1917 ஆகஸ்ட் 13-ல் பாத்திமா மாதாவின் 4-ம் காட்சி நடைபெறவில்லை. காரணம், மாநில அதிகாரி ஆர்ட்டுரோ நம் மூன்று குழந்தைகளையும் அவ்ரம் நகர ஆட்சி மன்றத்திற்கு கடத்திச் சென்றுவிட்டான். அங்கே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையிலும் அவர்கள் ஜெபமாலை சொன்னார்கள். அதைக் கண்ட கைதிகளும் அதில் சேர்ந்து கொண்டார்கள். அதிகாரி அவர்களை கொதிக்கிற எண்ணெயில் போடுவதாகப் பயமுறுத்தியும் அவர்கள் மாதா காட்சியருள்வதை மறுக்கவில்லை. ஆகஸ்ட் 15-ம் தேதி அவர்களிடம் அதிகாரி தோற்றுப் போய் 15-ம் தேதி பாத்திமா பங்குக் குருவின் இல்லத்தில் பலிபூசை நடந்த வேளையில் கொண்டு சேர்த்துவிட்டுப் போய்விட்டான்.
ஆகஸ்ட் 19, ஞாயிறன்று பூசைக்குப் பின் வாலினோஸ் என்ற இடத்திற்கு இவர்கள் ஆடு மேய்க்கச் சென்ற போது மாதா 4-ம் தடவையாக அவர்களுக்குக் காட்சி தந்தார்கள். மாதாவை அந்த இடத்தில் கண்டதும், லூஸியா:
“அம்மா உங்களுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?”
"மாதத்தின் 13-ம் தேதி கோவா தா ஈரியாவுக்குச் செல்லுங்கள். தினமும் ஜெபமாலையைத் தொடர்ந்து சொல்லி வாருங்கள். கடைசி மாதத்தில் எல்லாரும் நம்பும்படி ஒரு புதுமை செய்வேன்.”
“மக்கள் கோவா தா ஈரியாவில் போடும் காணிக்கைப் பணத்தை என்ன செய்ய விரும்புகிறீர்கள்?"
“இரண்டு சுரூபத் தட்டு செய்ய வேண்டும். ஒரு தட்டை லூஸியா, ஜஸிந்தா, இன்னும் வேறு இரு சிறுமிகள் வெண்ணுடை தரித்து சுமந்து செல்ல வேண்டும். மற்றொன்றை பிரான்சிஸும் அவனுடன் வேறு மூன்று சிறுவர்களும் சுமந்து செல்ல வேண்டும். இவற்றில் விழும் பணம் ஜெபமாலை மாதா திருநாளைக் கொண்டாடுவதற்கு. மீதியிருக்கும் பணம் இங்கு கட்டப்படவிருக்கும் ஆலயத்திற்கென இருக்கட்டும்.”
“அம்மா, சில நோயாளிகளை நீங்கள் குணமாக்க வேண்டும்.”
“இவ்வாண்டில் சிலரைக் குணப்படுத்துவேன்.
ஜெபியுங்கள். அதிகமதிகமாக ஜெபியுங்கள். பாவிகளுக்காக ஒறுத்தல் முயற்சிகளைச் செய்யுங்கள். ஏனென்றால் தங்களுக்காக ஜெபிக்கவும் ஒறுத்தல் செய்யவும் ஒருவருமில்லாததால் அநேக ஆன்மாக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.”
என்று கூறிய மாதா கிழக்குத் திசை நோக்கிச் சென்று மறைந்தார்கள்.