ஏதோ தவறுதலாக உங்கள் மனச்சாட்சி பாவத்தால் பளுவுற்றிருந்தால், உங்கள் ஜெபமாலையை எடுங்கள். அதில் ஒரு பகுதியையாவது சொல்லுங்கள். சொல்லும்போது நமதாண்டவரின் வாழ்வு, பாடுகள், மகிமை இவற்றின் தேவ இரகசியங்களை சிந்தியுங்கள்
ஜெபமாலை வெற்றியின் மாலை - 20 : நாம் பரலோக மந்திரத்தை ஜெபிக்கும் போது நித்திய பிதா அதைக் கேட்கிறார் என்ற நிச்சயத்தோடு ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் அது, இறைவன் எப்போதும் செவிமடுக்கின்ற அவரது திருக்குமாரனின் ஜெபம். நாமோ அவருடைய அங்கங்களாயிருக்கிறோம்.
பரலோக மந்திரத்தை ஜெபித்து நாம் கேட்கின்ற மன்றாட்டுகளை இறைவன் திட்டமாக நமக்கு அருள்வார். ஏனென்றால் இத்தகைய நல்ல பிதா இத்தனை தகுதியுள்ள தம் குமாரனின் சொந்த வார்த்தைகளால் செய்யப்படுகிறதும், அவருடைய பேறுபலன்களால் வலிமை பெற்றதும், அவருடைய பெயரால் செய்யப்படுகிறதுமாகிய மன்றாட்டை மறுப்பார் என்று நினைக்க முடியாது.
கர்த்தர் கற்பித்த ஜெபத்தை நாம் பற்றுதலுடன் சொல்லும்போதெல்லாம் நம் அற்பப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று அர்ச்.அகுஸ்தின் கூறுகிறார். நீதிமான் ஒரு நாளில் ஏழு முறை தவறுகிறான். ஆனால் அவன் பரலோக மந்திரத்தில் ஏழு விண்ணபங்களைக் காண்கிறான். இவை அவன் தவறி விழாதிருக்கும்படி அவனைத் தடுக்கின்றன. அவனுடைய ஆன்ம எதிரிகளிடமிருந்து அவனைப் பாதுகாக்கின்றன என்பதையும் உணர்கிறான்.
நாம் எவ்வளவு பலமற்றவர்கள் என்றும், எத்தனை இடையூறுகளில் சிக்குகிறோம் என்றும் அறிந்த நம் ஆண்டவர், தாம் கற்பித்த இந்த ஜெபத்தை சொவதற்கு எளிதாகவும் சுருக்கமாகவும் இயற்றி, நாம் அதைப் பக்தியுடனும் அடிக்கடியும் சொல்வோமானால் எல்லாம் வல்ல இறைவன் விரைவாக நம் உதவிக்கு வருவார் என்பதில் நிச்சயமாயிருக்குமாறு செய்துள்ளார்.
தேவ குமாரனே நமக்கு கற்றுத் தந்து ஜெபிக்கும்படி கூறிய பரலோக மந்திரத்தில் கவனஞ்செலுத்தாத பக்தியுள்ள மக்களுக்கு ஒன்று நான் கூற விரும்புகிறேன். “ நீங்கள் உங்கள் கருத்தை உடனே திருத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் மனிதனால் இயற்றப்பட்ட ஜெபங்களைத்தான் விரும்புகிறீர்கள். உலகத்தில் ஞான உணர்வு பெற்ற எந்த மனிதனும் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று ஆண்டவரான சேசு கிறீஸ்துவை விட அதிகம் அறிந்திருக்க முடியும் என்பது போலல்லவா நீங்கள் நினைக்கிறீர்கள்.
மனிதரால் எழுதப்பட்ட புத்தகங்களில் நீங்கள் ஜெபங்களைத் தேடுகிறீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால் நம் ஆண்டவர் சொல்லித் தந்த ஜெபத்தைக் கண்டு நீங்கள் கொஞ்சம் வெட்கப்படுவது போலல்லவா தோன்றுகிறது.
இப்படி மனிதரால் எழுதப்பட்ட ஜெபங்கள் கற்றவர்களுக்கும், உயர்குல செல்வந்தவர்களுக்கும் உரியதென்றும் ஜெபமாலையோ பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், தாழ்ந்தவர்களுக்கும்தான் உரியது என்றும் நீங்கள் எப்படியோ உங்களுக்கே நிச்சயித்துவிட்டீர்கள்…
நன்றி : நம் மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்
“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “
ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !