம் பிடித்து நடத்திச் செல்லவும், அவர் கரங்களைப் பிடித்து அவருக்கு தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுக்கவும் கடைசியில் இயேசுவின் மடியில் மரிக்கவும் அனுமதிக்கப்பட்டவர் புனித சூசையப்பர்..
அடுத்து ஆண்டவரை தங்களுடைய அர்ச்சிக்கப்பட்ட கரங்களால் சர்வ சாதாரணமாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளில் பலமுறை கூட தொட அனுமதிக்கப்பட்டவர்கள்.. குருக்கள்.. குருக்கள்.. குருக்கள் மட்டுமே..
தேவ மாதாவுக்கும், புனித சூசையப்பருக்கும் கொடுக்கப்பட்ட அதே உரிமை குருக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.. எவ்வளவு சிறப்பு.. எவ்வளவு பெருமை.. அதுவே கத்தோலிக்க திருச்சபைக்கு மணி மகுடம்.. குருத்துவத்தின் மேன்மை..
குழந்தை இயேசுவாக ஆண்டவரைத் தொட புனித அந்தோணியாருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது.. அவரும் குருவானவரே.. அவரும் அனுதினமும் ஆண்டவரைத் தொட அனுமதிக்கப்பட்டவரே..
பரிசுத்தத்தின் முழுமையை.. பரிசுத்தமானவரை.. பரிசுத்த கடவுளை அபிஷேகம் செய்யப்பட்ட, அர்ச்சிக்கப்பட்ட கரங்கள் தொடவேண்டுமா அல்லது யார் வேண்டுமானாலும் தொடலாமா?..
அர்ச்சிக்கப்படாத கரங்களை உடையவர்கள் ஒரே ஒரு முறை நம் நேச ஆண்டவரைத் தொட அனுமதிக்கப்பட்டார்கள்.. அதுவும் பாவிகள்.. எப்போது? கல்வாரி பயணத்தில் ஆண்டவரை அடித்தார்கள், உதைத்தார்கள், கண்ணத்தில் அறைந்தார்கள், சாட்டையால் அடிக்க ஆண்டவரை கல்தூணில் கட்டினார்கள், ஆண்டவருக்கு முள்முடியை சூட்டினார்கள், சிலுவையை சுமக்க வைத்தார்கள், ஆண்டவரின் கைகளையும், கால்கலையும் பிடித்து ஆண்டவரின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவரை சிலுவையில் அறைந்தார்கள்.. அதுவும் தொடுதல்தான்.. ஆனால் அந்த தொடுதலை ஆண்டவர் எப்படி உணர்ந்திருப்பார்..
இப்போதும் ஆண்டவரை அர்ச்சிக்கப்படாத எத்தனையோ கரங்கள் அனுதினமும் தொடுகின்றன..
ஆண்டவர் அதை எப்படி உணர்வாரோ.. சங்கடப்படுவாரோ.. நெளிவாரோ.. ஆனால் அப்படி தொடுகிறவர்கள் உணர்வார்களோ.. தங்கள் தகுதியை நினைத்து.. ஆண்டவரை நினைத்து..
“ அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே.. அன்புப்பாதையில் வழி நடந்தே அடியோன் வாழ்ந்திட துணை செய்வீர் “
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !