மோகம் என்பது பொதுவாக அசுத்ததனம் என்று குறிக்கப் படுகிறது. அசுத்ததனம் ஒரு அவமானகரமான தீமையாகும். ஏனென்றால் அது ஒரு நல்ல, அழகான வல்லமையைப் பாவமாக மாற்றுகிறது. இந்தத் தீமை நிறை கற்புக்கு எதிரானது. நிறைகற்பு மனிதர்களை சம்மனசுக்களைப் போலாக்குகிறது என்று நம் ஆண்டவர் கூறுகிறார். “திருமணமானவர்களுக்கு புலன் ஆசைகளையும், இன்பங்களையும் முறைப்படுத்துவதும், மணமாகாதவர்களுக்கு அவற்றை முற்றிலுமாகத் தடை செய்வதுமாகிய புண்ணியமே கற்பு” என்று அர்ச். அக்குயினாஸ் தோமையார் அதை வரையறுக்கிறார். இவ்வாறு மோகம், அல்லது அசுத்ததனம் என்பது சட்டத்திற்கு எதிரான இன்பங்களை, விசேஷமாக தொடுதல் என்னும் புலனைக் கொண்டு அடையத் தேடுகிற செயலாகும். அசுத்ததனத்தின் பாவங்கள் ஆத்துமத்தைக் கறைப்படுத்துவதோடு, தேவ இஸ்பிரீத்துவானவரின் ஆலயமும், சரீர உத்தானத்தின் போது, என்றென்றைக்கும் மகிமைப்படுத்தப் படப் போவதுமாகிய சரீரத்தையும் கெடுத்து விடுகிறது.
மோகத்தின் வழியாகக் கட்டிக் கொள்ளப்படுகிற விபச்சாரம், திருமணத்திற்கு முந்தைய சரீர இன்பம், முறையற்ற இன்பம், கற்பழிப்பு, கருத்தடை, கருச்சிதைவு, தனிப்பாவம் ஆகியவற்றின் பெயர்களும் கூட அடக்கவொடுக்கமுள்ள செவிகளுக்கு வேதனை தருபவையாக உள்ளன. இதைப் பற்றியே அர்ச் சின்னப்பர், “இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படக் கூடாது” என்கிறார் (எபே. 5:3). அவற்றைப் பற்றிய ஒரு திகிலுணர்வை மனத்தில் தூண்டியெழுப்புவதற்காக மட்டுமே நாம் அவற்றின் பெயர்களை உச்சரிக்க வேண்டும்.
அசுத்ததனமானது நம் எல்லாப் புலன்களையும் தனக்குள் வைத்து மூடிக் கொள்வதோடு, அவற்றின் வழியாகவே நம் ஆத்துமத்திற்குள் நுழைகிறது. ஞான மதிப்பீடுகளை நாம் காண முடியாமல் அது நம் கண்களைக் குருடாக்குகிறது, நம் மனங்களை இருட்டடிக்கிறது, நம் சித்தங்களைப் பலவீனப் படுத்துகிறது, சர்வேசுரனுடைய இடத்தில் படைக்கப்பட்ட ஒரு சிருஷ்டியை ஆராதிக்கும் நிலைக்கு நம்மைத் தள்ளி விடுகின்றது. அசுத்த சிந்தனைகளால் மனத்தின் பாவங்களைக் கட்டிக் கொள்கிறோம். கண்களை விநோதப் பிரியத்திற்கு விட்டுக் கொடுப்பதாலும், ஆட்களையும், படங்களையும், பொருட்களையும் கெட்ட கண் கொண்டு பார்ப்பதாலும், பாவகரமான வாசகங்களை வாசிப்பதாலும் கண்களின் பாவங்களைச் செய்கிறோம். நாகரீகமற்ற பேச்சுக்களையும், அசுத்தமான, இச்சை தரும் அருவருப்பான இரகசியப் பொருள் கொண்ட கதைகளையும், நகைச்சுவைத் துணுக்குகளையும், பாடல்களையும் கேட்பதன் மூலமாக காதுகளின் பாவங்களைச் செய்கிறோம். காம இச்சையைத் தூண்டும் துர்மணங்களை முகர்வதன் மூலமாக மூக்கின்மீ பாவங்களைச் செய்கிறோம். கெட்ட வார்த்தைகள், பாடல்கள் ஆகியவற்றாலும், அசுத்தப் பேச்சுக்களைக் கடிந்து கொள்ளத் தவறுவதாலும் வாயின் பாவங்களைச் செய்கிறோம். புலனின்ப முத்தத்தால் உதடுகளின் பாவங்களையும், அசுத்த தொடுதல்கள், வருடல்கள், தழுவல்கள், அல்லது மற்ற பாவகரமான செயல்களால், கரங்களின் பாவங்களையும், அசுத்த ஆசைகள், தன்னிச்சையாக நம் விருப்பமின்றி நம் மனத்தில் எழும் மோக உணர்வுகளை உடனடியாக அடக்கத் தவறுதல் ஆகியவற்றைக் கொண்டு இருதயத்தின் பாவங்களைச் செய்கிறோம், பிறரைப் பாவத்திற்குத் தூண்டும் பெரும் பாவங்களைச் செய்கிறோம்; தோழர்களால் தூண்டப் பட்டு நாம் பாவங்களைச் செய்கிறோம்.
அசுத்ததனத்திற்குக் கையளிப்பது எல்லா வழிகளிலும் தேவ திட்டத்திற்கு எதிரானதாக இருக்கிறது. மணமானவர்கள் மெய்விவாக பந்தத்தால் அர்ச்சிக்கப்படுகிற சட்டபூர்வமான புலனின்பங்களை அனுபவிக்கும் போதும் கூட, அவர்கள் போதுமான சுய கட்டுப்பாட்டின் மூலம் தங்கள் அந்தஸ்திற்கேற்ப கற்பைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணமானவர்கள் மற்றவர்களோடு தவறான நடத்தையில் ஈடுபடுவது, அவர்களுக்கு இரண்டு மடங்கு மோசமான பாவமாகும். நிறை கற்பு என்பது குருத்துவ, அல்லது துறவறத்திற்குரிய அர்ப்பணக் கற்பாக இருந்தாலும் சரி, அல்லது மணமாகாதவர்களின் கற்பாக இருந்தாலும் சரி, அல்லது மணமானவர்களின் கற்பாக இருந்தாலும் சரி, சர்வேசுரனுடைய ஊழியத்திற்கு நம் சத்துவங்களை அர்ப்பணிப்பதன் அடையாளமாகவே அதை நாம் காண வேண்டும். அப்போது நம்மைச் சூழ்ந்திருக்கிற உலகத்தை உயர்த்துகிற நற்பாதிப்பாக அது இருக்கும்.
பெரும்பாலும் வேறு பல தீமைகள் அசுத்ததனத்தைத் தொடர்ந்து வருகின்றன. அது மனத்தைக் குருடாக்குகிறது; சித்தத்தை வக்கிரமுள்ளதாக்குகிறது; இருதயத்தைக் கடினப் படுத்துகிறது. அது மனஸ்தாபத்தை நிலையற்றதாக்குகிறது; சர்வேசுரனுடைய திருச்சட்டம், விரும்பப்படுகிற இன்பத்தைத் தடை செய்வதால், மோகமானது அவர் மேலேயே ஒரு வெறுப்பை வளர்க்கிறது; மேலும் உலகக் காரியங்களின் மீது ஒரு அதீதமான நேசத்தையும் வளர்க்கிறது; எதிர்காலத் தண்டனை பற்றிய பயத்தை ஏற்படுத்தி, மனக்கவலைக்கு அது நம்மை ஆளாக்குகிறது. மிக அடிக்கடி நோய்களுக்கும், பைத்திய நிலைக்கும் உட்படுத்துகிறது. அதன் பாதையில் கீழ்ப்படியாமை, துர்மாதிரிகை, விசுவாச இழப்பு ஆகியவை பின்தொடர்கின்றன. அடிக்கடி அசுத்த நடவடிக்கைகளின் விளைவாக, மோக பாவி நேர்மையற்ற விதமாகப் பாவசங்கீர்த்தனங்கள் செய்கிறான், தேவத் துரோகமான முறையில் திவ்ய நன்மை உட்கொள்கிறான். மோகம், அல்லது அசுத்ததனமே வேறு எந்தப் பாவத்தையும் விட அதிக ஆத்துமங்களைக் கொல்கிற கொடிய பாவமாக இருக்கக் கூடும்.
வக்கிரம், புலனிச்சை, அசுத்ததனம் ஆகியவை சோம்பேறித்தனத்தாலும், வசதியும், செளகரியங்களும் உள்ள வாழ்வு முறையாலும், போஜனப் பிரியத்தாலும் போஷிக்கப் படுகின்றன. அருவருப்பான, உள்ளர்த்தங் கொண்ட அசுத்த நூல்கள், துர்மாதிரிகையான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அடக்கமற்ற படங்கள், பாவகரமான நடனம், அடக்கமற்ற உடைகள் அணிதல், கெட்ட நண்பர்கள் ஆகியவை நம்மைப் பாவச் செயல்களுக்குள் வழிநடத்திச் செல்லக் கூடும். முதலிலேயே திருமணம் செய்கிற எதிர்பார்ப்பின்றி சேர்ந்து வாழுகிற ஆண் பெண்கள் செய்வது போல, எதிர்பாலாருடன் அதிக நேரம் சேர்ந்திருப்பது பெரும்பாலும் அசுத்ததனத்திற்குரிய சாவான பாவ சந்தர்ப்பமாயிருக்கின்றது.
பரிசுத்ததனத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்
ஜென்மப் பாவத்திற்குரிய ஒரு தண்டனையாகத்தான் நாம் நம் வாழ்நாள் முழுவதும் அசுத்ததனத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்தில் புலன்களையும், சிந்தனைகள், ஆசைகள் மற்றும் பேச்சு ஆகியவற்றையும் அடக்கியாள்வது அவசியமாயிருக்கிறது. அடக்கமான உடை உடுத்துவது, செயல்களில் கட்டுப்பாடு, நம் பொழுதுபோக்கு அம்சங்களை மிகக் கவனத்தோடு தேர்ந்தெடுப்பது ஆகியவை, நம்மிலும், பிறரிலும் பரிசுத்ததனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமானவை. ஒறுத்தல் மற்றும் சுய பரித்தியாக உணர்வு, அடிக்கடி தேவத்திரவிய அனுமானங்களிடம் தஞ்சமடைதல், இஸ்பிரீத்து சாந்துவானவருக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ஜெபம் ஆகியவை, இந்தப் போராட்டத்தில் போர்க் கருவிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டிய வழிகளாகும். நெருப்போடு விளையாடி நாம் நம்மைச் சுட்டுக் கொள்ளக் கூடாது. அசுத்ததனத்தின் பாவ சந்தர்ப்பங்களில் இருந்து கொண்டே, பாவம் செய்யாமலிருக்க நம்மால் முடியாது. தாழ்ச்சியோடும், நம் சொந்த பலத்தில் நம்பிக்கை வையாமலும் நாம் பாவ சந்தர்ப்பங்களிலிருந்து பறந்தோடிப் போக வேண்டும். ஏனெனில் பரிசுத்த வேதாகமம் கூறுவது போல, “ஆபத்தை நேசிக்கிறவன் அதிலேயே மடிவான்” (சர்வப் பிரசங்கி 3:27).
தன்னிச்சையான கெட்ட சிந்தனைகள், அவை எவ்வளவுதான் அசுத்தமானவையாகவும், அருவருக்கத் தக்கவையாகவும் இருந்தாலும், அவை பாவங்கள் அல்ல. அவற்றிற்கு சம்மதிப்பதால் மட்டுமே நாம் பாவம் கட்டிக் கொள்கிறோம். சேசுநாதருடையவும், மாமரியினுடையவும் திருப் பெயர்களைக் கூவியழைத்துக் கொண்டிருக்கும் வரையிலும் நாம் ஒருபோதும் தோற்றுப்போக மாட்டோம். பாவ சோதனைகளின் தாக்குதல்களின் போது, “சர்வேசுரனை நோகச் செய்வதை விட சாவதே மேல்” என்னும் நம்முடைய பிரதிக்கினையைப் புதுப்பித்துக் கொள்வது உத்தமப் பலன் தரும் காரியம். அடிக்கடி, பரிசுத்த தீர்த்தத்தால் நம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதும் ஒரு நல்ல வழக்கம். நம் பாவ சோதனைகளை நம் ஆன்ம குருவிடம் வெளிப்படுத்துவது நமக்கு மிக உதவியாக இருக்கும். ஆயினும், இவை எல்லாவற்றையும் விட ஜெபமே மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. சேசு, மரியாயிடம் உதவி கேட்டுக் கூவியழைப்பதும் இந்த ஜெபங்களோடு எப்போதும் சேர்ந்திருக்க வேண்டும்.