பரிசுத்த ஆவியின் ஒளியில் வாழும் பக்தியுள்ள நல்ல ஆன்மாக்களுக்களே!, பரலோகத்திலிருந்து நேரே வரும் இந்த தேவ இரகசிய ரோஜாச் செடியை உங்களுக்குக் கொடுக்கிறேன். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். இந்தச் செடியை உங்கள் ஆன்மா என்னும் தோட்டத்தில் நட வேண்டும். உங்கள் தேவ அன்பின் தியானம் என்னும் நறுமலர்களுக்கு இந்த ரோசாச் செடியினால் எவ்வித கேடும் நேரிட முடியாது. ஏனென்றால் இது பரலோகச் செடி அதன் வாசனை இனியது.
உங்கள் ஆன்மாவில் மிகக் கவனத்துடன் நீங்கள் ஒழுங்கு செய்திருக்கும் மலர்ப் பாத்திகளுக்கு ஒரு இடையூறும் இதனால் ஏற்படாது. ஏனென்றால் இந்தச் செடி தன்னிலே தூயதும் நல்ல ஒழுங்குடன் பண்பட்டதாக இருப்பதால் இது மற்ற யாவற்றையும் ஒழுங்குபடுத்து தூய்மைபடுத்தும் தன்மையுடையது. கவனமுடன் நீர் பாய்ச்சி தினமும் நல்லவிதமாய் இச்செடி கவனிக்கப்படுமானால், வியத்தகுமளவு உயரமாய் வளரும். இதன் கிளைகள் எவ்வளவு அகன்று விரியுமென்றால் மற்ற எந்த பக்தி முயற்சியையும் தடை செய்யாதிருப்பதோடு அவற்றை பாதுகாத்து பூரணமாக்கிவிடும்.
நீங்கள் ஞான நோக்குடன் இருப்பதால் நான் என்ன கருத்தில் இதைச் சொல்கிறேன் என்று நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். இந்த தேவ இரகசிய ரோஜாச் செடி எது? சேசுவும், மரியாயுமே, வாழ்விலும் இறப்பிலும் நித்தியத்திலும் அவர்கள் இந்த ரோசாச் செடியாய் இருக்கின்றார்கள்.
அதன் பச்சை இலைகள் : சந்தோச தேவ இரகசியங்கள்
அதன் முட்கள் : துக்க தேவ இரகசியங்கள்
அதன் மலர்கள் : மகிமை தேவ இரகசியங்கள்
அதன் மொட்டுகள் : சேசு, மரியாயின் பாலப்பருவம்,
அதன் விரியும் மொட்டுகள் : சேசு, மரியாயின் துன்பப்பாடுகள், விரிந்த மலர்கள் சேசு மரியாயின் வெற்றியும் மகிமையும்.
ரோஜா மலர் நம்மை மகிழ்விக்கின்றது. இதிலே சேசு மாமரி இவர்களுடைய வாழ்வின் சந்தோச நிகழ்ச்சிகளை காண்கின்றோம். ரோஜாவின் முட்கள் கூர்மையாகவும் குத்துவனவாகவும் இருக்கின்றன. இதிலே சேசு மாமரியின் வாழ்வின் துயர நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம். ரோஜாவின் வாசனை எல்லோரும் விரும்புமளவிற்கு இனிமையாக உள்ளது. இதிலே நாம் சேசு மாமரி வாழ்வின் மகிமையான நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம்.
நன்றி : மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்
ஜெபமாலை இரகசியம் நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், Ph :9094059059, 9790919203, காமராஜர்புரம், கிழக்கு தாம்பரம் அருகில், சென்னை.
ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை… நாள்தோறும் ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !