வெறுப்பு, அவதூறு, பிறரது நற்பெயரைக் கெடுத்தல், பிறர் துன்புறுவதைக் கண்டு மகிழ்தல், பிறர் செல்வச் செழிப்போடு இருப்பதைக் கண்டு மனம் புழுங்குதல் ஆகியவை, காய்மகாரம் என்ற வேரிலிருந்துதான் முளைத்தெழுகின்றன. வெறுப்பு, சண்டை, சச்சரவுகள், வாக்குவாதம், கலாபனை, புறணிப் பேச்சு, பொறாமை, இழிவுபடுத்துதல், பிறர்சிநேகமற்ற நிலை, கெடுமதி, கெடுமனம் ஆகியவையும் இந்த காய்மகாரத்திலிருந்தே ஊற்றெடுக்கின்றன. அவை நம்மிடமுள்ள நல்ல அம்சங்களையும், மதிக்கப்பட நமக்குள்ள உரிமையையும் குறைப்பதாகத் தோன்றுவதால், நம் பிறனுடைய உலகப் பொருட்கள், உடைமைகளை, அல்லது அவனுடைய ஞானக் கொடைகள், நற்குணங்களைக் கண்டு அவன் மேல் காய்மகாரம் கொள்கிறோம்.
நாம் இந்தத் தீமையைப் பெரிதாக நினையாவிட்டாலும், அதுவே சர்வேசுரனால் அதிகமாக வெறுக்கப்படுவதும், அவருடைய வரப்பிரசாதத்திற்கு மிகவும் எதிரானதுமாக இருக்கிறது. அடிப்படையில் அது சர்வேசுரனுக்கு நாம் காட்டுகிற நன்றியற்றதனமாக உள்ளது.
காய்மகாரம், ஆங்காரத்திலிருந்து பிறக்கிறது. யாரைப் பார்த்து காய்மகாரப் படுகிறோமோ, அவரை விட மேலானவர்களாக இருக்க நாம் ஆசிக்கிறோம். எனவே அவரிடம் ஏதாவது நல்ல பண்புகள் இருந்தால் அவற்றைக் கண்டு நாம் வேதனைப்படுகிறோம்; அவற்றை இழிவுபடுத்துகிறோம். அவருக்கு ஏதாவது தீங்கு விளையும்போது மகிழ்கிறோம். அவர் பேசுவதையும், செய்வதையும் தவறாக மிகைப்படுத்துகிறோம். அவரிடம் ஏதாவது ஒரு குறையைக் கண்டால், அதை மற்றவர்கள் முன் பெரிதாக்கிக் காட்டுகிறோம்.
காய்மகாரம் நம் இருதயத்தில் பிறர் சிநேகத்தை அழித்து, உத்தமதனத்தில் முன்னேற முடியாதபடி நம்மைத் தடுக்கிறது. அது நம்மை சர்வேசுரனால் வெறுக்கப் படுகிறவர்களாக ஆக்கி விடுகிறது. நம்மை நன்றியற்றவர்களாகவும் ஆக்குகிறது. இதனால் நமக்குச் செய்யப் படுகிற நன்மைகளுக்கு நாம் நன்றி செலுத்துவதில்லை, அதை விட மோசமாக, அந்த நன்மைகளில் கூட நாம் குறை காண்கிறோம்.
காய்மகாரத்திற்கு எதிரான தீர்வுகள்
காய்மகாரத்தை விட குணப்படுத்தக் கடினமானதும், ஆத்துமத்திற்கு அதிகத் துன்பத்தையும், அலைக்கழிப்பையும், மனச் சித்திரவதையையும் தருவதுமான நோய் வேறெதுவும் இல்லை. ஒரு புழுவைப் போல அது இருதயத்தில் வளர்கிறது. அதற்கு எதிரான முக்கியமான தீர்வுகள், பக்திப்பற்றுதலுள்ள ஜெபம், தாழ்ச்சியை அனுசரித்தல், இந்தப் பாவத்தின் கொடிய தன்மையைப் பற்றியும், அதைக் குணப்படுத்துவதில் உள்ள சிரமம், அதிலிருந்து பொங்கி வழிகிற தீமைகள் ஆகியவற்றைப் பற்றியும் தியானித்தல் ஆகியவை அகும். அர்ச்சியசிஷ்டவர்களின் வாழ்வுகள் இக்காரியத்தில் நமக்கு இன்னும் அதிகத் தூண்டுதல்களைத் தர வல்லவை.
காய்மகாரத்திற்கு எதிரான புண்ணியம் பிறர் சிநேகம், அல்லது சகோதர நேசம் ஆகும். இந்தப் பிறர் சிநேகம் நம் அயலாருடைய அவசரங்களை நம்முடைய அவசரங்களைப் போல நாம் நினைக்கச் செய்கிறது. மற்றவர்கள் நிமித்தமாக செயலாற்றவும், துன்புறவும் விருப்பமுள்ளவர்களாக அது நம்மை மாற்றுகிறது. இன்னொருவன் துன்ப துரிதங்களுக்கு ஆளாகிற போது, அவன்மீது ஒரு இருதய பூர்வமான இரக்கத்தை அது நம்மில் எழுப்புகிறது, அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையையும் நம்மில் உருவாக்குகிறது. அவனது வெற்றிகளில் நாம் உண்மையான மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. வெறுப்புணர்வோ, அல்லது கெடுமதியோ மனதில் எழும்போது அதைக் கடிந்து அகற்றுகிறது.
காய்மகாரம் பசாசின் கருவியாக இருக்கிறது. அது ஆத்துமங்களின் நன்மையைக் கண்டு காய்மகாரப்பட்டு, அவற்றை அழிப்பதன் மூலம் தான் தண்டிக்கப்பட்டதற்காகக் கடவுளைப் பழிவாங்க விரும்புகிறது. எனவே அது ஆத்துமங்களை அழிக்கும் நோக்கத்தோடு உலகெங்கும் சுற்றித் திரிகிறது. அதன் கருவியாக இருக்க நாம் விரும்பவில்லை என்றால், மற்றவர்களோடு நாம் கொள்ளும் உறவுகளில் சமாதானமும், சிநேகமுமே அடிப்படை விதியாக இருக்குமாறு நாம் கடுமையாக முயல வேண்டும். சர்வேசுரனுக்கு முன்பாக நாம் அனைவரும் சகோதரர்கள்; ஞானஸ்நானத்தின் வழியாக நாம் கிறீஸ்துநாதருடைய ஒரே ஞான சரீரத்தின் உறுப்புகள் ஆனோம். இவ்வாறு, நம் பிறனை நோகச் செய்கிற போது, நம் ஆண்டவருக்கு எதிராகவும், நமக்கு எதிராகவுமே நாம் பாவம் செய்கிறோம். மற்றவர்களைப் பற்றி எப்போதும் நல்லதே பேச வேண்டுமென்றும், அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், பிறர் சிநேகச் செயல்களால் அவர்களுக்கு உதவ வேண்டுமென்றும் நாம் விரும்பினால், சகல மனிதரிலும் கிறீஸ்துநாதரை நாம் காண வேண்டும். நாம் அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். மோட்சத்தில் ஒன்றாக நித்திய ஜீவியம் அனுபவிக்கும் ஒரே இறுதிக் கதியைத் தேடியே இவ்வுலகில் ஜீவிக்கிறோம். இவ்வாறு நாம் ஒரே சரீரமாக இருப்பதால், கிறீஸ்துநாதருடைய ஒரே இஸ்பிரீத்துவால், தாமே சிநேகமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவானவரால் நாம் உயிரூட்டப்பட வேண்டும்.