லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரும் ஆடு மேய்க்க கபேசோவுக்குச் சென்றனர். வழக்கம்போல் மதிய உணவை முடித்துக் கொண்டு ஜெபமாலை ஜெபித்தனர். பின் மேலிருந்து கீழே கற்களை வீசி விளையாடினர். அப்போது பலத்த காற்றடித்தது. விளையாட்டு நின்றது. கீழிருந்த மரங்களுக்கு மேலே ஒரு ஒளி காணப்பட்டது. அந்த ஒளி மேகம் அவர்களை நோக்கி வந்தது.
அப்போது "போர்வை போர்த்திய ஆளின்' நினைவு லூஸியாவுக்கு ஏற்பட்டது. அவ்வுருவம் அக்குகையின் பக்கத்தில் வந்து நின்றது. அது ஒரு இளைஞன்! 15 வயதிருக்கும். அழகுடன் பிரகாசமாய் விளங்கினார்.
அவரைப் பார்த்தபடியே மூவரும் நிற்க, அவர்: "பயப்படாதீர்கள். நான் சமாதானத் தூதன். என்னுடன் செபியுங்கள்” என்று கூறி முழந்தாளிட்டு நெற்றி தரையில்பட பணிந்து: "என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன். உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும் உம்மை நேசியாதவர்களுக்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்” என்று மூன்று தடவை செபித்தார்.
பின் எழுந்து, “இவ்வாறு செபியுங்கள். நீங்கள் மன்றாடும் குரலை சேசு மரிய இருதயங்கள் செவியுற்றுக் கேட் கிறார்கள்” என்று சொல்லி சூரிய ஒளியில் மறைந்தார்.
இதுவே பாத்திமா பரிகார ஜெபம். முதல் ஆயத்தக் காட்சியிலே தொடங்கப்பட்ட இப்பரிகாரக் கருத்து பாத்திமா காட்சிகள் அனைத்திலும் ஒரு வகையில் அல்லது இன்னொரு வகையில் பாத்திமா செய்தி முழுவதும் நூலிழை போல் ஊடுருவி நிற்கக் காணலாம்.