ஆரம்பத்தில் கடவுள்தானே மக்களை நேரடியாக ஆட்சி செய்தார்.. இறைவாக்கினர்களிடம் பேசி அவர்களை வழி நடத்தினார். மக்கள்தான் தங்கெளுக்கென அரசன் வேண்டும் என்று கேட்டார்கள்.. கடவுள் அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்.. ஒரு சிலர் கடவுளுக்கு பிரமானிக்கமாய் ஆட்சி செய்தார்கள்… சிலர் ஆட்சி வந்து பல ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார்கள்.. அதன் பின்பு நெறிபிழந்து மக்களை தவறாக வழி நடத்தினார்கள்.. இப்படி எண்ணற்ற அரசர்கள் ஆட்சி செய்தார்கள்.. அந்த ஆட்சிதான் இன்னும் தொடர்கிறது..
ஆனால் இன்று வரை எந்த ஆட்சியாளராலும், நாட்டுத்தலைவர்களாலும் கடவுளின் ஆட்சியை கொடுக்க முடியவே இல்லை.. ஏன்?
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கடவுளே சட்டதிட்டங்களையும், பத்து கட்டளைகளையும் இயற்றி கொடுத்தார்.. ஆனால் மனிதன் அதை காற்றில் பறக்க விட்டான்… ஒரு சிலர் சட்டத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு அலைந்தனர்.. மனித நேயத்தை விட்டுவிட்டனர்..
அதன் பின் பிதா வார்த்தையான சர்வேசுவரனையே.. தன்னுடைய ஒரே பேரான மகனையே இந்த உலகுக்காக அளித்தார்… அவரும் மக்கள் எப்படி வாழ வேண்டும்.. அதிலும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று கற்பித்தார்.. அதன் பின் தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தன் கடைசித்துளி இரத்தம் வரை சிந்தி மக்களை பாவத்திலிருந்து மீட்டார்.. மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று தன் வாழ்வையே பாடமாகத் தந்தார்… இறையாட்சி என்றால் என்ன என்று கற்றுக்கொடுத்தார்..
ஆதிக்கிறிஸ்தவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்றது.. எத்தனை குருதி ஆறுகள் ஓடினாலும் மக்கள் விசுவாசத்தில் தளரவில்லை… அலகையை எதிர்த்து நின்றார்கள்… பல வகைப் போராட்டங்களிலும், இன்னல்களிலும் உறுதியாக நின்று நம் உன்னத கடவுளுக்கு சாட்சியாய் நின்றார்கள்.. அச்சம் என்பதே அவர்களிடம் இருந்ததில்லை… நமக்கு எண்ணற்ற புனிதர்கள் கிடைத்தார்கள்… முதலில் வேதசாட்சிகள் அதன் பின் பலி ஆன்மாக்கள் என 1500 வருடங்கள் கிறிஸ்தவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்றது.. அதன் பின் பிரிவினைகள் பல வந்தாலும் கத்தோலிக்கத் திருச்சபை தன் விசுவாசத்தில் உறுதியாய் நின்றதால் மேலும் சிறிப்பாகவே நகன்றது… மேலும் நமக்கு எண்ணற்ற ஆண், பெண் புனிதர்கள் கிடைத்தார்கள்..
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டிலும்.. மீண்டும் மக்களின் பாவ வாழ்க்கை அதிகமானது… திருச்சபையிலும் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் போர்வையில் நவீனம் தலைதூக்க ஆரம்பித்தது.. கிறிஸ்தவ வாழ்க்கையில் மாற்றங்கள் வர ஆரம்பித்தது… பிதாவும் தன் பிரிய மகளும், சுதனாகிய சேசுவின் தாயும், பரிசுத்த ஆவியின் கன்னிமை குன்றா மணவாளியான பரிசுத்த தேவ மாதாவை உலகுக்கு அனுப்பி, பல இடங்களில் காட்சி கொடுக்க வைத்து, பெரிய பெரிய அற்புதங்களை அவர்களை செய்ய வைத்து உலகத்தை திருத்த எவ்வளவோ முயன்றார்.. நம் பரிசுத்த தேவமாதாவின் கூக்குரலுக்கு திருச்சபையும் (முழுமையாக இல்லை), கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் செவிசாய்க்கவில்லை… முக்கியமாக மாதாவின் வேண்டுதல்கள் வலியுறுத்தப்படவில்லை.. கடைப்பிடிக்க வைக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை..
விளைவு.. பாவம் மலிந்தது.. அது பெருகி ஆறாக அனைத்து நாடுகளிலும் ஓடியது..
21ம் நூற்றாண்டில் எல்லாவித தீமையும் உச்ச நிலைக்கு சென்றது….. ஓரினச்சேர்க்கை, கருக்கலைப்பு, குடும்பத்தில் ஒழுக்கமின்மை, மது, போதை என்று நாலாபுறமும் மேலும் பாவ ஆறுகள் ஓட ஆரம்பித்தது..
திருச்சபை நவீனத்தால் தள்ளாடியது.. ஆன்மீக வாழ்க்கை பக்தி குறைந்து கொண்டாட்டத்தில் மூழ்கியது..குடும்பங்களில் தனியார் சானல்களின் தலைதூக்குதல்களால் குடும்ப ஜெபமாலை நின்றே போனது.. அனுதின ஜெபமாலை அன்றாட திருப்பலி என்று வாழ்ந்த கத்தோலிக்கர் ஞாயிறு மட்டும் திருப்பலி.. பலர் பாதி திருப்பலி… தகுதியற்ற நிலை… சம்பிரதாய பங்கேற்பு என்று கத்தோலிக்க விசுவாச கட்டமைப்பு தளர்ச்சியை நோக்கி நகர்ந்தது…
மாதா 19, 20 ம் நூற்றாண்டுகளில் வலியுறுத்தி கேட்ட மக்களை செய்யச்சொல்லி கெஞ்சிய.. ஜெப தவம் பரிகாரம்.. இளைக்காரமாக மாறிப் போய்விட்டது… திவ்ய நற்கருணை ஆண்டவர் பக்தி, தேவ மாதா பக்தி, ஜெபமாலை பக்தியில் பெரிய தொய்வு, மரியாதையற்ற நிலமை..
இப்போது கொள்ளை நோய்… உலகத்தையே அச்சுறுத்துகிறது… யாரும் நிம்மதியாக இருப்பதாக உணர முடியவில்லை… ஒரு பாதுகாப்பற்ற சூழல் நம்மை சுற்றுகிறது… அச்சுறுத்துகிறது…இதே நிலை நீடித்தால் என்னவாகும்.. நம் குடும்பத்தின் நிலை என்ன.. பயம்… பயம்.. எங்கும் பயம்.. மனிதராகிய நாம் கடவுள் பயத்தை மறந்ததால்… உயிர்பயம் தொற்றிகொண்டு விட்டது…
இப்போது அவர்தான் காரணம், இவர்தான் காரணம், அதுதான் காரணம் என்று யாரையும் குற்றச்சாட்டு சொல்லிப்பயன் இல்லை..
காரணம் நாம்தான்.. நாமேதான்.. நாம்தான் உலகத்தை நேசித்தோம்… கடவுளை மறந்தோம்..
இப்போது என்ன செய்வது? எப்படித் தப்பிப்பது? எப்படி நம்மை பாதுகாப்பது? எப்படி நம் குடும்பத்தை பாதுகாப்பது? பராமரிப்பது? என்று பல கேள்விகள்.. குளப்பங்கள்.. ?
ஓரு வழி… ஒரே வழி… ஒருவரே வழி… அவர்தான் நம் கடவுள்… மூவொரு கடவுள்.. மூவுலகையும் ஆட்சி செய்யும் கடவுள்.. உலகம் முடியும் வரை நம்மோடு இருக்கும் கடவுள்… பிதா, சுதன், பரிசுத்த ஆவியான கடவுள்..
யாரையும் நம்பி பயன் இல்லை…எதையும் நம்பிப் பயன் இல்லை.. எந்த அரசாங்கத்தையும் நம்பி பயன் இல்லை.. இந்த வைரஸை பொறுத்த வரையில்.. கடவுளால் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும்..
அதற்கு நாம் நேரடி கடவுளின் ஆட்சிக்கு வந்துவிடுவதுதான் ஒரே வழி.. அரசாங்கம் சொல்லும் தடுப்பு பாதுகாப்பினை கடைப்பிடிப்போம்… ஆனால் கடவுளுடைய ஆட்சி, கடவுளுடைய பாதுகாப்பு, கடவுளுடைய துணையிருப்பு மட்டுமே இவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்…
ஆகையால்…
“கடவுளே கதி “ என்ற மன நிலைக்கு வந்து விடுவோம்..
படைத்தவர்தானே நம்மை பாதுகாக்க வேண்டும்… படைத்தவர்தானே நம்மை பராமரிக்க வேண்டும், படைத்தவர்தானே நமக்கு உணவளிக்க வேண்டும், படைத்தவர்தானே நம்மை உடுத்த வேண்டும்… ?
ஆகையால் கவலைகளையும், பயத்தையும் தூக்கி எறிவோம்.. நம் ஆண்டவரிடம் சரணாகதி அடைவோம்.. நம் இரட்சகராகிய இயேசு ஆண்டவரிடம் நம் முழு நம்பிக்கையை வைப்போம்… நம் பரிசுத்த தாயாரின் துணையை நாடுவோம்..
ஆனால் கடவுள் பாதுகாப்பு நமக்கு வேண்டுமென்றால்.. ஒரு முக்கியமான நிபந்தனை இருக்கிறது.. நாம் அவரின் சாயலாகவும், பாவனையாகவும் மாற வேண்டும்… பாவத்தை விட்டொழிக்க வேண்டும்.. பரிசுத்தத்தை மார்பு கவசமாக அணிய வேண்டும்… ஜெபத்தில் நிலைக்க வேண்டும்.. அதில் நீடித்து நிற்க வேண்டும்.. திவ்ய நற்கருணை ஆண்டவரை முழுவிசுவாசத்தோடும், மரியாதையோடும், பக்தியோடும் அன்பு செய்ய வேண்டும், தினமும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்…
முக்கியமாக நாம் நல்லவர்களாக வாழ வேண்டும்… நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.. பிறருக்கு கொடுக்க வேண்டும்..பிறரை நேசிக்க வேண்டும்..
ஆதிக்கிறிஸ்தவர்கள் போல் வாழவேண்டும்.. அஞ்சாமல் இயேசு என்னும் நாமத்தை இதயத்தில் தாங்கியவர்களாய். இதுவும் ஒரு வேதகலாபனைதான்.. இந்த வைரஸுக்கு மத்தியிலும் நம் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்… இந்த கஷ்ட்டத்திலும் அதற்கு பின்பும் முடிவில்லா வாழ்வு மோட்ச வாழ்வு உண்டு.. என்ற விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகர வேண்டும்.. எக்காரணம் கொண்டும் நரகத்திற்கு சென்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு பாவத்தையும், பாவ சந்தர்பத்தையும் தவிர்த்து வாழ வேண்டும்..
அதனால்.. அதனால்.. இறையாட்சி வரவேண்டும்.. அதற்கு நாம் உடனடியாக கடவுளின் நேரடி ஆட்சிக்குள் சென்று விட வேண்டும்.. அவரே நம்மை ஆட்சி செய்ய நம்மையும், நம் குடும்பத்தையும் கையளித்து விட வேண்டும்.. கொஞ்சம் சிந்தித்தால்.. செயல்படுத்தி விடலாம்..
அதுவே நமக்கும், நம் குடும்பத்திற்கும் பாதுகாப்பு…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !