பக்தியுள்ள ஆன்மாக்களே! நீங்கள் வெளியே போய்விடலாம். இந்தப் பிரசங்கம் உங்களுக்கானது அல்ல. இதன் ஒரே நோக்கம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்க விரும்பாதவர்களின் ஆணவத்தை அடக்குவது மட்டுமே. இவர்கள் பரிசுத்தமான தெய்வ பயத்தை தங்கள் இருதயத்திலிருந்து வெளியேற்றி விட்டு, ஆத்துமங்களுக்கு போலியான உறுதிப்பாட்டைத் தருவதன் மூலம் சாத்தானோடு சேர்ந்து அவர்களை நரகத் தீர்ப்படையச் செய்கிறார்கள்.
இதை தெளிவுபடுத்துவதற்கு, நாம் கிரேக்கம் மற்றும் இலத்தீன் பிரிவுகளைச் சார்ந்த திருச்சபைத் தந்தையரை ஒரு பக்கத்தில் வைப்போம். பெரும் அறிஞர்களான மறைவல்லுனர்களையும், கல்வியறிவு மிக்க வரலாற்று ஆசிரியர்களையும் மறு பக்கத்தில் வைப்போம். பரிசுத்த வேதாகமத்தை எல்லோரும் பார்க்கும்படி நடுவில் வைப்போம். இப்போது நான் உங்களுக்கு சொல்லப் போவதையல்ல, ஏனெனில் எனக்காகப் பேசவோ, அல்லது இந்தக் காரியத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வரவோ நான் விரும்பவில்லை. மாறாக இந்த மாபெரும் மனிதர்கள், மற்றவர்கள் மோட்சம் செல்லும் பாதையைத் தவறவிட்டு விடாதபடி, அவர்களுக்கு ஒளி தருமாறு, கடவுளின் திருச்சபையில் கலங்கரை விளக்கங்களாக இருக்கும் இந்த மனிதர்கள், சொல்வதற்கு செவிகொடுங்கள். இம்முறையில் விசுவாசம், அதிகாரம், அறிவுவாதம் ஆகிய முப்பரிமாண ஒளியால் வழி நடத்தப்பட்டு இந்த பயங்கரமான காரியத்திற்கு ஓர் உறுதியான தீர்வு காண நம்மால் இயலும்.
இங்கே நாம் மனுக்குலம் முழுவதையுமோ, அல்லது எந்த வேறுபாடுமின்றி எல்லாக் கத்தோலிக்கர்களையுமோ நம் வாதத்திற்குள் இழுக்கவில்லை. மாறாக தங்களுக்குப் பிரியமானதைத் தெரிந்து கொள்ளும் உரிமையுள்ளவர்களும், அதன் காரணமாக, தங்கள் இரட்சணிய காரியத்தில் ஒத்துழைக்க வல்லவர்களாக இருப்பவர்களுமாகிய வளர்ச்சி பெற்ற கத்தோலிக்கர்களைப் பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்.
முதலாவதாக, மிகக் கவனமான எதையும் ஆராய்பவர்கள் என்றும், தங்கள் போதனையில் எதையும் மிகைப்படுத்தாத -வர்கள் என்றும் அறியப்பட்டுள்ள மறைவல்லுனர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். கெஜட்டன், பெல்லார்மின் என்னும் இரண்டு கல்வியறிவு மிக்க போதகர்கள் சொல்வதை நாம் கவனிப்போம். வளர்ந்த கிறிஸ்தவர்களில் பெரும் எண்ணிக்கையினர் நரகத் தீர்ப்படைகிறார்கள். அடிப்படையாக அவர்கள் சொல்கிற காரணங்களைச் சுட்டிக்காட்ட எனக்கு நேரம் இருந்திருக்கும் என்றால், இந்த சத்தியத்தை நீங்கள் நம்பி ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால், சுவாரஸ் என்பவர் கூறுவதை மேற்கோள் காட்டுவதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன். எல்லா மறைவல்லுனர்களின் கூற்றுக்களையும் ஆழ்ந்து ஆராய்ந்தபின், கிறிஸ்தவர்களிடையே, முன் குறிக்கப்படும் ஆன்மாக்களைவிட சபிக்கப்படும் ஆன்மாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று அவர் எழுதினார்.
மறைவல்லுனர்களின் அதிகாரத்தோடு, கிரேக்க மற்றும் இலத்தீன் தந்தையரின் அதிகாரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது ஏறக்குறைய அவர்கள் எல்லோருமே ஒரே காரியத்தைத்தான் சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
புனித தியோடோர், புனித பாசில், புனித எப்ரேம், புனித கிறிசோஸ்தம் அருளப்பர் ஆகியோரின் எண்ணமும் இதுவே. இன்னும் மேலாக, இது கிரேக்கத் தந்தையர்களிடையே எவ்வளவு பொதுவான கருத்தாக இருந்தது என்றால், இந்த உண்மை புனித சிமியோன் ஸ்டைலைட்ஸ் என்பவருக்கு நேரடியாக வெளிப்படுத்தப்பட்டது. இந்த வெளிப்பாட்டிற்குப் பிறகு, தமது இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி அவர் ஒரு தூணின்மீது நாற்பது ஆண்டுகளாக நின்றபடி வாழத் தீர்மானித்தார். இதில் அவர் எல்லாவிதமான காலநிலைகளையும் தாங்க வேண்டியிருந்தது. இவர் எல்லோருக்கும் தவம் மற்றும் பரிசுத்தத்தனத்தின் மாதிரிகையாக இருக்கிறார். இப்போது இலத்தீன் தந்தையர் சொல்வதைக் கேட்போம்.
“பலர் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள், ஆனால் ஒரு சிலர்தான் பரலோக இராச்சியத்தை வந்தடைகிறார்கள்” என்று புனித கிரகோரியார் தெளிவாகச் சொல்கிறார். “இரட்சிக்கப்படுபவர்கள் ஒரு சிலரே” என்று புனித ஆன்செம் அறிவிக்கிறார். புனித அகுஸ்தினார் இன்னும் தெளிவாக “ஆகவே, சபிக்கப்படுபவர்களோடு ஒப்பிடும்போது, இரட்சிக்கப்படுபவர்கள் ஒரு சிலரே” என்கிறார். ஆனால் புனித எரோணிமுஸ் கூறுவது இன்னும் பயங்கரமானது. “எப்போதும் கெட்டவர்களாகவே வாழ்ந்துள்ள ஒரு இலட்சம் பேரில், ஒருவராவது இரட்சிக்கப்படுவது மிகவும் அரிதானது” என்று அவர் கூறுகிறார்.