1. உணவின் காரியத்தில், முடிந்த வரை, எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் உண்ணும்படி உங்களைக் கட்டுப்படுத்துங்கள். அர்ச் அகுஸ்தீனார் கடவுளிடம் பேசிய இந்த வார்த்தைகளைச் சிந்தியுங்கள்: 'ஓ என் சர்வேசுரா, ஒரு தீர்வாக மட்டுமே உணவு உட்கொள்ளும்படி நீர் எனக்குக் கற்பித்திருக்கிறீர். ஆ! ஆண்டவரே, இங்கே சில சமயங்களில் அளவைத் தாண்டி உணவு உட்கொள்ளாதவர்கள் எங்களில் யாருண்டு? அப்படிப்பட்ட ஒருவன் இருந்தால், அந்த மனிதன் மேலானவன், அவன் உம் திருநாமத்திற்கு மாபெரும் மகிமை செலுத்துபவனாக இருக்கிறான் என்று நான் சொல்வேன்"
2. நீங்கள் தேவையின் வரம்பைத் தாண்டாதபடியும், இன்பத்திற்கு உடந்தர உங்களையே நீங்கள் அனுமதியாதபடியும், கடவுளிடம் அடிக்கடி ஜெபியுங்கள், அவர் தம் வரப்பிரசாதத்தைக் கொண்டு உங்களுக்கு உதவும்படி ஒவ்வொரு நாளும் ஜெபியுங்கள்.
3. தேவைக்காகவோ, அல்லது வசதியின் நிமித்தமாகவோ அன்றி, உணவுகளுக்கு இடையில் எதையும் உட்கொள்ளாதீர்கள்.
4. ஒருசந்தி, சுத்தப்போசனத்தை அனுசரியுங்கள். ஆனாலும் அவற்றை கீழப்படிதலின் கீழும், இரகசியமாகவும் மட்டுமே அனுசரியுங்கள்.
5. சரீர ரீதியான ஏதாவது ஒரு திருப்தியை அனுபவிப்பது உங்களுக்குத் தடை செய்யப்படவில்லை , ஆனாலும் கடவுளுக்கு நன்றி கூறி, ஒரு பரிசுத்தமான, சுத்தக் கருத்தோடு அப்படிச் செய்யுங்கள்.
6. உங்கள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள். இதில் எல்லா மந்த உணர்வையும், விடிந்த பிறகும் சுகமாக படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதையும் தவிருங்கள். உங்களால் முடியுமானால் படுக்கைக்குச் செல்லவும், விழித்தெழவும் ஒரு நேரத்தைக் குறித்துவிட்டு, அதைக் கண்டிப்பான முறையில் கடைபிடியுங்கள்.
7. பொதுவாக, தேவையான அளவுக்கு மட்டும் ஓய்வெடுங்கள்; உங்கள் உழைப்பை அலட்சியம் செய்யாமல், வேலை செய்ய தாராளமாக உங்களை ஒப்புக்கொடுங்கள். உங்கள் உடல் அளவுக்கு அதிகமாக சோர்ந்துபோகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனாலும் உடலுக்கு அதிக சௌகரியமும், சொகுசும் தந்துவிடாதபடி கவனமாயிருங்கள். அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஒரு சிறிதளவு மட்டுமே நீங்கள் உணர்ந்தாலும் கூட, அந்த நிமிடமே அதை ஓர் அடிமையைப் போல நடத்துங்கள்.
8.நீங்கள் சற்று சுகவீனமாக உணர்ந்தால், உங்கள் மோசமான மனநிலையின் காரணமாக மற்றவர்களுக்கு ஒரு தொந்தரவாக இருப்பதைத் தவிருங்கள்; உங்களுக்காக முறையிடும் வேலையை உங்கள் தோழர்களிடம் விட்டுவிடுங்கள்; உங்களைப் பொறுத்தவரை, நம் எல்லாப் பலவீனங்களையும் மெய்யாகவே சுமந்து கொண்ட தேவ செம்மறிப்புருவையானவரைப் போல பொறுமையாகவும், மௌனமாகவும் இருங்கள்.
9. மிக அற்பமான ஒரு வியாதியை, உங்கள் அன்றாட வேலைகளைப் பிறரிடம் ஒப்படைக்க அல்லது அவற்றைச் செய்யாமல் விலக்க, ஒரு காரணமாக்கி விடாதபடி விழிப்பாயிருங்கள். 'விதிகளாக மாறுகிற ஒவ்வொரு விதிவிலக்கையும் கொள்கை நோயைப் போல ஒருவன் அருவருத்து ஒதுக்க வேண்டும்" என்று அர்ச் பெர்க்மான்ஸ் அருளப்பர் எழுதியுள்ளார்.
10. நோய் என்னும் சோர்வூட்டுகிற ஒறுத்தலை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; தாழ்ச்சியோடும், பொறுமையோடும், நிலைமையோடும் அதை அனுசரியுங்கள்.