1917 அக்டோபர் 13-ம் நாள்
இந்த 6-ம் காட்சியில் ஒரு அற்புதம் வாக்களிக்கப்பட்டிருந்ததால் போர்த்துகல் முழுவதிலுமிருந்து மக்கள் திரண்டனர். பெய்து கொண்டேயிருந்த மழையையும் சட்டை பண்ணாமல்,
வாக்குப்படி புதுமை நடவாவிட்டால் குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும் கூட்டம் கொன்று விடும் என்ற பேச்சு எழுந்தது. ஆயினும் சிறுவர்கள் மூவரும் எவ்வித தயக்கமும் காட்டவில்லை. “நாங்கள் கொல்லப்பட்டால் சீக்கிரமாக மோட்சத்திற்குப் போய் விடுவோம்” என்று அவர்கள் கூறினார்கள். எல்லாத் தரப்பினரும் கோவா தா ஈரியாவில் திரண்டனர். விசுவாசிகள், நம்பாதவர்கள், நாஸ்தீகர்கள், பத்திரிகை நிருபர்கள், நோயாளிகள்... கூட்டம் குறைந்தது எழுபதாயிரம். அது இன்னும் பெருகிக் கொண்டிருந்தது.
ஜெபமாலை சொல்லப்பட்டது. “எல்லாரும் குடைகளை மடக்குங்கள்” என்று கத்திச் சொன்ன லூஸியா அப்படியே மாதாவின் தரிசனத்தால் பரவசமானாள்.
“அம்மா! உங்களுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?”
மாதா கனிந்த அன்புடன் அவளை பார்த்து: “என் மகிமைக்கென இங்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும். நானே ஜெபமாலை மாதா. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்ல வேண்டும். யுத்தம் சீக்கிரம் முடியப் போகிறது. போர்வீரரும் வீடு திரும்புவார்கள்.”
"அம்மா! உங்களிடம் பல உதவிகள் கேட்க வேண்டும். சில நோயாளிகளுக்கு சுகம், பாவிகளுக்கு மனந்திரும்பும் வரம், இன்னும் மற்றவைகள்...”
“சிலவற்றைச் செய்வேன். எல்லாவற்றையுமல்ல. மனிதர்கள் தங்கள் வாழ்வைத் திருத்த வேண்டும். தங்கள் பாவங்களுக்கு அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்... ஏற்கெனவே மிகவும் நொந்து போயிருக்கும் நம் ஆண்டவரை மனிதர்கள் இதற்கு மேலும் நோகச் செய்யக்கூடாது.” இவையே மாதா பாத்திமா பொதுக் காட்சிகளில் பேசிய கடைசி வார்த்தைகள்.