ஜெபம், தியானம்!

ஜெபம்

பூசைக்கு அடுத்து, ஜெபமாலை உத்தமமான ஆன்ம இரட்சணிய வழியாக இருக்கிறது. 

குறிப்பாக, பாவம் மலிந்து, எங்கும் பெருக்கெடுத்து, பெரும் வெள்ளத்தைப் போல ஆத்துமங்களை நரகத்திற்கு அடித்துச் செல்லும் இந்தக் காலத்தில், குற்றம் பெருகின இடத்தில் வரப் பிரசாதத்தை அதிகமாய்ப் பெருகச் செய்யும் (உரோ. 5:20) தேவ வல்லமையின் கருவியாக ஜெபமாலை நம் இனிய அன்னையால் நமக்குத் தரப்பட்டுள்ளது. 

அநுதினமும் ஜெபமாலையைக் கொண்டு தங்கள் திவ்விய அன்னையை வாழ்த்துகிறவர்கள், அதன் அதிசய வல்லமையைக் கண்டு வியக்கிறார்கள். 

அதன்முன் பசாசின் ஆயுதங்கள் செயலற்று வீழ்கின்றன. நரகத்தின் அடித்தளம் வரையும் ஜெபமாலை நடுக்கத்தைப் பாய்ச்சுகிறது. 

பக்தியோடும், தியானத்தோடும் அனுதினமும் ஜெபமாலை ஜெபிக்கிற ஒருவனை சோதிக்க முதலாய் பசாசு துணிவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

"நரகத்திற்கு எதிரான வலிமையுள்ள கேடயமாக இருக்கும் என் ஜெபமாலை தீய பழக்கங்களை அழிக்கும். பாவத்திலிருந்து விடுவிக்கும். தப்பறைகளை ஒழிக்கும்" என்பது ஜெபமாலைக்கான மாதாவின் பதினைந்து வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கிறது. 

ஆத்துமம் பாதுகாப்பாக மோட்சத்திற்கு ஏறிச்செல்வதற்கான ஏணி இந்த ஜெபமாலை.

"ஜெபிக்காத ஆத்துமம் உயிர்வாழ முடியாது" என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். 

"ஜெபிக்காமல் புண்ணிய வாழ்வு நடத்துவது இயலாது காரியம்" என்று அர்ச். கிறீசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார். 

ஜெபம் ஆத்துமத்தைக் கடவுளை நோக்கி உயர்த்துகிறது. அவரோடு அதை ஒன்றாகப் பிணைக்கிறது. 

மாம்சம் பலமற்றது, ஆகவே சோதனைகளை ஜெயிப்பதற்கு விழிப்பாயிருந்து ஜெபிப்பது அவசியமாயிருக்கிறது (மத். 26:41). 

ஆத்துமம் ஜெபத்தைக் கைவிடுவது அதன் நித்திய அழிவின் தப்பாத அடையாளமாயிருக்கிறது. 

ஆனால் ஜெபத்தில் நிலையாயிருக்கிற ஆத்துமத்தை நோக்கி சத்துருவால் எய்யப்படும் சோதனையின் அம்புகள் முனைமழுங்கி, பலமிழந்து விழுகின்றன.

தியானம்

சேசுநாதரின் மனிதாவதார நிகழ்ச்சிகளையும், விசேஷமாக அவருடைய பாடுகளையும், திருமரணத்தையும் தியானிக்கிற ஆத்துமம் அவரை உருகி நேசிக்கிறது. 

தன் பாவத்தை வெறுத்துப் பகைக்கிறது. தேவ சிநேகத்திற்காகத் தன்னைப் பலியாக்கவும் முன்வருகிறது. 

தியானிக்காத ஆத்துமம் பாழாய்ப் போகிறது. இதைப் பற்றியே தீர்க்கதரிசியானவர், "உலகமெல்லாம் பாழாய் அழிந்து கெட்டுப் போகின்றது, ஏனெனில் மனிதருக்குள் எவனும் தன் மனதில் ஆழ்ந்து யோசித்து தியானிக்கிறதில்லை " (எரே. 12:11) என்கிறார். 

எனவே தேவ காரியங்களை எப்போதும் தியானியுங்கள், அப்போது தேவசிநேகத்தின் வழியாக உங்கள் பாவங்களின் மீது வெற்றி கொள்வீர்கள். 

இதற்காகவே நம் மகா பரிசுத்த அன்னை ஜெபமும், தியானமும் ஒன்றுசேர்ந்த ஜெபமாலையை நமக்கு ஞான ஆயுதமாகத் தந்தார்கள்.