பசாசுகள்

33. சம்மனசுகள் எல்லோரும் தங்கள் மேன்மையான அந்தஸ்திலே நிலைகொண்டார்களோ?

இல்லை. சிலர் ஆங்காரத்தினாலே மோட்சத்தை இழந்து நரக ஆக்கினைக்கு உள்ளானார்கள்.

34. இப்படிக் கெட்டுப் போன சம்மனசுகள் பெயரென்ன?

பசாசுகள்.

1. பசாசுகளை வேறு எவ்விதம் அழைக்கிறோம்?

பேய், சாத்தான், அலகை என்று அழைக்கிறோம்.

2. பசாசுகள் உண்டென்று நாம் எப்படி அறிவோம்?

(1) வேதாகமத்தில் அவைகளைப் பற்றி அடிக்கடி சொல்லியிருப்பதைக் காணலாம். உதாரணமாக: ஏவாள் சோதிக்கப் படுதல் (ஆதி. 3:1), சாராளுடைய புருஷரைக் கொன்றது (தோபி. 3:8), யோபை உபத்திரவப்படுத்தினது (யோப். 1:12), சேசுநாதர் வனாந்தரத்தில் பசாசினால் சோதிக்கப்பட்டதுமல்லாமல் அவர் பற்பல மனிதர்களினின்று அநேக பசாசுகளைத் துரத்தினார் (மத்.4:1, 9:33, 16:17).

(2) அர்ச்சியசிஷ்டவர்கள் பலர் அவைகளைப் பார்த் ததாகச் சொல்லுகிறார்கள். (அர்ச். பெரிய தெரசம்மாள், அர்ச். அந்தோனியார், அர்ச். சீயென்னா கத்தரீனம்மாள்.)

3. சர்வேசுரன் பசாசைப் படைத்தாரா?

இல்லை; சர்வேசுரன் சம்மனசுகளை உண்டாக்கினார். ஆனால், அவைகளில் சில கெட்டுப் போய் தங்களை பசாசு களாக்கிக் கொண்டன.

4. இச்சில சம்மனசுக்கள் கெடுவதற்குக் காரணம் என்ன?

ஆங்காரம்.

5. அதெப்படி? 

ஆங்காரத்தினாலே அவர்கள் தங்கள் அந்தஸ்தை முழு மனதோடு அங்கீகரிக்காமல், சர்வேசுரன் போலிருக்க விரும்பி னார்கள் என்றும், அல்லது சேசுநாதருடைய மனுஷீகத்தை ஆராதிக்கச் சம்மதிக்கவில்லை என்றும், அல்லது தேவமாதாவைத் தங்கள் இராக்கினியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் வேத சாஸ்திரிகள் வெவ்வேறு விதமாய் உத்தேசிக்கிறார்கள்.

6. இவ்விஷயத்தைப் பற்றி தீர்க்கதரிசியான இசையாஸ் என்பவர் எழுதினதென்ன?

“விடியற்காலை உதயமாகும் லூசிபேர் வானத்தினின்று எப்படி விழுந்தாய்?--நீ உன் மனதில்: நான் வானமண்டலம் ஏறுவேன், சர்வேசுரனின் நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிம்மா சனத்தை உயர்த்துவேன்... உன்னத கடவுளுக்கும் சமமாவேன்... என்றாய் ஆயினும் நீ நரகத்து அடிபாதாளத்தில் தள்ளப்பட்டாய்” (இசை. 14:12-15).

7. இப்படிக் கெட்டுப் போன சம்மனசுகள் எத்தனை?

அதுவும் நமக்கு நிச்சயமாய்த் தெரியாது. ஆனாலும் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு கெட்டுப் போனதாகச் சில வேத சாஸ்திரிகள் எழுதியிருக்கிறார்கள்.

8. கெட்டுப் போன சம்மனசுகளுக்குத் தலைமையான சம்மனசின் பெயர் என்ன?

லூசிபேர்.

9. கெட்ட சம்மனசுகளைச் சுவாமி எவ்விதம் தண்டித்தார்?

அவர்களை வானமண்டலத்தினின்று துரத்தி, சொல்லி லடங்காத வேதனை நிறைந்த நித்திய நரக பாதாளத்தை உண்டாக்கி அதில் அவர்களைத் தள்ளினார். “பாவம் செய்த தூதர்களைச் சர்வேசுரன் மன்னியாமல், நரகச் சங்கிலிகளால் அவர்களைக் கட்டி, உபாதைப்படும்படி பாதாளத்தில் தள்ளி, நடுத்தீர்ப்புக்கு வைத்திருக் கிறார்” (இரா. 2:4).

10. பசாசுகள் இழந்துபோன நன்மைகள் எவை? 

தேவ இஷ்டப்பிரசாதம், நித்திய பாக்கியம், அழகு செளந்தரியம், இவை முதலிய நன்மைகளையும், நற்குணங் களையும் இழந்து போனதுமல்லாமல், துர்க்குணங்களும், கபடு தந்திரங்களும் பொய்ப் புரட்டும் அவைகளுக்கு உண்டாகி, அருவருப்புக் குரிய அவலட்சண கோலமாய் மாறிவிட்டன.

11. பசாசுகளுக்கு கொம்பு, வால், நீண்ட நகங்கள் உண்டோ?

பசாசுகள் அரூபியாயிருப்பதால் அவர்களுக்குச் சரீரமு மில்லை, கொம்பு, வால், நகமுமில்லை.

12. படங்களில் பசாசுகள் கொம்பு, வால், நகங்களுடன் சித்தரிக்கப் பட்டிருப்பதற்குக் காரணமென்ன?

அவர்களுடைய அவலட்சணத்தைக் காட்டும்படி பசாசுகள் அப்படி படங்களில் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

13. பசாசுகள் புத்தி, அறிவு, மனது சுவாதீனம், வல்லமை ஆகிய தங்கள் சுபாவ சத்துவங்களை இழந்து போனார்களா?

இழந்து போகவில்லை. அவர்களுக்குப் புத்தி, அறிவு, மனது சுவாதீனம், வல்லமை இன்னுமிருக்கிறது. ஆகிலும் தங்கள் கடைசிக் கதியை அவர்கள் அடைந்துவிட்டபடியால், தங்கள் கதியின் மட்டில் அவர்கள் சுயாதீனம் இல்லாதிருக்கிறார்கள் என்பது சந்தேகமற்ற விஷயம். ஆகையால் பசாசுகள் யாதொரு நன்மையான காரியத்தைத் தெரிந்து கொள்ளாமல் தீமையான காரியங்களை மாத்திரம் தெரிந்து கொள்பவர்களாயிருக்கிறார்கள்.

14. நரகத்தில் விழுந்த பசாசுகள் அதில் எத்தனை காலம் நிர்ப்பாக்கியப்படுவார்கள்?

நித்திய காலமாய், அதாவது எப்போதைக்கும் அவ்விடத்தில் வேதனைப்படுவார்கள்; அவர்களுக்கு ஒருக்காலும் இரட்சணியம் கிடையாது.

15. பசாசுகள் இறந்து போகமாட்டார்களா?

ஞான வஸ்துக்களானதினாலே, பசாசுகள் ஒருகாலும் சாகவே மாட்டார்கள்.

16. இப்போது பசாசுகளின் சீவியம் எப்பேர்ப்பட்டது?

சொல்லிலடங்காத வேதனையை அனுபவித்து, சர்வேசுரனைத் தூஷணித்துச் சபித்து, மனிதர்களும் சுவாமியை வணங்காமலும், ஆராதிக்காமலும், அவருக்குக் கீழ்ப்படியாமலு மிருக்க அவர்களுக்குத் தந்திர சோதனைகளைக் கொடுப்பதே இவர்களுடைய நிர்ப்பாக்கியமான சீவியம்.

17. பசாசுகள் தங்களுக்குள்ளே ஒருவரொருவரையும் சிநேகித்து வருகிறார்களோ?

அவர்கள் தங்களுக்குள்ளே ஒருவரொருவரையும் நிந்தித்து வெறுக்கிறார்கள்.

18. அவர்கள் மனிதர்களை நேசித்து அவர்களுக்கு ஏதோ சகாயம் செய்வார்களோ?

நல்ல சம்மனசுகளைப் பகைக்கிறதுபோல், பசாசுகள் மனிதர்களையும் பகைத்து, அவர்களை ஏமாற்றிக் கெடுத்து, தங்க ளோடு கூட நரகத்துக்கு இழுத்துக் கொள்ளப் பிரயாசைப் படுவார்கள்.

19. ஏன் பசாசுகள் நம்மைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்?

பசாசுகள் சர்வேசுரனுடைய விரோதிகளாயிருக் கிறார்கள். அவருக்குத் தீமை ஒன்றும் செய்யத் தங்களால் முடியாதிருப்பதால், அவருடைய தேவ சாயலையுடையவர் களாயும், பிள்ளைகளாயுமிருக்கிற மனிதர்களுக்குத் தீமையெல்லாம் செய்யப் பிரயாசைப்படுவார்கள். மேலும் தாங்கள் இழந்துபோன மோட்ச பாக்கியத்தை நாம் சுகிக்கப் போகிறோமென்று கண்டு, காய்மகாரப்பட்டு, நாமும் அவர்களோடுகூட நரகத்தில் விழ வேணுமென்று ஆசித்து, இடைவிடாமல் நமக்குச் சோதனை கொடுத்து, நம்மைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்.

20. நம்மைக் கெடுக்கப் பசாசு செய்யும் தந்திரங்கள் எவை?

(1) நமது புத்தியைக் கள்ள எண்ணங்களால் மயக்கப் பிரயாசைப்படுகிறது. இப்படியே நாம் செய்த பாவத்துக்காக மனஸ்தாபப்படாமலிருக்கவும், நமக்கு நாமே வலுவந்தம் செய் யாமல் மோட்சத்தை அடையக் கூடுமென்றும், மரணம் தூரமா யிருக்கிறதென்றும், உலக நன்மை மேலான நன்மையென்றும் நமது புத்தியில் கள்ள எண்ணங்கள் எழும்ப ஏவுகின்றது.

(2) நமது மனதைப் பயமுறுத்துகின்றது. இப்படியே முகத்தாட்சணையாலும், நாம் செய்த பாவத்தைப் பற்றி மிதமிஞ்சின பயத்தினாலும், நடுத்தீர்வையின் கடுமையினாலும், புண்ணியம் செய்வதன் கஷ்டத்தினாலும் நம்மை உறுத்துகின்றது.

(3) நமது துர்க்குணங்களையும், ஆசாபாசங்களையும் தூண்டி ஆஸ்திபாஸ்திகளையும், மகிமையையும், இன்ப சுகங் களையும் தேட நமது இருதயத்தில் ஆசையை எழுப்புகின்றது.

21. பசாசின் சோதனைக்கு உட்படாதிருக்க முடியுமா?

எப்பொழுதும் முடியும். நாம் தேவ வரப்பிரசாதத் துக்கு இணங்கி, தபசு பண்ணி, விழித்திருந்து, செபம் செய்து வருவோமானால், பசாசின் தந்திரங்களை எப்போதும் ஜெயிப்போ மென்பது குன்றாத சத்தியம்.

22. பசாசுகளுக்குள்ளே அநேகர் பூமியில் திரிகிறார்களா?

திரிகிறார்கள். அதைப் பற்றி அர்ச். இராயப்பர் தாம் எழுதின முதல் நிருபத்தில் சொல்லுகிறதாவது: “மன அடக்கமும் விழிப்புமுள்ளவர்களாயிருங்கள். ஏனெனில், உங்கள் சத்துருவாகிய பசாசு கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல் யாரை விழுங்கலாமோ என்று தேடி, சுற்றித் திரிகிறது. ஆகையால் நீங்கள் விசுவாசத்தில் உறுதி யுள்ளவர்களாய், அதற்கு எதிர்த்து நில்லுங்கள்” என்கிறார் (1 இரா. 5:8,9).

23. பசாசுகள் பூமியில் திரிகிறபோது நரக வேதனை அனுபவிக் கிறார்களா?

அப்போது முதலாய் அனுபவிக்கிறார்கள்.

24. எதற்காகப் பூமியில் திரிகிறார்கள்?

மனிதர்களைக் கெடுக்கிறதற்காகத்தான்.

25. பசாசுகள் மனிதருக்கு விரோதமாய்த் தீமை செய்கிறதுண்டா?

சர்வேசுரனுடைய உத்தரவின்றிப் பசாசு மனிதருக்குத் தீமை செய்யாது. ஆனால் மனிதரைப் பசாசு சோதிக்கும்படி, சில சமயங்களில் அதற்கு இப்படிப்பட்ட உத்தரவு சர்வேசுரன் கொடுக் கிறதுண்டு. அப்படியே சுவாமியின் உத்தரவு பெற்று பசாசு யோபுக்குச் சொல்ல முடியாத கஷ்டம் உண்டுபண்ணினது (யோப். 1:12).

26. ஏன் நமக்குப் பசாசு தின்மை வருவிக்கிறதற்கு சர்வேசுரன் அதற்கு உத்தரவு கொடுக்கிறார்?

நமது பிரமாணிக்கத்தைச் சோதித்து, நமது பேறுபலன் களை அதிகரிப்பதற்காகத்தான்.

27. பசாசு நமக்கு விரோதமாய் என்ன செய்யக் கூடும்?

(1) பசாசு சர்வேசுரனுடைய அனுமதியின் பேரில், மனிதனுடைய சொத்து சுதந்தரங்களுக்குச் சேதம் வருவிக்கக் கூடும்.

(2) அவனுடைய ஆத்தும சரீரத்துக்கு முதலாய்த் தீங்கும் விளைவிக்கக் கூடும். உதாரணமாக: மனிதனைப் பேய் பிடித்து ஆட்டுதலும், பாவம் செய்ய சோதனை மூலமாய்த் தூண்டுதலுமாம்.

(3) ஆனால் மனிதனுடைய சம்மதமின்றி, அவனு டைய ஆத்தும இரட்சணியத்துக்குப் பசாசினால் யாதொரு தீங்கும் செய்ய முடியாது.

28. பசாசின் செய்கையால் நமக்குத் தீமை வரும்போது, சர்வேசுரன் நம்மைக் கைவிட்டுவிடுவாரா?

விடமாட்டார். தாம் குறித்த நேரத்தில் சர்வேசுரன் தப்பாமல் நம்மை இரட்சிப்பார். அப்படியே சர்வேசுரன் பசாசால் யோபுக்கு வந்த குஷ்ட வியாதியைப் போக்கி அவருக்குப் பூரண செளக்கியம் கட்டளையிட்டதுமல்லாமல், அவருக்கு முன்னிருந்த ஆஸ்திபாஸ்தியிலும் இருமடங்களவு தந்தருளினார். முன்போல் அவர் 7 குமாரர்களையும், 3 குமாரத்திகளையும் பெற்று, அநேக வருஷகாலம் தன் புத்திர பிள்ளைகளோடு சந்தோஷமாய் ஜீவித்து மரணித்தார் (யோப்.42: 10-16).

29. மனிதர்மேல் ஆவேசம் கொள்ளும்படிக்கும் வெளி யரங்கமாய் அவர்கள் சரீரத்தை உபாதிக்கவும், அதில் தங்கி யிருக்கவும் சர்வேசுரன் பசாசுக்கு உத்தரவு கொடுப்பதுண்டோ?

உண்டு. சேசுநாதர் பசாசை அதட்டி, ஆவேசமானவர் களிடத்திலிருந்து அதைத் துரத்தினாரென்று சுவிசேஷத்தில் வாசித்துப் பார்க்கலாம் (மத். 8:28-32; 9:33; மாற்கு. 1:34, 39; லூக். 4:35). அதுக்கு முகாந்தரம் என்னவென்றால்: நீதிமான் களைச் சோதித்துத் திடப்படுத்தவும், பாவிகளைத் தண்டிக்கவும், வெட்கமும், ஆக்கினையும் வருவிக்கிற தோல்விகளால் பசாசை உபாதிக்கவும் சுவாமி இப்படிப்பட்ட உத்தரவு கொடுக்கிறா ரொழிய, நமக்கு நித்திய கேடு வர வேண்டுமென்ற அவருக்குச் சிறிதும் சித்தமேயில்லை.

30. பேய் பிடித்த கிறீஸ்தவர்கள் யாரால் அதை ஓட்டிக் கொள்ளலாம்?

விசாரணை மேற்றிராணியாரால் அங்கீகரிக்கப்பட்ட குருவானவரால் ஒட்டிக் கொள்ளலாம். அதற்கு மாந்திரியவாதி களையாவது கத்தோலிக்கக் குருக்கள் அல்லாத அஞ்ஞானக் குருக்களையாவது ஒருக்காலும் வரவழைக்கக் கூடாது.

31. பசாசுக்கு நாம் பயப்படலாமா?

பயப்பட வேண்டாம்; ஏனெனில், நாம் சர்வேசுர னோடும் நல்ல சம்மனசுகளுடனும் ஒன்றித்திருந்தால், பசாசு நமக்கு ஒன்றும் செய்யமுடியாது. “சர்வேசுரன் நம்முடைய பாரிச மாயிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (உரோ.8:31).

சரித்திரம்

முப்பது வருஷகாலமாய்த் துஷ்ட பசாசு ஆர்ஸ் என்னும் நகரின் குருவானவரான அர்ச். வியான்னி மரிய அருளப்பரைப் பல தந்திர சோதனைகளால் உபாதித்ததுடன், பூர்வ யோபைப்போல, அவரைச் சரீர வாதைப்படுத்தியும் வந்தது. அநேகம் விசை இரா வேளையில் அவர் படுத்திருக்கும் அறையின் கதவைப் பலமாய்த் தட்டி பயங்கரத்துக்குரிய விதமாய் ஊளையிட்டுப் பெரும் சேட்டை செய்யும். சில சமயங்களில் அவர் அறையில் பிரவேசித்து அவர் படுக்கையைப் பிடித்திழுத்துக் கிழிக்கும். பரிசுத்த குருவானவ ரையும் கட்டிலிலிருந்து தள்ளிவிடும். ஒருவிசை அவர் படுக்கைக்கு நெருப்பு வைத்து கொளுத்திவிட்டது. இந்தப் புண்ணிய குருவானவர் கணக்கற்ற பாவிகளை மனந்திருப்பினதைச் சகிக்கக் கூடாமல் பசாசு அவரை இவ்வாறு உபாதித்து வந்தது. அர்ச்சிய சிஷ்டவரோ சற்றேனும் அஞ்சாமல் அதை ஒரு சிறு எலிக் குஞ்சென்று சொல்லி, செபதப ஒருசந்தியால் ஜெயித்தார்.