நாம் ஒவ்வொருவரும், நம் வாழ்வு முழுவதும் எதிர்த்துப் போராட வேண்டிய, ஏழு தலையுள்ள ஒரு இராட்சத ஜந்து உள்ளது. சுய தேடல் அல்லது சுய நேசம் என்பது அதன் பெயர். ஆங்காரம், கோபம், மோகம், உலோபித்தனம், போஜனப் பிரியம், காய்மகாரம், சோம்பல் ஆகியவை அதன் ஏழு தலைகளாம். ஆயர் ஃபுல்ட்டன் ஷீன் அவைகளை, “ஆத்துமத்தின் ஏழு பிணந்தூக்கிகள்” என்று அழைப்பதோடு அவற்றிற்கு ஏழு பெயர்களையும் தருகிறார். அவை: சுயநேசம், பணத்தின் மீது ஒழுங்கற்ற நாட்டம், முறையற்ற காமம், வெறுப்பு, பொறாமை, முகஸ்துதி மற்றும் சோம்பல் ஆகியன (“Peace of Soul”, P. 109).
ஜென்மப் பாவத்தின் விளைவாக, தன் சித்தத்தை வலியுறுத்துவதும், சகலத்திற்கும் மையமாகத் தன்னை ஆக்கிக் கொள்வதும், மற்றவர்களின் சித்தங்களைத் தனது சித்தத்தைக் கொண்டு அடக்கியாள்வதுமாகிய ஒரு துர்க்குணம் நம் ஒவ்வொருவரோடும் ஒட்டிப் பிறந்ததாக இருக்கிறது. அனைத்திலும் உன்னதமான நன்மையையே நாம் மிகவும் நாடுகிறோம். ஆனாலும் பெரும்பாலும் இந்த நன்மை எதுவென்று நமக்கு விளங்குவதில்லை. மேலும் ஒரு தவறான வழியில் நாம் அதைத் தேடியலைகிறோம். சர்வேசுரனே அனைத்திலும் உயர்ந்த நன்மைத்தனம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். அவர் தம்மையே நமது இறுதிக் கதியாகவும், உன்னத சன்மானமாகவும் ஆக்கி வைத்திருக்கிறார். “நானே வழி” என்று தம்மைப் பற்றி அறிவித்த கிறீஸ்துநாதரின் வழியாக அவரை அடையும் வழியை அவர் நமக்குக் காட்டியுள்ளார்.
சர்வேசுரனுடைய சிருஷ்டிகள் என்ற முறையில் அவரோடு நமக்குள்ள உறவை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மோட்சத்தில் அவரைச் சொந்தமாகக் கொண்டிருப்பதற்கு, அல்லது, நாம் வழக்கமாகக் கூறுவது போல, நம் ஆத்துமங்களைக் காத்துக் கொள்வதற்கு, அவர் சித்தங் கொள்ளுகிறபடியும், ஆசிக்கிறபடியும் அவரை நேசித்து, அவருக்கு ஊழியம் செய்ய நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இனி, நாம் நமது சொந்த கர்வ சிந்தனையால் சூழப் பட்டிருக்கும் போது, நாம் சிந்திக்கிற, சொல்கிற, செய்கிற எல்லாமுமே நம் சுயத்தைச் சுற்றியே இயங்குகிறது. ஆயினும் இதை நாம் உணர்வதில்லை. கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்கிறவர்கள், சர்வேசுரனைத் தேடுகிறவர்கள் என்று நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொண்டாலும், அதையே நாம் நம்ப முயற்சித்தாலும் கூட, நாம் நிஜத்தில் சுயநலவாதிகளாகவே இருக்கிறோம்.
சுய தேடலுக்கு எதிரான போராட்டம் நம் சொந்த ஆளுமைக்கு உள்ளேயே நிகழ்கிறது. குறிப்பாக, அது நம் சித்தத்தில் நிகழ்கிறது. சுய நேசம் மற்றும் சுய சித்தம் ஆகிய இந்த ஊற்றுக்கண்ணில் இருந்துதான் ஆங்காரமும், மற்ற தலையாய பாவங்களும் பிறந்து வருகின்றன. அங்கேதான் அவை பெரியதும், சிறியதுமாகிய தீமைகளின் ஒரு பெரும்படையைக் கருத்தாங்கிப் பெற்றெடுக்கின்றன. இந்தச் சுய தேடலே நம்மைப் பலமாகப் பற்றிப் பிடித்து நடத்துகிற உந்து சக்தியாக இருக்கும் போது, நம் ஆண்டவர் கற்பித்தபடி, நம்மை நாம் மறுதலிப்பது பெரும்பாலும் இயலாத காரியமாக இருக்கும். நம்மை நாம் மறுதலிப்பதற்கு, தேவ சிநேகம், பிறர் சிநேகம், பரித்தியாகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை, தாராள குணம், இன்னும், கடமையும், புண்ணியமும் எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க நம்மைத் தூண்டுகின்றனவோ, அவை அனைத்தையும் கடைப்பிடிப்பது அவசியம். இதற்குப் பதிலாக நம் சுய நேசமானது நம்மில் உள்ள துர்க்குணங்களைச் சீராட்டி வளர்க்கிறது. நாமும் தொடர்ந்து அவற்றின் கண்ணிகளில் அதிகமதிகமாக சிக்கிக் கொள்கிறோம்.
சுய நேசத்தின் பாதையிலேயே தொடர்ந்து செல்வது, சர்வேசுரனுடைய சிநேகத்தைத் தொடர்ந்து மறுதலிப்பதற்கு ஒப்பாகும். இத்தகைய ஒரு பாதை இரட்சணியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஒரு ஆத்துமம் சுய நேசம், சுய சித்தம் ஆகியவற்றிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, சர்வேசுரனுக்காக மட்டுமே ஜீவிக்கவில்லை என்றால், அதாவது, அது அர்ச்சிக்கப்படவில்லை என்றால், அது மோட்சத்திற்குள் நுழைவது மிக அரிது. இரட்சிக்கப் படுகிறவர்களில் அநேகருக்கு இந்த சுத்திகரிப்பில் பெரும்பகுதி உத்தரிக்கிற ஸ்தலத்தில் செய்யப்பட வேண்டியிருக்கலாம். ஏனெனில் அவர்களுடைய ஆத்துமங்கள் இந்த உலகத்தில் சுய மறுதலிப்பைக் கொண்டு தங்களைச் சுத்திகரிக்காமல் இருக்கலாம். ஆனால், நாம் சாகும் வரையிலும் தேவ சித்தத்தை மறுத்து நம் சுய சித்தத்தையும், சுய நேசத்தையும் மட்டுமே தேடுகிறவர்களாக இருந்தால், நித்தியத்திற்கும் நம்மை மறுதலிக்கும்படி சர்வேசுரன் தூண்டப்படுவார். ஏனெனில் நாம் அவரை மறுதலித்திருக்கிறோம். இத்தகைய ஒரு மறுதலிப்பு நித்திய ஆக்கினையேயன்றி வேறல்ல. அதன் பின் நம் நிலை எப்போதும் சுய நேசத்திலும், சர்வேசுரனின் மீதான வெறுப்பிலும் ஊன்றியிருக்கும். நரகத்தில் நாம் முழு மூடர்களாய், நம்மையே மையமாகக் கொண்டிருப்போம். இத்தகைய ஒரு ஆங்கார மனோபாவம் முடிவேயில்லாத ஒரு தாங்க முடியாத வாதைக்கு முழுவதும் தகுதியுள்ளதாக இருக்கிறது. இடையறாது கடவுளை நோக்கி ஈர்க்கப் பட்டாலும், நித்தியத்திற்கும் தன்னோடு ஒன்றித்திருக்கிற கடவுளின் மீதான வெறுப்பு, அவருக்கும் அந்த ஆத்துமத்திற்குமிடையே ஒரு சுவராக நின்று தடுக்கிற வாதைதான் அது.
ஏழு தலையான பாவங்களும் என்னென்ன மாறுவேடங்களில் மறைந்திருக்கின்றன என்பதைப் பற்றிய அறிவு, நம்மையே நாம் அறிந்து கொள்ள நமக்கு உதவக் கூடும். மேலும் அந்தப் பாவங்களுக்கு எதிரான புண்ணியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், வெற்றிகரமாக அவற்றை எதிர்த்துப் போராடவும் அந்த அறிவு நமக்கு உதவுகிறது. நாம் அறியாத, நாம் காணாத, அல்லது நாம் நம் நண்பன் என்று நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு எதிரியோடு போர் தொடுப்பது என்பது இயலாத காரியம். இருந்தாலும் இந்த ஏழு தீமைகளின் விஷயத்தில், குறிப்பாக ஆங்காரம், சோம்பல் ஆகியவற்றின் விஷயத்தில், நமக்கு இதுதான் நிகழ்கிறது.
தலையான பாவங்களின் இயல்பைப் பற்றி அறியச் செய்வதும், ஒரு குறிப்பிட்ட தலையான பாவத்தில் வேரூன்றியுள்ள பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றையாவது குறைந்தபட்சம் குறித்துக் காட்டுவதும்தான் இந்தச் சிறு நூலின் நோக்கமாக இருக்கிறது. இந்த ஏழு தீமைகளின் தன்மை, அவற்றின் பல்வேறு அளவுகள், மற்றும் அவை தங்களுக்குள் கொண்டுள்ள உறவுகளைப் பற்றிய இந்த அறிவு, இந்த விஷயத்தில் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்வதைக் கடினமாக உணர்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். ஏனெனில் ஆத்தும சோதனை என்பது பெரும்பாலும் நமக்கு இந்தத் தலையான பாவங்களின் பெயர்களை மட்டுமே தருகின்றது.
ஒரு பழங்கால எழுத்தாளர், அக்காலத்தின் உணர்வைத் தமக்குள் கொண்டவராக, இந்த ஏழு தலையான பாவங்களை மிருகங்களின் வடிவங்களில் உருவகப் படுத்துவதன் மூலம் அவற்றின் தீய தன்மையை நமக்குக் கற்பிக்கிறார். ஆங்காரம் ஒரு சிங்கமாகக் காட்டப் படுகிறது. கோபமானது, தன் மூக்கின் மீதுள்ள ஒற்றைக் கொம்பைக் கொண்டு தனக்கு எதிர்ப்படுகிற அனைத்தையும் முட்டுகிற ஒற்றைக் கொம்பு மிருகத்தாலும் (Unicorn), மோகம் தேளாகவும், உலோபித்தனம், நரியாகவும், போஜனப் பிரியம், பேராசையுள்ள பன்றியாகவும், காய்மகாரம் நச்சுப் பாம்பாலும், சோம்பல் கரடியாலும் குறித்துக் காட்டப் படுகின்றன.
“ஆங்காரம், திமிர், காய்மகாரம், கோபம், மற்றும் இந்த வேர்களிலிருந்து முளைத்து வளர்கிற எண்ணற்ற மற்ற பாவங்களுக்குரிய சோதனைகளை நம்மில் தூண்டுவது பசாசுதான்” என்று இதே எழுத்தாளர் கூறுகிறார். ஏனென்றால் துர்க்குணங்களின் பாவங்கள், குறிப்பாக மனத்தின் பாவங்களாக, அல்லது ஆன்ம பாவங்களாக இருக்கின்றன. அவை தங்களில் மற்ற பாவங்களை விட அதிக கொடியவைகளாக இருக்கின்றன.
நம் மாம்சமானது, மோகம், போஜனப் பிரியம், ஆத்துமத்தின் குளிர்ந்த நிலை, சுய பற்றுதல் ஆகியவற்றை நோக்கி இயல்பாக நம்மை ஈர்க்கிறது. இவை சரீரப் பாவங்களாக இருக்கின்றன. மனிதருடைய பார்வையில் இவை மிகக் கேவலமானவையாகவும், அவமானம் வருவிப்பவையாகவும் இருக்கின்றன.
இறுதியாக, சொத்துக்கள், செல்வச் செழிப்பு, மகிமை மற்றும் இன்னபிற திருப்திகளின் மீது பேராசை கொள்ளும்படி உலகம் நம்மைக் கட்டாயப் படுத்துகிறது. ஆனால் இவை வெறும் மாயத் தோற்றங்கள் மட்டுமே. நிழலானவைகளை நிஜமெனக் கருதி நாம் அவற்றை நேசிக்கும்படி இவை நம்மை வஞ்சிக்கின்றன. அசுத்த அரூபி ஒன்று ஒரு மனிதனை விட்டு வெளியேறி, வனாந்தரங்களில் தான் தங்குவதற்கு ஓர் இடம் தேடிச் சுற்றியலைந்து, அப்படியொன்றும் காணாமல், தன்னை விடக் கொடிய வேறு ஏழு பேய்களைச் சேர்த்துக் கொண்டு அந்த மனிதனிடமே திரும்பி வந்த உவமையை (மத். 12:45) சேசுநாதர் கூறிய போது அவர் இந்த ஏழு தீமைகளையே மறைமுகமாகக் குறித்துக் காட்டினார்.
சுபாவத்தில், எவ்வளவு அடிக்கடி இந்தப் பாவங்களின் ஏதாவது ஒரு பாவத்தின் சோதனைக்கு நாம் சம்மதிக்கிறோமோ, அவ்வளவுக்கு ஆழமாக அந்தப் பாவம் நம்மில் வேரூன்றுகிறது. காலம் செல்லச் செல்ல, பாவப் பழக்கங்கள் நம்மில் தோன்றுகின்றன. அவற்றிலிருந்து தப்பிப்பது வெகு கடினமாகி விடுகிறது. நாம் தொடுக்க வேண்டிய பெரிய போராட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால், சிறிய பாவங்களுக்கு எதிராகப் போராடுவதில் எப்போதும் நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.