சிலுவை அடையாளம்

2. கிறீஸ்தவன் எனக் காட்டும் வெளி அடையாளம் என்ன?

சிலுவை அடையாளம்.

1. கிறீஸ்தவன் எனக் காட்டும் வெளி அடையாளம் உண்டா?

அஞ்ஞானிகள் தாங்கள் இன்ன மார்க்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்று காண்பிக்கிறதற்கு தங்கள் மதத்திற்குரிய அடையாளத்தை நெற்றியிலேயும் சரீரத்திலேயும் போட்டுக் கொண்டு வருவார்கள். அப்படியே கிறீஸ்தவர்களுக்கு ஒரு விசேஷமான வெளி அடையாளம் உண்டு. அந்த அடையாளமே சிலுவை அடையாளம். ஏனென்றால், சிலுவை அடையாளம் கிறீஸ்தவர்கள் மெய்யான சர்வேசுரனுடைய பிள்ளைகள் என்று காட்டுகிறது.

2. சிலுவை அடையாளத்தை வெளி அடையாளம் என்று சொல்லுவானேன்?

ஏனெனில், இது கிறீஸ்தவன் என்று வெளித் தோற்றத்தில் மாத்திரம் காட்டும். ஞானஸ்நானத்தால் ஆத்துமத்தில் பதிக்கப் படும் தெய்வீக முத்திரையானது உள் அடையாளமாம்.

3. சிலுவை அடையாளம் எப்படி கிறீஸ்தவனுடைய வெளி அடையாளமாயிருக்கிறது?

கிறீஸ்து வேதத்தின் பிரதான பரம இரகசியங்களை இந்தச் சிலுவை அடையாளத்தால் பகிரங்கமாய் வெளிப்படுத்தி, சிலுவையில் மரித்து நம்மை இரட்சித்த சேசுநாதருடைய சீடர்களாயிருக்கிறோமென்று காட்டுகிறோம்.

4. பரம இரகசியம் என்றால் என்ன?

சர்வேசுரனால் அறிவிக்கப்பட்டதும், மனிதன் தன் சொந்தப் புத்தி அறிவைக் கொண்டு ஒருபோதும், மோட்சத்திலே முதலாய், சரிவர கண்டுபிடிக்க முடியாததுமான வேதசத்தியமே பரம இரகசியமாம்.

5. கிறீஸ்தவ வேதத்தின் பிரதான பரம இரகசியங்கள் எவை?

(1) அர்ச். தமதிரித்துவத்தின் பரம இரகசியம்.

(2) சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரத்தின் பரம இரகசியம்.

(3) மனித இரட்சணியத்தின் பரம இரகசியம்.

6. இம்மூன்று பரம இரகசியங்களையும் சிலுவை அடையாளம் எப்படி வெளிப்படுத்துகிறது?

(1) சிலுவை மந்திரத்தின் வார்த்தைகள் அர்ச். தமதிரித் துவத்தின் பரம இரகசியத்தைக் குறித்துக் காண்பிக்கின்றன.

(2) நாம் வரைந்து கொள்ளும் சிலுவை அடையாளமோ சுதனாகிய சர்வேசுரன் மனிதனாகப் பிறந்து சிலுவையில் அறை யுண்டு மனிதரை இரட்சித்த சத்தியத்தை வெளிப்படுத்துகிறது.


3. சிலுவை அடையாளம் வரை.

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிட மிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா! பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துவினுடையவும் நாமத்தினாலே. ஆமென்.

1. அர்ச்சியசிஷ்ட என்கிற வார்த்தைக்கு அர்த்தமென்ன?

வணக்கத்துக்குரிய (மேன்மைக்குரிய) என்று அர்த்தமாகும்.

2. சிலுவை என்பது எது?

நம்மை இரட்சிக்கிறதற்காக சேசுநாதர் சுவாமி அறையுண்ட மரமாம்.

3. சேசுநாதருடைய சிலுவையை அர்ச்சியசிஷ்ட சிலுவை என்று சொல்வது ஏன்?

சேசுநாதர் சிலுவையில் அறையுண்டு அதில் மரணமான படியால் அதை அர்ச்சியசிஷ்ட சிலுவை என்கிறோம்.

4. அடையாளம் என்றால் என்ன?

குறித்துக் காட்டுதல்.

5. சத்துரு என்றால் யார்?

ஒருவனுடைய பகையாளி அல்லது விரோதியே அவனுடைய சத்துரு.

6. இவ்விடத்தில் சத்துருக்கள் என்னும் வார்த்தையால் குறிக்கப் பட்டவர்கள் யார்?

உலகம், பசாசு, சரீரம் ஆகிய இம்மூன்றுமே மனிதனுடைய பகையாளிகள்.

7. எங்களை இரட்சித்தருளும் என்பதற்கு அர்த்தம் என்ன?

எங்களை மீட்டுக் காப்பாற்றியருளும் என்று அர்த்தமாம்.

8. சர்வேசுரன் என்றால் யார்?

சர்வத்துக்கும் கர்த்தாவான ஆண்டவரே சர்வேசுரன்.

9. பிதா என்னும் வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

தகப்பன் என்பது அர்த்தம்.

10. சுதன் என்பதற்கு அர்த்தம் என்ன?

குமாரன், மகன் என்று அர்த்தம்.

11. இஸ்பிரீத்துசாந்து என்னும் வார்த்தைக்கு அர்த்தமென்ன?

இலத்தீன் மொழியில் இஸ்பிரீத்துசாந்து என்கிற வார்த்தைக்கு பரிசுத்த ஆவி என்று அர்த்தமாம்.

12. நாமத்தினாலே என்றால் என்ன?

பெயரால் மன்றாடுகிறோம் என்று அர்த்தமாகும்.

13. ஆமென் என்பதற்கு அர்த்தம் என்ன?

யூத பாஷையில் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம்.

14. சிலுவை அடையாளத்தை வரைவதெப்படி?

இடது கையின் விரல்களை ஒன்றாகச் சேர்த்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, வலது கையின் பெருவிரலால் நெற்றி யிலும், வாயிலும், மார்பிலும் சிலுவை வரைந்து கொண்டு, கடைசி யிலே எல்லா விரல்களையும் நீட்டி ஒன்றுசேர்த்து, நெற்றியையும், நடு மார்பையும், இடது தோளையும், வலது தோளையும் தொட்டு பெரிய சிலுவை போட்டுக் கொள்ள வேண்டும்.

வலது கை பெருவிரலால் நெற்றியில் சிலுவை அடையா ளத்தை வரைந்து கொள்ளும்போது: அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே என்றும், வாயில்: எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் என்றும், மார்பில்: எங்கள் சர்வேசுரா என்றும் சொல்லியபின், மற்ற விரல்களை நீட்டி ஒன்றுசேர்த்து நெற்றியைத் தொட்டு, பிதாவுடையவும் என்றும், மார்பின் அடிப்பாகத்தைத் தொட்டு, சுதனுடையவும் என்றும் இடது தோளைத் தொட்டு இஸ்பிரீத்து என்றும், வலது தோளைத் தொட்டு சாந்துவினுடையவும் என்றும் சொல்லி, பிறகு இரண்டு கைகளையும் மார்பின்முன் குவித்து நாமத்தினாலே, ஆமென் என்றும் சொல்லி முடிக்க வேண்டும்.

15. நெற்றியில் சிலுவை ஏன் போட்டுக் கொள்கிறோம்?

(1) வேதத்தைக் குறித்து மனிதருக்கு முன்பாக வெட்கப் படுகிறதில்லையென்று காட்டும்படிக்கும்,

(2) ஆங்காரம், கோபம், மோகம் முதலியவைகளைப் பற்றிய கெட்ட நினைவுகள் நம் புத்தியில் உண்டாகாமல், சர்வேசுரனைப் பறறிய நல்ல எண்ணங்கள் நமது புத்தியில் ஏற்படும்படிக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து கொள்ளுகிறோம்.

16. வாயில் சிலுவை வரைந்து கொள்வானேன்?

(1) வேதத்திற்கு தைரியத்தோடு சாட்சியம் சொல்லுவேன் என்று காட்டவும்,

(2) வாயால் பொய் புரட்டு, கோள் குண்டணி, தீய பேச்சு முதலிய பாவங்களைக் கட்டிக் கொள்ளாமல், செபத்தாலும், யோக்கியமான வார்த்தைகளாலும் சர்வேசுரனைத் தோத்தரிக்கும் படிக்கான ஆசீர்வாதம் நமக்கு உண்டாகும்படிக்கும் வாயில் சிலுவை வரைந்து கொள்ளுகிறோம்.

17. மார்பில் ஏன் சிலுவை போட்டுக் கொள்கிறோம்?

(1) மன உறுதியோடு வேதத்தை அனுசரிப்போம் என்று காட்டவும், 

(2) நமது இருதயத்தில் கெட்ட ஆசை, பகை, வைராக்கியம் முதலிய பாவங்கள் உண்டாகாமல், சர்வேசுரனுடைய சிநேகம் நமக்குள் அதிகரிக்கும்படியாகவும், மார்பில் சிலுவை வரைந்து கொள்ளுகிறோம்.

18. கடைசியாய் உடலின்மேல் போடும் பெரிய சிலுவை எதற்கு?

சர்வேசுரனே நமக்குக் கொடுத்த சரீரத்தால் நாம் அவருக்கு விரோதமாய்ப் பாவத்தைக் கட்டிக் கொள்ளாமல், அவருடைய கட்டளைப்படி நடப்பதற்கான உதவி நமக்கு உண்டாகும்படி நமது சரீரத்தின்மேல் சிலுவை போட்டுக்கொள்ளுகிறோம்.

19. சிலுவை வரையும்போது நாம் எதை ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறோம்?

முன் சொன்னபடி, பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவாகிய தமதிரித்துவத்தையும், சுதனாகிய சர்வேசுரனுடைய மனித அவதாரத் தையும், மனித இரட்சணியத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

20. தமத்திரித்துவப் பரம இரகசியத்தை நாம் ஞாபகப் படுத்துவதெப்படி?

பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்து வுடையவும் நாமத்தினாலே என்று சொல்லும்போது தேவ சுபாவத்தில் ஒருவராயிருக்கிற சர்வேசுரன் ஆள்வகையில் மூவரா யிருக்கிறாரென்று ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறோம்.

21. சிலுவையடையாளத்தால் சுதனாகிய சர்வேசுரனுடைய மனித அவதாரத்தையும், மனித இரட்சணியத்தையும் எப்படி ஞாபகப்படுத்திக் கொள்ளுகிறோம்?

சிலுவை வரையும்போது சுதனாகிய சர்வேசுரன் சேசு கிறீஸ்துநாதர் மனுஷ அவதாரமெடுத்து நமக்காகச் சிலுவையில் அறையுண்டு மரித்தாரென்று ஞாபகப்படுத்திக்கொள்ளுகிறோம்.

22. சிலுவை வரைந்துகொள்ளும் வழக்கம் எப்போது ஆரம்பமானது?

இவ்வழக்கம் அப்போஸ்தலர்கள் காலத்தில் ஆரம்பமானது. சுவிசேஷகரான அர்ச். அருளப்பர் சாகிறதற்கு முன் தமதுபேரில் சிலுவை வரைந்து கொண்டாரென்று நிசேபோரூஸ் என்பவர் எழுதியிருக்கிறார். அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரும் சிலுவை அடையாளத்தால் குருடருக்குப் பார்வை கொடுத் தாரென்று இல்துயின் என்பவர் எழுதி வைத்திருக்கிறார்.

23. ஆதிக் கிறீஸ்தவர்கள் சிலுவை போட்டுக் கொண்டார்களோ?

கி.பி. 211ம் வருஷத்தில் இருந்த பேர்பெற்ற சாஸ்திரி யான தெர்தூலியான் என்பவர் எழுதிவைத்திருக்கிறதாவது: “நாங்கள் வெளியே போகும்போதும், உள்ளே பிரவேசிக்கும் போதும் யாதொரு காரியத்தைத் தொடங்கும்போதும், எவ்விடத் திலும், எப்பேர்ப்பட்ட சமயத்திலும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுகிறோம்.” 

24. இப்போது தேவ ஆராதனை நேரத்திலும், மற்ற சமயங்களிலும் திருச்சபை சிலுவை அடையாளம் போடும் வழக்கத்தை அனுசரித்து வருகிறதா?

அனுசரித்து வருகிறது. பூசை நேரத்தில் குருவானவர் 50 விசை சிலுவை போடுகிறார். யாதொன்றை மந்திரிக்கும்போதும் அதன்மேல் சிலுவை அடையாளம் போடுகிறார். தேவத் திரவிய அனுமானங்களை நிறைவேற்றும்போதும் பல தடவை சிலுவை போடுகிறார். உதாரணமாக ஞானஸ்நானம் கொடுக்கும்போது 14 விசை, அவஸ்தைப் பூசுதலிலே 17 விசை. இன்னும் மற்றுமுள்ள திருச்சபையின் எல்லாப் பரிசுத்த சடங்குகளிலும் குருவானவர் சிலுவை அடையாளத்தை உபயோகித்து வருகிறார்.

25. நமதுபேரில் சிலுவையை அடிக்கடி வரைந்து கொள்ளுவது நல்லதா?

பக்தியோடு சிலுவை வரைந்துகொள்ளுதல் நமது உள் விசுவாசத்தின் வெளி அடையாளம் ஆனதால், நமது விசுவாசத் தைத் தூண்டவும், முகத்தாட்சணியத்தை வெல்லவும், பசாசையும் அதன் தந்திர சோதனைகளையும் துரத்தவும், பாவ சமயங்களை அகற்றவும், சர்வேசுரனிடமிருந்து மற்ற வரப்பிரசாதங்களை அடையவும் சக்தியுள்ளதாயிருக்கிறது.

26. சிலுவை வரைவதால் ஆத்துமத்துக்கு உண்டாகும் நன்மைகள் எவை?

பக்தியோடு சிலுவை வரைந்து கொள்ளுதல் நமது உள் விசுவாசத்தின் வெளி அடையாளம் ஆனதால், நமது விசுவாசத் தைத் தூண்டவும், முகத்தாட்சணியத்தை வெல்லவும், பசாசையும் அதின் தந்திர சோதனைகளையும் துரத்தவும், பாவ சமயங்களை அகற்றவும், சர்வேசுரனிடமிருந்து மற்ற வரப்பிரசாதங்களை அடையவும் சக்தியுள்ளதாயிருக்கிறது.

சரித்திரம்

அர்ச். பெரிய அந்தோணியார் மலையில் ஒதுங்கித் தவம் புரிந்து வந்த காலத்தில், பசாசானது பல உருவங்கள் எடுத்து அவரைப் பயமுறுத்தி உபாதைப் படுத்தி, அவலட்சணமான தந்திர சோதனைகளை அவருக்கு வருவித்த போதும், அவர் சிலுவை அடையாளத்தால் அவைகளைத் துரத்துவார். “பசாசு ஜெபத்துக்கும், சேசு கிறீஸ்துநாதருக்கும் பயப்படுகிறது; சிலுவை அடையாளத்தால் அது மிரண்டோடும்” என்று இந்த மகாத்துமா தமது சீஷர்களுக்குச் சொல்லி வருவார். (னி.மூ.னி.ணூ. ஹிலி.8).

27. சிலுவை அடையாளத்தால் சரீரத்துக்கு உண்டாகும் நன்மை என்ன?

விசுவாசத்தோடும், பக்தியோடும் சிலுவை வரைவதால் வியாதிகள் குணப்பட்டன; பலமுறை சரீர ஆபத்துக்கள் நீக்கப் பட்டன. அர்ச். லவுரேஞ்சியார் ஒரு குருடன்மேல் சிலுவை யடையாளத்தை வரைந்த மாத்திரத்தில் அந்த மனிதனுக்குப் பார்வை உண்டானது.

சரித்திரம்

அர்ச். ஆசீர்வாதப்பர் ஒரு மலைக்கெபியில் ஒதுங்கிக் கடின தவம் செய்து கொண்டிருக்கும் காலத்தில், ஒருநாள் ஒரு சந்நியாச மடத்தைச் சந்திக்கப் போனார். அம்மடத்துச் சிரேஷ்டர் (அதிபர்) இறந்து போயிருந்தபடியால் அம்மடத்தார் அவரைச் சிரேஷ்டராகத் தெரிந்து கொண்டார்கள். தங்கள் மடத்தில் ஒழுங்குப்படி சரியாய் நடக்க இவர்களுக்கு இவர் இடைவிடாமல் புத்தி சொல்லிக் கொண்டு வந்ததைப் பற்றி, அம்மடத்தாரில் சிலர் சலிப்படைந்து, அவரைக் கொல்லத் தீர்மானித்து, அவருடைய பானபாத்திரத்தில் நஞ்சு கலந்து அவருக்குக் கொடுத்தார்கள். ஆசீர்வாதப்பர் புசித்தாலும், பானம் பண்ணினாலும் சிலுவை போட்டுக் கொள்வார். அப்படியே அவர் நஞ்சு கலந்த பான பாத்திரத்தின் மீது சிலுவை அடையாளம் வரையவே, நஞ்சிட்ட பாத்திரம் உடைந்து கீழே விழுந்தது. இவ்வற்புதத்தைக் கண்ட அந்தத் தீயவர்கள், ஆசீர்வாதப்பர் பாதத்தில் விழுந்து, தங்களுடைய பெரும் பாவத்தை அவருக்குத் தெரியப்படுத்தி மன்னிப்புக் கேட்டார்கள். (னி.மூ.னி.ணூ. ஹிலி.10).

28. சிலுவை வரைவதற்கு திருச்சபை ஏதாவது பலன் அளித் திருக்கிறதா?

அர்ச். சிலுவை அடையாளத்தை நமதுபேரில் பக்தி வணக்கத்துடன் வரைந்துகொள்ளும்போதெல்லாம் ஐம்பது நாட் பலனும், தீர்த்தத்தோடு வரைந்து சொன்னால் நூறு நாள் பலனும் நாம் அடைந்து கொள்ளக்கூடும்.

29. சிலுவையானது எப்போதாகிலும் புதுமையாகக் காணப் பட்டதுண்டா?

சுமார் கி.பி. 303ம் வருஷத்தில் கொன்ஸ்தாந்தின் என்னும் அரசர் தன் எதிரிகளுக்கு விரோதமாய் உரோமையில் சண்டை செய்யப் போனபோது, ஒரு மத்தியான வேளையில் ஆகாயத்தில் பிரகாசமான ஒரு சிலுவையும், அதன் மத்தியில் “இதனால் நீ வெற்றியடைவாய்” என்னும் வாக்கியமும் எழுதப்பட்ட விதமாய்க் காணப்பட்டது. அன்று இராத்திரி நித்திரையில் அரசருக்கு நம் திவ்விய கர்த்தர் சிலுவை அடையாளத்துடன் காணப்பட்டு, ஒரு சிலுவைக் கொடியைச் செய்விக்கவும், மறுநாள் போர் செய்யும்போது அதைப் படைக்குமுன் கொண்டு போகவும் கற்பித்தார். விழித்தபின் அரசர் தன் தரிசனையில் கண்டபடி ஒரு சிலுவைக் கொடியைச் செய்வித்துப் போர் செய்தபோது அதிசய மான வெற்றி பெற்றார்.

இப்பேர்ப்பட்ட வெற்றி கிறீஸ்தவர்களுடைய தேவனால் உண்டானதென்று நிச்சயித்து, கிறீஸ்தவர்களுக்கு விரோதமாய் வரையப்பட்ட வேதகலக சட்டத்தை ரத்து செய்து, பேய்க் கோவில் களைத் தகர்த்துச் சத்திய வேத தேவாலயங்களைக் கட்ட கற்பித் ததுடன் சிலகாலத்துக்குப் பின் அரசர் சத்திய வேதத்தில் சேர்ந்தார். (னி.மூ.னி.ணூ. ஹிலி.11).

சில வருடங்களுக்குப் பிறகு சூரியனை விட அதிக பிரகாச முள்ள ஒரு சிலுவை ஆகாயத்தில் காணப்பட்டதென்று ஜெருசலேம் பட்டணத்து மேற்றிராணியாரான அர்ச். சிரிலுடைய சரித்திரத்தில் வாசித்துப் பார்க்கலாம்.

30. இனிமேலும் ஆகாயத்தில் சிலுவை காணப்படுமா?

உலக முடிவில் சேசுநாதர் சுவாமி மனிதரை நடுத்தீர்க்க வரும்போது, அவருடைய அடையாளமாகிய திருச்சிலுவை மேகத் தில் காணப்படும் என்று அவரே சொல்லியிருக்கிறார் (மத்.24:30).

----------

4. சிலுவை அடையாளத்தை எந்தச் சமயத்தில் வரைய வேண்டும்?

நல்ல கிறீஸ்தவன் நித்திரைக்கு முன்னும் பின்னும், சாப்பிடும் முன்னும் பின்னும், பிரதான வேலை ஆரம்பிக்கும் போதும், ஆபத்து, சோதனை முதலிய சமயங்களிலும் சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

----------

இன்னும் வேறு எந்தச் சமயங்களிலே சிலுவை வரைய வேண்டும்?

கோவில் மணிச்சத்தம் கேட்கும்போதும், கோவிலிலே பிரவேசிக்கும்போதும், செபத்துக்கு முன்னும் பின்னும், சரீர ஆபத்து நேரிடும்போதும் சிலுவை போட்டுக்கொள்ள வேண்டும்.