அக்டோபர் மாதம் ஜெபமாலை மாதம். செபமாலை என்பது ஒரு குட்டி விவிலியம் அல்லது விவிலியத்தின் சுருக்கம் என்று சொல்வார்கள். ஜெபமாலை செபிப்பது
என்பது இயேசு கிறிஸ்துவினுடைய மறையுண்மைகளைத் தியானிப்பது. கடவுள் மீது நமக்குள்ள விசுவாசத்தைப் புதுப்பிப்பதும், கிறிஸ்துவின் மீது அன்பு செலுத்துவதும், அன்னை மரியாள் மீது அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்துவதுமாகும். இதன் வழியாக மீட்பு வரலாற்றில் நாம் பங்கெடுக்கின்றோம்.
கத்தோலிக்க திருச்சபை மறைக்கல்வி என்ற ஏட்டில் 971, 2678, 2708 ஆகிய எண்கள் மரியன்னைப் பற்றிய படிப்பினைகளை நாம் பின்பற்ற நமக்கு படிப்பிக்கின்றது. இவ்வெண்கள் அன்னை மரியாவின் மீதுள்ள பக்தியையும், அதனால் வரும் பலன்களையும், நமக்கு போதிக்கின்றன.
“ இதோ இந்நாள் முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுடையாள் எனப்போற்றிடுமே “ (லூக் 1:48)
என்ற மரியாயின் பாடலே மிகப் பெரிய சாட்சியாகும். காரணம் அன்னை மரியாள் இறைவனை நம்பினார். இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்தார். தன்னையே தாழ்த்திக் கொண்டார். அதனாலே கடவுள் அவரை எவ்வுயிர்க்கும் மேலாக உயர்த்தினார். எனவே அவர் மகிமையின் உச்சத்திற்கு உயர்த்தப்பெற்றார்.
ஒரு பெரியவர் இருந்தார். அவர் அதிகம் படிக்காதவர். அதிக நேரம் வீட்டிலும், ஆலயத்திலும் செபிப்பவர். அவர் செய்கின்ற ஒரே செபம் செபமாலை சொல்வது தான்.
✠ செபமாலையை வேகமாகச் சொல்லக் கூடாது.
✠ கடமைக்குச் சொல்லக்கூடாது மாறாக நிறுத்தி, பொருளுணர்ந்து சொல்ல வேண்டும்.
அப்போதுதான் அதற்கு நிறைந்த பலன் கிடைக்கும் என்று அடிக்கடி தன் நண்பர்களிடம் கூறுவார். அவர் வாழ்வில் சந்தித்த அனைத்து துன்பங்களையும், எதிர்கொள்ள சக்தியாகவும், துணையாகவும் இருந்தது இந்த செபமாலைதான் என்று கூறி பலரையும் செபிக்கத் தூண்டுவார். செபமாலை சொல்வது எளிதானது. இனிதானது சக்தி வாய்ந்தது என்பதுதான் இவரது விசுவாச அனுபவம். கத்தோலிக்க விசுவாசம் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையோடு சேர்ந்து அன்னை மரியாவின் வாழ்வோடு பணியோடு இணைந்தது.
தாயின் மீது உள்ள அன்பையும், மரியாதையையும் காட்டத்தான் அவருக்கு நவநாட்கள் செபங்கள், திருவிழாக்கள் என்பன எல்லாம் நடக்கின்றன. இவைகளில் எல்லோராலும் விரும்பி அடிக்கடி தனியாகவும், குடும்பமாகவும், குழுவாகவும் சொல்லுகின்ற செபம்தான் ஜெபமாலை. இந்த ஜெபமாலை பொருள் உணர்ந்து விவிலியத்தோடு இணைந்து செபிக்கவேண்டும். அப்போது இறைவனின் பிரசன்னத்தை உணர முடிகிறது. இதன் வழி அவரது அருளையும், ஆறுதலையும் நாம் பெறுகின்றோம். ஆகவே தினமும் செபமாலையை செபிப்போம். அன்னை மரியாவோடு இணைந்து இறைவனின் திருப்பாதத்தை அடைவோம்.
நன்றி : Christian gate
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !