1917-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி நண்பகல் வேளை. பாத்திமாவில் கோவா தா ஈரியா என்ற மலைச் சாரலில், ஏறக்குறைய ஒரு மீட்டர் உயரமுள்ள அஸீன் ஹேரா என்ற மரத்தின் கிளைகளில் ஒரு ஒளியுருண்டையில் நின்றபடி மாதா காட்சியருளினார்கள்.
மாதா: “பயப்படாதீர்கள்! உங்களுக்கு ஒரு தீமையும் செய்ய மாட்டேன்.”
லூஸியா: “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
மாதா: "நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்.”
லூஸியா: “உங்களுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?”
மாதா: “நீங்கள் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் 13-ம் தேதியில் இதே நேரம் இங்கு வர வேண்டும். நான் என்ன விரும்புகிறேன் என்று பின்னால் கூறுவேன்.”
லூஸியா: “நான் மோட்சத்திற்குப் போவேனா?”
மாதா: “ஆம். நீ போவாய்.”
லூஸியா: “ஜஸிந்தா?” -
மாதா: - "அவளும் போவாள்.”
லூஸியா: "பிரான்சீஸ்?”
மாதா: - "அவனும் அங்கு போவான். ஆனால் அதற்கு முன் அவன் அநேக ஜெபமாலைகள் சொல்ல வேண்டும்.”
லூஸியா: “பிரான்சிஸ் உங்களை ஏன்பார்க்க முடியவில்லை?”
மாதா: "அவனை ஜெபமாலை சொல்லச் சொல். அப்போது என்னைக் காண்பான்.”
இதை லூஸியா பிரான்சிஸிடம் சொல்ல, அவன் உடனே ஜெபமாலையை எடுத்து ஜெபிக்கத் தொடங்கினான். ஆறு ஏழு அருள்நிறை மந்திரம் சொல்லவும் திடீரென அவனும் மாதாவைக் காண்கிறான்.
“தஸ்நேவிஸ் மேரி மோட்சத்திலிருக்கிறாளா?”
“ஆம். அவள் மோட்சத்திலிருக்கிறாள்.”
“அமெலியா?"
“அவள் உலக முடிவு வரை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்பாள்.”
மாதா தொடர்ந்து: “கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் உங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்கவும், அவர் உங்களுக்கு அனுப்ப விரும்பும் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளவும் மனதாயிருக்கிறீர்களா?”
“ஆம், மனதாயிருக்கிறோம்.”
“அப்படியானால் நீங்கள் அதிகம் துன்பப்பட நேரிடும். ஆனால் சர்வேசுரனின் வரப்பிரசாதம் உங்களைத் தேற்றும்.”
அப்போது நம் அன்னை தன் கரங்களை விரித்து அக்குழந்தைகள் மீது ஒரு தெய்வீக ஒளியைப் பாயவிட்டார்கள். அது, அவர்கள் அந்த ஒளியாக இருந்த சர்வேசுரனிடத்தில் தங்களையே காணும்படி செய்தது. அதே சமயத்தில் அவர்கள் ஒரு அந்தரங்க ஏவுதல் பெற்று: “ஓ! மிகவும் பரிசுத்த திரித்துவமே! உம்மை ஆராதிக்கிறேன். என் தேவனே, என் தேவனே, மிகவும் திவ்விய நற்கருணையில் உம்மை நேசிக்கிறேன்” என்று தங்கள் இருதயங்களில் திரும்பவும் திரும்பவும் சொன்னார்கள்.
மாதா மீண்டும் தொடர்ந்து: “உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும், யுத்தம் முடிவடையவும் ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லி வாருங்கள்' என்று கூறினார்கள்.