அப்போது மாதா தன் கரங்களை விரிக்க, அவற்றிலிருந்து பெரும் ஒளி புறப்பட்டு சூரியனை நோக்கி வீசியது. மேகக் கூட்டங்கள் விலகின. மாதா மேலே எழுந்தார்கள். அவர்களின் பிம்பம் சூரியனில் காணப்பட்டது. உடனே லூஸியா: “சூரியனைப் பாருங்கள்!” என்று சத்தமிட, ஜனக்கூட்டம் சூரியனை நோக்கிப் பார்த்தது. அந்தப் பேரொளியிலே மாதா காட்சி மறைந்தது.
அச்சமயம் வாக்களிக்கப்பட்ட மாபெரும் அதிசயம் சூரியனில் நடைபெற்றது. சூரியன் நடுவானில் கம்பீரமாய்ப் பிரகாசித்தது. ஆயினும் அதை எல்லாரும் வெறும் கண்ணால் பார்க்க முடிந்தது. சற்று நேரத்தில் சூரியன் திடீரென நடுங்க ஆரம்பித்தது! தன் நிலை தடுமாறி அசைந்தது. தன்னையே சுற்றத் தொடங்கியது. நெருப்புப் பற்றி எரியும் ராட்சத சக்கரம் போல் கணிக்க முடியாத வேகத்துடன் சுற்றியது.
சுடர்க் கதிர்க் கற்றைகள் எப்பக்கமும் பாய்ந்தன. அவை வானவில்லின் ஏழு வண்ணங்களுடனும் தீப்பிழம்புகளாய் அள்ளி வீசப்பட்டன. மலை, பாறை, செடி, மனிதர் அனைத்து மீதும் நிறங்கள் மாறி மாறிப் படிந்தன. கூட்டம் நினைவிழந்து இதைப் பார்த்துக் கொண்டு நின்றது.
சில விநாடிகள் சூரியன் சுற்றுவதை நிறுத்தியது. பின் மறுபடியும் சுழன்றது. மீண்டும் ஒரு முறை நின்றது. மறுபடி அதிக வேகமாய்ச் சுழன்றது. இப்படிச் சுழன்ற சூரியன் திடீரென தன் இடம் விட்டுப் பெயர்ந்தது. அப்பக்கமும் இப்பக்கமும் ஓடியது. நடுங்கி குலுங்கி நிலை தடுமாறியது. அப்பெரிய நெருப்புச் சக்கரம் கீழ் நோக்கி அசுர வேகத்துடன் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது!
அதை வானத்தில் கட்டியிருந்த கயிறு அறுந்து விட்டது போல அது கீழே விழுகிறது! வெப்பம் கூடுகிறது. அந்த வெப்பம் எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கி விடும் போலிருக்கிறது! உலகம் முடிந்தது... அழிந்தது... அச்சத்தால் கூட்டம் கூச்சலிடுகிறது -- அழுகை ஒலி – ஓலம் -- நான் நம்புகிறேன் -- கடவுளை விசுவசிக்கிறேன் -- ஆண்டவரே காப்பாற்றும் -- என் பாவத்தை மன்னியும் -- முழங்காலில் விழுந்து கூக்குரலிடுகிறது கூட்டம்.
ஏறக்குறைய 15 நிமிடம் நடந்தது இச்சூரிய அதிசயம். பின் அது எப்படி இறங்கியதோ அப்படியே மேலே சென்று தங்கியது. இப்போது சூரியனை யாரும் பார்க்க இயலவில்லை -- கண் கூசத் தொடங்கிவிட்டது. மக்கள் விடுதலையுணர்வுடன் ஆபத்து நீங்கியதால் பெருமூச்சு விட்டுத் தெளிவடைந்தனர். மழையின் ஒரு அடையாளம் கூட இல்லாமல் எல்லாம் காய்ந்து விட்டது.
சூரியனில் இப்பெரும் அதிசயம் நடந்தபோது குழந்தைகள் மூவரும் உச்சி வானத்தில் மூன்று நிலைக் காட்சிகளைக் கண்டார்கள். அம்மூன்று காட்சிகளும் ஜெபமாலையின் சந்தோஷ, துக்க, மகிமைத் தேவ இரகசியங்களைக் குறிப்பனவாயிருந்தன.
முதலில்: திருக்குடும்பத்தின் காட்சி. மாதாவும் சூசையப்பரும் திருப்பாலகனும் காணப்பட்டனர். மாதா வெண்ணுடையும் நீல முக்காடும் அணிந்திருந்தார்கள். அவர்களருகில் வெண்ணுடையில் அர்ச். சூசையப்பர், சேசுபாலனைக் கரத்தில் ஏந்தி நின்றார். பாலகன் நல்ல சிவப்பு உடையில் இருந்தார். அவர்கள் இருவரும் தங்கள் கரங்களால் சிலுவை அடையாளமிட்டு உலகத்தை ஆசீர் வதித்தனர்.
இரண்டாவது: வியாகுல மாதாவும் நமதாண்டவரும் அதில் காணப்பட்டார்கள். சிலுவைப் பாதையில் சேசுவை மாதா சந்தித்த வேதனையான தோற்றம். சேசு சிலுவை அடையாளத்தால் மக்களை ஆசீர்வதித்தார். இந்தக் காட்சி லூஸியாவுக்கு மட்டுமே தெரிந்தது.
மூன்றாவது: மகிமையான கார்மெல் மாதாவின் காட்சி. மாதா வெற்றி முடியுடன் பரலோக பூலோக அரசியாக, திருக்குழந்தை மடியிலிருக்க, கார்மேல் மாதாவாகக் காணப்பட்டார்கள். இதையும் லூஸியா மட்டுமே கண்டாள்.