1. பலனற்ற எல்லாக் கற்பனைகளையும், நேரத்தை வீணடிப்பவையும், ஆத்துமத்தைச் சிதறடிப்பவையும், வேலை மற்றும் தீவிரமுள்ள காரியங்களைச் சுவையற்றவையாகச் செய்பவையுமான, நற்பாதிப்பை ஏற்படுத்தாத, அல்லது கண்டபடி அலைகிற எல்லாச் சிந்தனைகளையும் உங்கள் மனதிற்கு மறுப்பதன் மூலம் அதை ஒறுத்து அடக்குங்கள்.
2. மனச்சோர்வூட்டுவதும், கவலை தருவதுமான ஒவ்வொரு சிந்தனையும் உங்கள் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும். பிற்பாடு உங்களுக்கு நிகழக்கூடிய எல்லாவற்றையும் பற்றிய மனக்கிலேசம் உங்களுக்குக் கொஞ்சமும் கவலைத் தரக்கூடாது. உங்களையும் மீறி உங்களைத் தொந்தரவு செய்கிற கெட்ட சிந்தனைகளைப் பொருத்தவரை, அவற்றை விலக்குவதில், அவற்றை உங்கள் பொறுமைக்கான காரணமாக ஆக்கிக்கொள்ளுங்கள். தன்னிச்சையானவையாக இருப்பதால், அவை சாதாரணமாக உங்களுக்கு பேறுபலனுக்கான ஒரு வாய்ப்பாக இருக்கும்.
3. உங்கள் எண்ணங்களிலும், உணர்வுகளிலும் பிடிவாதத்தைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் கருத்தைத் தருவதும், வெளிப்படையாகப் பேசுவதும் உங்கள் கடமையாக இல்லாத பட்சத்தில், மற்றவர்களின் தீர்மானங்கள் வெற்றி பெற நீங்கள் மனமுவந்து அனுமதிக்க வேண்டும்.
4. உங்கள் மனதின் இயல்பான உறுப்பை, அதாவது உங்கள் நாக்கை அடக்குங்கள். உங்கள் சபை விதி உங்களுக்கு மவுனத்தைக் கடைப்பிடிப்பதைப் பரிந்துரைத்தாலும் சரி, அல்லது நீங்களாகவே அதை உங்கள் மீது சுமத்திக் கொண்டாலும் சரி, அதை சந்தோஷமாக அநுசரியுங்கள்.
5. நீங்களே பேசுவதற்குப் பதிலாக மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள். இருந்தாலும் உரிய முறையில் பேசுங்கள். மற்றவர்கள் தங்கள் எண்ணங்களைச் சொல்ல விடாமல் தடுக்கும் அளவுக்கதிகமாகப் பேசும் வழக்கம், மற்றும் அவர்கள் சொல்வதில் ஆர்வமில்லாதது போலத் தோன்றி அவர்களை நோகடிக்கிற, தேவைக்கும் குறைவாகப் பேசும் வழக்கம் ஆகிய இரண்டையும் தவிர்த்துவிடுங்கள்.
6. பேசிக் கொண்டிருக்கிற யாரையும் ஒருபோதும் இடைமறிக்காதீர்கள். அவர் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கு முன்பே, அந்தக் கேள்விக்கு முந்திக் கொண்டு பதில் சொல்வதன் மூலம் முன்னதாகவே செயல்படுவதைத் தவிருங்கள்.
7. எப்போதும் மிதமான ஒரு குரல் தொனியைக் கொண்டிருங்கள். அது ஒருபோதும் திடீரென ஒலிப்பதாகவோ, கூர்மையானதாகவோ இல்லாமலிருக்கட்டும் நிரம்ப, அதீதமான, பயங்கரமான வார்த்தைகளைத் தவிருங்கள்; எல்லா மிகைப்படுத்ததலையும் தவிருங்கள்.
8. எளிமையையும், கபடற்ற நேர்மையையும் நேசியுங்கள். சில குறிப்பிட்ட பக்தியுள்ள மக்கள் செய்கின்ற மனவுறுத்தலின்றி ஏற்றுக் கொள்கிற பாசாங்குகள், சாக்குப் போக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளுதல், தெளிவின்றி மலுப்பலாகப் பேசுதல் ஆகியவை தேவ பக்தியை வெகுவாகச் சிதைத்து விடுகின்றன.
9. எந்த ஒரு கரடுமுரடான, அருவருப்பான, அல்லது தேவையற்ற வார்த்தையையும் கூட கவனமாக விலக்குங்கள். ஏனெனில், அவை ஒவ்வொன்றிற்கும் தீர்வை நாளில் நம்மிடம் தாம் கணக்குக் கேட்கப் போவதாக நம் ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார்.
10. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் சித்தத்தை, அதாவது முடிவான மனநிலையை ஒறுத்துவிடுங்கள். உங்கள் சொந்த விருப்பு, வெறுப்பு எதையும் கருத்தில் கொள்ளாமல், எது கடவுளின் நல்ல மகிழ்ச்சியாகவும், தேவ பராமரிப்பின் விதியாகவும் இருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ, அதை நோக்கி உங்கள் சித்தத்தை இடைவிடாமல் வளையுங்கள். கடவுளின் மகிமையோடும், உங்கள் அந்தஸ்தின் கடமைகளோடும் தொடர்பில்லாத காரியங்களில் உங்களைவிடத் தாழ்ந்தவர்களுக்கும் கூட பணிந்திருங்கள்.
11. உங்கள் சிரேஷ்டர்களின் உத்தரவுகளுக்கும், அவர்களுடைய ஆசைகளுக்கும் கூட மிகச் சிறிய அளவில் கீழ்ப்படியாதிருப்பது, கடவுளிடம் எடுத்துரைக்கப்படுகிறது என்பதுபோல எண்ணிக்கொள்ளுங்கள்.
12. அவமானப்படுத்தப்படுவதை நீங்கள் நேசிக்கும் போதும், நீங்கள் யாருக்குப் பணிந்திருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரோ, அவர்களுக்கு மிக உத்தமமான முறையில் கீழ்ப்படியும் போதும், எல்லா ஒறுத்தல்களிலும் மிகச் சிறந்த ஒறுத்தலை நீங்கள் அனுசரிப்பீர்கள் என்பதை நினைவில் கொண்டிருங்கள்.
13. நீங்கள் மறக்கப்படுவதையும், வெறுமை என்று மதிக்கப்படுவதையும் நேசியுங்கள். இதுவே அர்ச். சிலுவை அருளப்பரின் அறிவுரையாக இருக்கிறது. இதுவே கிறீஸ்துநாதர் அநுசாரத்தின் ஆலோசனையாக இருக்கிறது. உங்களைப் பற்றி நன்றாகவோ, மோசமாகவோ பேசுவது அரிதாகவே இருக்கட்டும். ஆனாலும் மவுனமாயிருப்பதன் மூலம் நீங்கள் மறக்கப்படும்படி செய்ய முயலுங்கள்.
14. ஒரு அவமானத்தையோ, கண்டித்தலையோ எதிர்கொள்ளும்போது, முறுமுறுக்கும்படியும், சுயவிரக்கம் கொள்ளும்படியும் சோதிக்கப்படுகிறீர்கள். தாவீதோடு சேர்ந்து: 'எவ்வளவு கூடுதலாகத் தாழ்த்தப்படுவேனோ, அவ்வளவுக்கு எனக்கு நல்லது! நான் தாழ்த்தப்படுவது நல்லது!" என்று சொல்லுங்கள்.
15. மேலோட்டமான ஆசைகளுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். நான் ஒரு சில காரியங்களை ஆசிக்கிறேன். நான் ஆசிக்கிற சிறிய காரியத்தை, மிகக் குறைவாகவே ஆசிக்கிறேன்" என்றார் அர்ச் பிரான்சிஸ் சலேசியார்
16. தேவ பராமரிப்பால் உங்களுக்கு நியமிக்கப்பட்ட ஒறுத்தல்களையும், சிலுவைகளையும், தேவ பராமரிப்பு உங்களை வைத்துள்ள ஜீவிய அந்தஸ்துக்குச் சொந்தமான கடும் உழைப்புகள் ஆகியவற்றை மிக உத்தமமான அமைந்த மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். நம்முடைய தெரிவு குறைவாயிருக்கிற இடத்தில், கடவுளின் நல்ல மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது" என்றார் அர்ச். பிரான்சிஸ். நம் சிலுவைகளைத் தேர்ந்தெடுக்கவும், நம் சொந்த சிலுவையிலிருந்து வேறுபட்ட ஒரு சிலுவையைக் கொண்டிருக்கவும், இடைவிடாமல் தொடர்ந்து இருப்பதன் மூலம் நம்மைக் களைப்படையச் செய்கிற ஒரு பாரமற்ற சிலுவையைவிட, குறைந்த பட்சம் சற்று புகழ் உள்ளதாக இருக்கிற ஒரு பாரமான சிலுவையைச் சுமக்கவும் நாம் விரும்புவோம்; வெறும் மாயத் தோற்றம்! வேறொரு சிலுவையை அல்ல, நம் சிலுவையைத்தான் நாம் சுமக்க வேண்டும். அதன் பேறுபலன் அது எந்த விதமான சிலுவை என்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக, எவ்வளவு உத்தமமாக அதை நாம் சுமந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.
17. 'சோதனைகளாலும், மனவுறுத்தல்களாலும், ஞான வறட்சியாலும் குழப்படைய உங்களை அனுமதிக்காதீர்கள். ஞான வறட்சியின் காலத்தில் நாம் செய்வது, ஆறுதலின் காலத்தில் நாம் செய்வதை விட, கடவுளின் பார்வையில் அதிக பேறுபலன்களைக் கொண்டுள்ளது" என்கிறார் ஜெனீவாவின் அர்ச்சிஷ்ட மேற்றிராணியார். (இந்தக் கட்டுரையில் அடிக்கடி ஜெனீவாவின் மேற்றிராணியார் என்று குறிப்பிடப்படுபவர் அர்ச் பிரான்சிஸ் சலேசியார்தான்.)
18. உங்கள் குறைபாடுகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுக் கலங்காதீர்கள். மாறாக, அவற்றின் காரணமாக உங்களையே தாழ்த்துங்கள். ஒருவன் தன்னையே தாழ்த்துவது நல்ல காரியம், இதை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள். தன்னைப் பற்றியே குழப்பமடைவதும், கலங்குவதும் எல்லோரும் அறிந்தது. தீயது. ஏனெனில் இந்த விதமான வேதனையிலும் கலக்கத்திலும், சுய நேசம் அதிகப் பெரிதான பங்கு வகிக்கிறது.
19. நம் தைரியத்தைப் பலவீனப்படுத்துகிற கோழைத்தனத்தையும், மனச்சோர்வுறுதலையும் பற்றி ஒரே விதமாக எச்சரிக்கையாயிருப்போம்; மேலும் செயல்படுத்தப்படுகிற அகங்காரமாக மட்டுமே இருக்கிற தகாதத் துணிவைப் பற்றியும் அப்படியே எச்சரிக்கையாய் இருப்போம். எல்லாமே நம் முயற்சிகளைத்தான் சார்ந்துள்ளன என்பதுபோல நாம் உழைப்போம். ஆனாலும் நம் உழைப்பு பயனற்றது என்பதுபோல, தாழ்ச்சி உள்ளவர்களாகவே நிலைத்து இருப்போம்.