நரக நெருப்பு இவ்வுலக நெருப்பைப் போன்றதல்ல என்று சொல்லப்படுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன.
1. இவ்வுலக நெருப்பு மனிதனுக்கு உஷ்ணமும், இன்னும் பல நன்மைகளும் தருவதற்காக சர்வேசுரனால் படைக்கப்பட்டிருக்க, நரக நெருப்போ கெட்டுப்போன, அகங்காரமுள்ள பசாசுக்களைத் தண்டிக்கும் ஒரே நோக்கத் துடன் உண்டாக்கப்பட்டது. ஆண்டவரின் கடுஞ்சினமே அதை அகோரமாகத் தொடர்ந்து பற்றியெரியச் செய்கிறது.
“நெடுநாள் முன்னதாகவே தோபெத் என்னும் பாதாளம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பரலோக அரசரால் ஆழமாகவும், விசாலமாகவும் அது ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதாகும். அதன் உபகரணங்கள் அக்கினியும், மரக் குவியலுமே. ஆண்டவருடைய ஆவியானது அதைப் பற்றுவிக்கும் கந்தக வெள்ளம் போலாம்” (இசை.30:33).
2. இவ்வுலக நெருப்பு சடப்பொருட்களை மட்டுமே எரிக்கக் கூடியதாயிருக்க, நரக நெருப்போ உருவமற்ற அரூபிகளான பசாசுக்களையும், ஆத்துமங்களையும் கொடூரமாய் எரித்து வாதிக்கிறது.
“மிகுந்த பயங்கரத்துக்குரிய உண்மை என்னவென்றால், தெய்வீக வல்லமையால் இந்த நெருப்பு ஆத்துமத்தின் சத்துவங்களைக் கூட கொடூரமாக சித்திரவதை செய்யும் அளவுக்குப் போகிறது. ஒருவன் கொல்லுப்பட்டறையின் சூளையின்மீது ஒரு கரம் மட்டும் இருக்க, உடலின் மற்ற பாகங்கள் வெளியே இருக்கும்படி வைக்கப்படுகிறான்.
இந்த நிலையில் கடவுள் அவனை ஓராயிரம் ஆண்டுகள் உயிர் வாழச் செய்கிறார் என்றால், இது நினைக்கவே பயங்கரமான, குலைநடுங்கச் செய்கிற, தாங்க முடியாத சித்திரவதையாக இருக்காதா? அப்படியானால், ஒரு கை மட்டுமின்றி, உடல் முழுவதும், ஏன் ஆன்மாவின் சத்துவங்களும் கூட, கொடூரமாய்ப் பற்றியெரியும் கந்தக அக்கினிக்குள் நித்தியத்திற்கும் மூழ்கியிருப்பதைப் பற்றி என்ன சொல்வது!” என்று அர்ச். அந்தோனி மரீக்ளாரெட் கூறுகிறார்.
3. இவ்வுலக நெருப்பு தனக்கு இரையாகும் எதையும் எரித்து சாம்பலாக்கி விடுகிறது. நரக நெருப்போ பயங்கரமாக வாதிப்பதை மட்டுமே தன் குணமாகக் கொண்டுள்ளது. அது பசாசுக்களையோ, ஆன்மாக்களையோ கொல்வதில்லை.
4. இவ்வுலக நெருப்பு வெப்பத்தோடு ஒளியையும் வெளியிடுவதாக இருக்க, நரக நெருப்பு காரிருளால் நிரம்பி யுள்ளது. அது சுடர் வீசுவதில்லை .
அர்ச். அந்தோனி மரீ க்ளாரெட் கூறுவதைக் கேட்போம்: “இயற்கையான நெருப்பு சுட்டெரிக்கவும், வாதிக்கவும் பெரும் வல்லமை கொண்டுள்ளது. ஆனால் அது நரக நெருப்பின் ஒரு நிழல் மட்டுமே. இயற்கையான நெருப்பைவிட, ஒப்பிட முடியாத அளவுக்கு நரக நெருப்பு அளவற்ற பயங்கரமுள்ளதாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:
முதலாவது காரணம் கடவுளின் நீதி. நரக நெருப்பு இந்த நீதியின் கருவியாக இருந்து, கடவுளின் உன்னத மகத்துவத்திற்கு எதிராகச் செய்யப்பட்ட அளவற்ற தீமைகளைத் தண்டிக்கிறது. ஆகவே தேவ நீதியானது இந்த நெருப்புக்கு ஓர் அளவற்ற சுட்டெரிக்கும் வல்லமையைத் தருகிறது.
இரண்டாவது காரணம்: பாவத்தின் கொடிய தன்மை. இவ்வுலக நெருப்பு பாவத்தை அதற்குத் தகுதியான விதத்தில் தண்டிக்கப் போதுமானதல்ல என்பதை அறிந்திருக்கிற சர்வேசுரன் எந்த மனித மனத்தாலும் ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாத வகையில் நரக நெருப்பை உண்டாக்கி, ஒரு பயங்கர வல்லமையை அதற்குத் தந்திருக்கிறார்.