முதல் கேள்வி:
38. பாத்திமா அன்னையின் வேண்டுகோளை ஏற்று நடக்க திருச்சபை கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? இந்தக் கேள்வியை ஒரு சாதாரண விசுவாசியிடம் கேட்டால் கூட, "கண்டிப்பாகக் கேட்டு நடக்க வேண்டும்" என்று பதிலளிப்பான். அது முற்றிலும் சரியே. ஏனென்றால் கடவுளின் தாயே நம்மைத் தேடி வந்து விண்ணப்பிக்கும்போது, நாம் குறைந்த பட்சம் அவர்கள் நம் தாய் என்ற முறையில் கீழ்ப்படிந்தாக வேண்டும். நாம் எளிய விசுவாசிகளாயிருந்தாலும் சரி, அல்லது பாப்பரசராகவே இருந்தாலும் சரி, நாம் அனைவரும் மாதாவின் பிள்ளைகள்தான். ஆகவே தாயின் வேண்டுகோளுக்கு நாம் அனைவருமே பணிய வேண்டியதுதான்.
39. திருச்சபையின் வரலாற்றில் மரியாயிடம் இருந்து வரும் இச்செய்திகள் மிகச் சமீப காலத்திலிருந்து தான், 19-ம் நூற்றாண்டிலிருந்து கிடைத்து வருகின்றன. அதற்கு முன்னால் சேசுவின் திரு இருதயத்திடமிருந்து செய்தி கிடைத்தது. திருச்சபை வரலாற்றின் ஆரம்ப காலத் திற்குச் சென்றோமானால், அப்போஸ்தலர் நடபடி காலத்திலிருந்தே திருச்சபையில் தீர்க்கதரிசனங்கள் இருந்ததை அறியலாம். "தீர்க்கதரிசனங்கள்” என்பதை ஏற்றுக்கொண்டால் நம் முதல் கேள்விக்குப் பதில் கிடைக்கும். விஷயத்தைப் புரிந்துகொள்ளப் புதிய மார்க்கமும் கிடைக்கும்.
தனியார் வெளிப்படுத்தலும், பொது வெளிப்படுத்தலும்
40. நம் விசுவாசத்தின் ஒரு கருவூலமாகிய சுவிசேஷத்தில் உள்ள தேவ வெளிப்படுத்தலின் உண்மைகள் யாவும் தேவ விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பது நமக்குத் தெரியும். சுவிசேஷத்திற்குப் புறம்பே உள்ள மற்ற வெளிப்படுத்தல்கள் தனிச் சலுகை பெற்ற ஆன்மாக்களுக்கு அளிக்கப்பட்ட "தனி வெளிப்படுத்தல்கள்” என்றே கருதப்பட்டு வருகின்றன. இவைகளை அந்த தனிச்சலுகை பெற்ற ஆன்மாக்கள் விசுவசிக்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு அப்படிப்பட்ட கண்டிப்பான கடமை அநேகமாக இல்லை என்றும் கருதப்பட்டு வந்துள் ளது. ஆனால் பாப்பரசர் பதினான்காம் ஆசீர்வாதப்பர் தொடங்கி பத்தாம் பத்திநாதர் வரை உள்ள திருச்சபையின் கருத்து, தனியார் வெளிப்படுத்தல்களை நாம் மனித விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறது.
41. ஆனால் இப்பொழுது, சர்வதேச மரியாயின் சங்கத்தின் தலைவரான சங். பீயர் பாலிக் (Fr. Pere Balic), லிஸ்பனின் பிதாப்பிதாவான கர்தினால் செரேஜெரா போன்ற கர்தினால்களும், பல ஆயர்களும், வேதசாஸ்திர அறிஞர்களும், “இப்பரலோகச் செய்திகள் வழியாக, கடவுள் நம்முடன் பேசுவதாயிருந்தால், அதை மனித விசுவாசத்துடன் மட்டும் ஏற்றுக் கொள்வது போதாது; அதை ஏற்கலாம், அல்லது ஒதுக்கலாம் என்ற நிலையும் இருக்கக் கூடாது; அதைவிட அதிகமான அளவில் அது மதிக்கப்பட வேண்டும்” என்று உறுதியான குரலில் கூறுகிறார்கள்.
“அதிகமான அளவில் அது மதிக்கப்படுவதை” வேதசாஸ்திர அடிப்படையில் எப்படித் தெளிவாக எடுத்துரைப்பது? ஒருவேளை இவை தனிப்பட்ட விசுவாசிகளுக்கு, அவர்களுடைய நலன் கருதி அறிவிக்கப்பட்ட தனிச் செய்திகளாக மட்டும் இருக்கலாம். ஆனால் திருச்சபையின் நடத்தையையும், அதன் அங்கத்தினர்களின் நடத்தையையும் பாதிக்கக்கூடிய “பொதுத் தீர்க்கதரிசனங்களும்” திருச்சபைக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றனவே!
பாத்திமா செய்திக்குக் கீழ்ப்படிவது பாப்பரசர்கள், மேற்றிராணிமார்களின் கடமை
42. அப்போஸ்தலர் நடபடி, அர்ச். சின்னப்பரின் நிருபங்கள் ஆகியவற்றை வாசித்துப் பார்த்தோமானால், திருச்சபையைக் குறிப்பிடும் பல அற்புதமான வாசகங்களைக் காண்கிறோம். உதாரணமாக: “அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் எனப்பட்ட அஸ்திவாரத்தின் மேல் கட்டப் பட்டவர்களாய் இருக்கிறீர்கள். அதற்குக் கிறீஸ்து சேசுநாதர் தாமே ஆதி மூலைக்கல்லாயிருக்கிறார்” (எபே.2:20). இந்த வசனத்தில், தீர்க்கதரிசிகள் என்பது புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளையே குறிக்கிறது. அப்போஸ்தலர் நடபடியையும், திருச்சபை வரலாற்றையும் ஊன்றிக் கவனித்தால், திருச்சபையின் அப்போஸ்தல, குருத்துவ வரத்துடன், தீர்க்க தரிசன வரமும் இருந்தே வந்துள்ளது என்னும் உண்மையைக் காண்கிறோம். இத்தீர்க்கதரிசன வரம், அப்போஸ்தல குருத்துவ ஊழியத்தை ஊக்கப்படுத்தி வழிநடத்தி வந்துள்ளது. இது ஒரு மிக அடிப்படையான உண்மையாகும். அப்போஸ்தல குருத்துவ வரமும், தீர்க்கதரிசன வரமும், கிறீஸ்துநாதருடைய சுவிசேஷத்திற்குக் கட்டுப்பட்டவையே. ஆனால் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் முறையில் சிறிது வேறுபட்டவை. கடைசித் தீர்ப்புக்கான அதிகாரம் திருச்சபையிடமே, பாப்பரசரிடமே உள்ளது. இருப்பினும், பாப்பரசரும், தீர்க்கதரிசகள் சொல்வதை அவசியம் கேட்கத்தான் வேண்டும். அர்ச். சின்னப்பர் கூறுகிறார்: "தீர்க்கதரிசனங்களைப் புறக்கணியாதேயுங்கள். ஆனால் எல்லாவற்றையும் பரிசோதித்து, நலமானதைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்” (1 தெச.5:20,21). S
43. இதுவே கடவுளின் சித்தமாக இருக்கிறது. கடவுளின் இந்தச் சித்தப்படியே, புதிய ஏற்பாட்டின் கடவுளின் மக்களை வழிநடத்துவதற்கு, தீர்க்கதரிசனங்கள் திருச்சபையின் வாழ்வுடன் இன்றியமையாத முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தீர்க்கதரிசனங்கள் திருச் சபையின் வாழ்வுக்கு அத்தியாவசியமானவை ஆகின்றன. தீர்க்கதரிசியின் வார்த்தைகள் சர்வேசுரனிடமிருந்து வருகின்றதா என திருச்சபையின் ஞான மேய்ப்பர்கள், அதாவது பாப்பரசரும், குருகுலத்தாரும் நுணுகி ஆராய வேண்டும். ஆனால் தீர்க்கதரிசனம் கடவுளிடமிருந்துதான் வருகிறது என்று தீர்மானித்தபின்பு, அவர்கள் அதற்குப் பணிந்தே ஆக வேண்டும்.
தீர்க்கதரிசி கடவுளின் கருவியே என்பதால், தீர்க்க தரிசனத்திற்குக் கீழ்ப்படியும்போது நாம் கடவுளுக்கே கீழ்ப்படிகிறோம், தீர்க்கதரிசிக்கு அல்ல. இவ்வாறாக, தீர்க்கதரிசனங்கள் கடவுளிடமிருந்து வருகின்றன என்று அறிந்த பின்பு, அவரவர் இஷ்டப்படி அதை ஏற்கலாம் அல்லது ஒதுக்கலாம் என்ற பேச்சிற்கே இடமில்லை. அனைவரும் அதற்குப் பணிவது கடமையாகிறது. வேத சாஸ்திரத்தின்படி வேறு வழியில்லை. ஆகவே பாத்திமாவில் நமது அன்னை கேட்ட வேண்டுகோள்களுக்குப் பணிவது பாப்பரசருக்கும், திருச்சபையின் ஆயர்களுக்கும், குருக்களுக்கும் கடமையாகும். இந்தக் கடமை அவர்களுடைய அப்போஸ்தல மேய்ப்புக் கடமைகளுடன் இணைந்த ஒன்று. மேலும் இப்பொழுது திருச்சபையின் நடைமுறையைப் பார்த்தால், பாத்திமா செய்தி கடவுளிடமிருந்தே வருகிற பொது தீர்க்கதரிசனம் என அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது நன்கு புலப்படுகிறது. ஆகவே இனி உடனடியாக திருச்சபை, பாத்திமா அன்னையின் வேண்டுகோள்களை விரைவாக நிறைவேற்ற முன்வர வேண்டும்.
44. இதுவே முதல் கேள்விக்குப் பதில். உண்மையிலேயே நமது அன்னை பாத்திமாவில் தீர்க்கதரிசனமாய்ப் பேசியிருந்தால் நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இது எளிய கிறீஸ்தவ ஞானமே நமக்குக் கூறும் பதில். வேத சாஸ்திரத்தின் வாயிலாக இந்த முடிவிற்கே நாமும் வந்திருக்கிறோம். இருப்பினும் திருச்சபையை ஆளும் உயர் அதிகாரிகளுக்குத் தங்களுடைய தீர்மானித்த ஆலோசனைகளைக் கூறுவது வேதசாஸ்திர வல்லுனர்களின் இன்றியமையாத கடமையாகும். வேதசாஸ்திர சிந்தனையின் நோக்கம், திருச்சபை மேலதிகாரிகள் நிச்சயமான உண்மையை அடைவதற்கு உதவி செய்வதே ஆகும். வேதசாஸ்திர சிந்தனையின் நீதிபதிகளும் திருச்சபையின் அதிகாரிகளே.
மாதா சகலவரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தி
45. தேவதாய் எல்லா வரங்களுக்கும் மத்தியஸ்தி என்பது பாத்திமா செய்தியின் நடுநாயகமான உண்மையாகும். மீட்பின் வரலாற்றில் மரியாயின் பங்கை உலக முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சர்வேசுரன் விரும்பும் காலம் வந்து விட்டது. இந்த உண்மை விசேஷமாக பாத்திமாவிலும், தேவ அன்னை காட்சியளித்த மற்ற ஸ்தலங்களிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை முதலில் வரலாற்று நோக்கில் விளக்கிக் காட்டுகிறேன்.