1. கெடாமல் பிரமாணிக்கமாயிருந்த சம்மனசுகள் எத்தனை?
இந்தச் சம்மனசுகளின் தொகை எவ்வளவென்று தெரியதானாலும், எண்ணிக்கையில்லாத பேர்கள் பிரமாணிக்கமா யிருந்தார்கள் என்று சொல்ல வேண்டும். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பிரமாணிக்கமாயிருந்ததாகச் சில வேத சாஸ்திரி உத்தேசிக்கிறார்கள்.
2. அவர்களுக்குத் தலைமையான சம்மனசின் பெயர் என்ன?
அர்ச். மிக்கேல் சம்மனசானவர். அவர்தான் நல்ல சம்மனசுகளின் கூட்டத்துக்குத் தலைவராயிருந்து: “சர்வேசுர னுக்குச் சரியயாத்தவன் யார்?” என்று ஆர்ப்பரித்து லூசிப்பேரையும், அவனோடு சேர்ந்து கெட்ட சம்மனசுகளையும் நரக பாதாளத்தில் தள்ளினார் (காட்சி. 12:7).
3. பிரமாணிக்கமுள்ள சம்மனசுகளுக்குச் சர்வேசுரன் கொடுத்த சம்பாவனை என்ன?
சர்வேசுரன் அவர்களைத் தேவ இஷ்டப்பிரசாதத்தில் உறுதிப்படுத்தி நித்திய மோட்ச பாக்கியத்தை அவர்களுக்குத் தந்தருளினார்.
4. அவர்களுடைய குணம் எப்பேர்ப்பட்டது?
நல்ல சம்மனசுகள் பரிசுத்தம், நற்குணம், அழகு செளந்தரியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
5. இனி அவர்கள் பாவத்தில் விழக்கூடியவர்களாயிருக் கிறார்களா?
அவர்கள் தங்கள் கடைசிக்கதியை அடைந்து தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களுடைய மனச் சுயாதீனம் நன்மையான காரியத்தைத் தெரிந்து கொள்ளக் கூடுமொழிய மற்றப்படியல்ல.
6. அவர்களுடைய சீவியம் எப்பேர்ப்பட்டது?
மோட்சத்தில் தேவசிநேகம், ஆராதனை, தோத்திரம், நன்றியறிதல் முதலிய முயற்சிகள் செய்வதே இவர்களுடைய உன்னத சீவியம்.
7. அவர்களுடைய வேலை என்ன?
(1) சிலர் சர்வேசுரன் முன்பாக நின்று கொண்டு இடைவிடாமல் அவரை ஆராதித்துத் தோத்தரிப்பார்கள். உதாரண மாக பத்திச்சுவாலகர் (இசை. 6:2).
(2) சிலர் சர்வேசுரனுடைய சித்தத்தையும், கட்டளையையும் மனிதருக்கு அறிவிப்பார்கள். உதாரணமாக: கபிரியேல் (லூக். 1:26).
(3) வேறு சிலர் சர்வேசுரனுடைய கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். ஒரு சம்மனசு ஆதாமையும், ஏவாளையும் சிங்காரத் தோப்புக்கு வெளியே துரத்தினார் (ஆதி. 3:24).
(4) மனிதருடைய மன்றாட்டைச் சர்வேசுரனுடைய சந்நதிக்குக் கொண்டு போவார்கள். இப்படியே அர்ச். இரஃபாயேல் (தோபி. 12:13).
(5) பூமியிலே திரிகிற பசாசுகளை எதிர்த்துத் தள்ளுவார்கள் (தோபி. 8:13).
(6) தங்கள் காவலில் ஒப்பிக்கப்பட்டவர்களை ஆபத்தினின்று காப்பாற்றி வருவார்கள் (தானி. 6:22).
8. சகல சம்மனசுகளும் மனிதர்களுக்குச் சகாயமாய் அனுப்பப்பட மாட்டார்களோ?
ஐந்து கீழான விலாசங்களைச் சேர்ந்த சம்மனசுகள் அனுப்பப்படுவார்கள் என்றும், நான்கு மேலான விலாசங்களைச் சேர்ந்தவர்களோ அனுப்பப்படாமல் சர்வேசுரனுடைய சந்நிதியில் எப்பொழுதும் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றும் அர்ச். அக்வீனாஸ் தோமாஸ் உத்தேசிக்கிறார்.