1. விசுவாசப் பிரமாணத்தின் 6-ம் பிரிவின் இரண்டாம் பாகத்தைச் சொல்லு.
“மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந் தார்.”
2. அதனால் நாம் விசுவசிக்கிறதென்ன?
சேசுகிறீஸ்துநாதர் தாம் ஏற்கெனவே அறிவித்திருந்தது போல், மரித்த மூன்றாம் நாள், தமது சொந்த வல்லமையால், தம் ஆத்துமத்தையும் சரீரத்தையும் திரும்பவும் ஒன்றுசேர்த்து, இவ்விதம் சாகாவரத்துடன் மகிமைப் பிரதாபமாய் உயிர்த்தெழுந்தார் என்று விசுவசிக்கிறோம்.
69. (35) சேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த் தெழுந்தருளினாரோ?
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தருளினார்.
70. எந்தக் கிழமையில் உயிர்த்தார்?
பாஸ்கு ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையில் உயிர்த்தார்.
1. சேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தாரென்று சொல்லுவதெப்படி?
பெரிய வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை முழுமையும் மூன்றாம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை விடியற்காலம் வரையிலும் அவருடைய திருச்சரீரம் கல்லறையிலிருந்த பிறகு உயிர்த்தார்.
2. சேசுநாதர் உடனே உயிர்க்காமல் ஏன் மூன்றாம் நாள் மாத்திரம் உயிர்த்தார்?
(1) வேதாகமத்தின் வாக்கியங்களை மெய்ப்பிக்கிற தற்காகவும் (யோபு.2:1, மத். 12:40)
(2) தாம் மெய்யாகவே மனிதனென்றும், மெய் யாகவே மரித்ததாகவும் காண்பிக்கிறதற்காகவும்.
3. உயிர்த்தார் என்பதற்கு அர்த்தமென்ன?
சேசுநாதர் ஒரு புது சரீரத்தை உண்டாக்கி எடுக்காமல், மரித்துக் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட தமது சரீரத்தோடு ஆத்துமத்தை ஒன்றித்து உயிரோடு எழுந்தாரென்று அர்த்தமாகும்.
4. சேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்ப்பதாக எப்போ தாகிலும் தீர்க்கதரிசனமாய் சொல்லியிருந்தாரா?
அவர் உயிரோடு இருக்கும்போது பலமுறை சொல்லி யிருக்கிறார். யோனாஸ் மூன்று நாள் மீன் வயிற்றில் இருந்து வெளிப்பட்டதுபோல் தாமும் மூன்று நாள் பூமியின் உள்ளத்துள் இருந்து உயிர்ப்பதாகச் சொன்னார் (மத். 12:40). “சாட்டைகளால் அடித்தபின், அவரைக் கொலை செய்வார்கள், மீளவும் மூன்றாம் நாள் உயிர்ப்பார்” என்றார் (லூக்.18:33).
5. சேசுநாதருடைய உத்தானம் அவசியமானதா?
சேசுநாதர் உயிர்த்தெழுந்திருக்க வேண்டுமென்பது சர்வேசுரனுடைய நீதி நியாயப்பிரகாரம் அவசியம். ஏனெனில், சர்வேசுரனுக்குக் கீழ்ப்படியும் பொருட்டுத் தம்மைத் தாமே தாழ்த்தி நிந்தை அவமானம் அநுபவித்தவரை மேன்மைப்படுத்துவது நியாயமே. இதற்காகத்தான் அர்ச். சின்னப்பர் “தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டும், அதாவது சிலுவை மரணமட்டும் கீழ்ப்படித லுள்ளவரானார். அதினிமித்தம் சர்வேசுரனும் அவரை உயர்த்தி, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்தார்” என்று வசனித்திருக்கிறார் (பிலிப். 2:8,9).
6. சர்வேசுரன் சேசுநாதரை உயிர்ப்பித்தார் என்று அர்ச். சின்னப்பர் சொல்லியிருக்க, (பிலிப். 2:9; உரோ. 8:11; 1 கொரி. 6:14) கிறீஸ்துநாதர் தம் சொந்த பலத்தினால் எழுந்தருளவில்லையென்று எண்ணலாமா?
எண்ணவே கூடாது. உள்ளபடி தேவனாகிய மட்டும் சேசுநாதர் தம் சொந்த பலத்தினாலே கல்லறையினின்று எழுந்தார். ஆனாலும் வல்லபத்துக்கடுத்த கிரியைகளைப் பிதாவுக்கு மாத்திரம் குறித்துச் சொல்வது வழக்கமாயிருக்கிறபடியால், (பக். 38, எண் 5 காண்க). மனிதனாகிய மட்டும் அவர் உயிர்த்தது எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வல்லபத்தால் செய்யப்பட்டதென்று சொல்வது நியாயம்.
7. சேசுநாதருடைய உத்தானத்தைப் பற்றி சுவிசேஷத்தில் சொல்லியிருப்பதைச் சுருக்கமாகச் சொல்லு.
நமது ஆண்டவர் மரித்துக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டபின் மூன்றாம் நாளாகிய பாஸ்கு ஞாயிற்றுக் கிழமையில் அதிகாலமே மகத்தான மகிமையோடு கல்லறை யினின்று உயிர்த்தெழுந்தார். பூமி அதிர்ந்து போகவே ஒரு சம்மனசு தோன்றி, கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி, அதன்மேல் உட்கார்ந்தார். அவருடைய சாயல் மின்னலைப் போல் பிரகாசிக்க, காவற் சேவகர்கள் அதைக் கண்டு, பயந்து, குப்புற விழுந்து செத்த வர்களைப் போலானார்கள். அதே காலையில் மரிய மதலேனம் மாளும், வேறு புண்ணிய ஸ்திரீகளும் பரிமள வர்க்கங்களோடு கல்லறைக்கு வந்து, அதுக்குள்ளே பிரவேசித்து, சம்மனசானவரைக் கண்டு திடுக்கிட்டார்கள். ஆனால் அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் அஞ்ச வேண்டாம்; சிலுவையில் அறையுண்ட சேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; இங்கேயில்லை, அவரை வைத்த இடம் இதுவே” என்று அவர்களுக்குச் சொன்னார் (மத்.28, லூக். 24, மாற். 16).
8. சேசுநாதர் வெளிவருகிறதற்கு முத்திரைகளை உடைத்து, கல்லைப் புரட்டினாரா?
சூரியனுடைய கதிர் கண்ணாடியை உடைக்காமல் அதை ஊடுருவுவது எவ்விதமோ, அவ்விதமே சேசுநாதர் மகிமை அடைந்த சரீரத்தின் குணங்களை உடையவராயிருக்கிறபடியால் கல்லின் மேல் இருந்த முத்திரைகளை உடைக்காமலும், கல்லைப் பெயர்க்காமலும், அதைத் தானே ஊடுருவிக் கல்லறையை விட்டுத் தெய்வீக ஜோதிப் பிரகாசத்துடன் புறப்பட்டார்.
9. லாசருக்கு உயிர் வந்ததுபோல் சேசுநாதருக்கும் உயிர் உண்டானதோ?
அல்ல; செத்துப் போன லாசருக்கு சேசுநாதர் உயிர் கொடுத்து எழுப்பினார். சேசுநாதரோ, சர்வ வல்லமையுள்ள சர்வேசுரன் ஆனதால் யாருடைய உதவியுமின்றித் தமது சொந்த வல்லபத்தால் உயிருடன் எழுந்தார்.
10. அவர் உயிர்த்தபோது அவருடைய திருச்சரீரத்திலிருந்த காயங்களெல்லாம் மறைந்து போயினவோ?
அவருடைய கை கால், விலாவில் பட்ட ஐந்து காயங்கள் தவிர மற்றக் காயங்கள் எல்லாம் மறைந்து போயின.
11. ஏன் அந்த ஐந்து காயங்களைத் தமது சரீரத்தில் நிறுத்திக் கொள்ளச் சித்தமானார்?
(1) தமது பாடுபட்ட சரீரத்தோடு உயிர்த்தாரென்று அப்போஸ்தலர்களுக்கு எண்பிக்கும்படியாகவும்,
(2) பிதாவாகிய சர்வேசுரனிடத்தில் அத்திருக்காயங் களைக் காட்டி நமக்காகப் பரிந்து பேசும்படியாகவும்,
(3) பொதுத் தீர்வை நாளில் அத்திருக்காயங்களால் புண்ணியாத்துமாக்களுக்குச் சந்தோஷ ஆறுதலையும், பாவிகளுக்கு வெட்க துக்கத்தையும் உண்டாக்கும்படியாகவும், அவைகளைத் தமது சரீரத்தில் நிறுத்திக் கொள்ளச் சித்தமானார்.
12. சேசுநாதர் உயிர்க்கும்போது அவருடைய திருச்சரீரத்துக்கு உண்டான மகிமை எப்பேர்ப்பட்டது?
அச்சயம். இலகு. ஒளி, சூட்சம் ஆகிய நான்கு இலட் சணங்கள் அவருடைய சரீரத்தில் உண்டாயின. இந்த ஆச்சரியமான குணங்கள் சேசுநாதர் சுவாமியின் உயிர்த்த சரீரத்தில் உன்னத மேரையாய் இருந்தன.
13. அச்சயம் என்றால் என்ன?
துன்பமும் மரணமும், அழிவும் இல்லாதிருத்தல்.
14. இலகு என்றால் என்ன?
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சுலபமாயும், மனோவேகமாயும் செல்லுகிறதற்கான சக்தியாம்.
15. ஒளி என்றால் என்ன?
சூரியனிலும் அதிகப் பிரகாசத்துடன் உயிர்த்த சரீரம் துலங்குதலாம். ஆனால் சேசுநாதர் தமது சீடர்களுக்குத் தரிசனை யாகத் தம்மைக் காண்பிக்கும்போது அந்தக் குணத்தை மறைத்துக் கொண்டார்.
16. சூட்சம் என்றால் என்ன?
மகிமையடைந்த சரீரத்தை ஞானமயமான சரீரமாக்கி (1 கொரி. 15:44), ஆத்துமத்தின் ஞானசீவியத்துக்கு உடந்தை யாக்கும் குணமாம். அதனால் உயிர்த்த சரீரமானது யாதொரு திடப்பொருளாலும் கட்டுப்படாமல், வெளிச்சமும் உஷ்ணமும் திடப்பொருட்களை ஊடுருவிச் செல்லுகிறது போல், சகல திடப் பொருட்களையும் ஊடுருவிச் செல்லக் கூடுமாயிருக்கும்.
இந்த வரத்தினால்தான் நமது இரட்சகர் கல்லறையை மூடியிருந்த பெருங்கல்லைப் பெயர்க்காமலும், கல்லின் மேலிருந்த முத்திரையை உடைக்காமலும், கல்லைத்தானே ஊடுருவி வெற்றி யாளராய் உயிர்த்தெழுந்தருளினார்.
17. சேசுநாதருடைய உயிர்த்த திருச்சரீரம் ஆவிபோல் தொட்டறியக் கூடாததாயிருந்ததில்லையா?
இல்லை; ஏனெனில், நமது திவ்விய கர்த்தர் உயிர்த்த பின் தமது அப்போஸ்தலர்களுக்குத் தம்மைத் தொடும்படி உத்தரவு கொடுத்தார் (லூக். 24:39, அரு. 20:27).
18. சேசுநாதர் உயிர்த்த நாளில் யாருக்குத் தரிசனையானார்?
முதன்முதல் மரியமதலேனம்மாளுக்குத் தரிசனை யானார். அதற்குப் பிறகு கல்லறைக்கு வந்து புண்ணிய ஸ்திரீ களுக்கும், அன்று தினமே இராயப்பருக்கும் தம்மைக் காண்பித்தார். அன்று சாயந்திரம் எம்மாவுஸ் என்கிற ஊருக்குப் பிரயாணமாய்ப் போன இரு சீடர்களுக்குத் தம்மைக் காட்டினார். கடைசியாய் இராத்திரியிலே போசன சாலையில் கூடியிருந்த அப்போஸ்தலர் களுக்குத் தரிசனையானார். ஆனால் அந்நேரத்தில் அப்போஸ்தல ரான தோமையார் வெளியே போயிருந்ததினால் அவர் அவரைப் பார்க்கவில்லை.
19. அப்போஸ்தலர்கள் சேசுநாதர் உயிர்த்தார் என்பதைச் சுலபமாய் நம்பிவிட்டார்களா?
முதலில் சேசுநாதர் உயிர்த்ததை அவர்கள் நம்பவில்லை. அவருடைய காயங்களில் தன் விரலைவிட்டு நிச்சயித்துப் பார்த்தா லன்றி தான் நம்பமாட்டேனென்று அர்ச். தோமையார் சொன்னார் (அரு. 20:25).
71. (36) உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
நாற்பது நாள் தங்கியிருந்தார்.
72. (37) அந்த நாற்ப நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?
அநேக விசை தம்முடைய சீஷர்களுக்குத் தரிசனையாகத் தம்மைக் காண்பித்து அவர்களை வேதசத்தியங்களில் ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்தார்.
1. சேசுநாதர் உயிர்த்த நாள்முதல் அவர் மோட்ச ஆரோகணமான மட்டும் எத்தனை முறை தரிசனையானாரென்று சுவிசேஷத்தில் சொல்லி யிருக்கிறது?
ஒன்பது முறை சேசுநாதர் தம்மைத் தரிசனையாகக் காட்டினாரென்று சுவிசேஷத்தில் விவரமாய்ச் சொல்லியிருக் கின்றது?
2. அந்த ஒன்பது முறையையும் சொல்லு.
(1) முதன்முதல் அர்ச். மரிய மதலேனம்மாளுக்கு (மாற்.16:9).
(2) பரிசுத்த ஸ்திரீகளுக்கு (மத். 28:9).
(3) அர்ச். இராயப்பருக்கு (லூக்.24:34, 1கொரி. 15:5).
(4) எம்மாவுஸ் கிராமத்திற்குப் போய்க் கொண்டிருந்த இரண்டு சீஷர்களுக்கு (லூக். 24:13-15).
(5) உயிர்த்த நாளில் 10 அப்போஸ்தலர்களுக்கு (லூக். 24:36-44, அரு. 20:19-23).
(6) உயிர்த்த எட்டாம் நாளில் தோமையாருக்கும் மற்ற அப்போஸ்தலர்களுக்கும் (அரு. 20:24-29).
(7) திபேரியா என்னும் கடலோரத்தில் சில அப்போஸ்தலர்களுக்கு (அரு. 21:1-23).
(8) கலிலேயா நாட்டில் ஐந்நூறு பேருக்கு அதிகமான சீஷர்களுக்கு (1 கொரி. 15:6).
(9) மோட்சத்துக்கு எழுந்தருளின நாளில் அப்போஸ் தலர்களுக்கு (மாற். 16:14-19, லூக் 24:50, அப். நட. 1:4-11).
3. சேசுநாதர் ஒன்பது விசைக்கு மேல் தரிசனமாக வில்லையோ?
“சேசுநாதர் செய்தருளிய வேறு அநேக காரியங்களும் உண்டு. அவைகள் ஒவ்வொன்றாக எழுதப்படுமானால், எழுத வேண்டிய புஸ்தகங்களை உலகமே கொள்ள மாட்டாதென்று எண்ணுகிறேன்” என்று அர்ச். அருளப்பர் எழுதி வைத்தார் (அரு. 21:25). ஆகையினாலே அவருடைய தரிசனங்களெல்லாம் சுவிசேஷத்தில் விவரியாதிருக்கிறதாக வேதசாஸ்திரிகள் தீர்மானித் திருக்கிறார்கள். தாம் உயிர்த்தவுடனே தமது திவ்விய தாயாருக்குத் தம்மைத் தரிசனையாய்க் காட்டினதாக நமதாண்டவர் தனக்கு வெளிப்படுத்தினாரென்று அர்ச். தெரேசம்மாள் சாதித்திருக்கிறாள்.
4. சேசுநாதர் அப்போஸ்தலர்களுக்கு என்ன ரூபமாகக் காணப் பட்டு அவர்களுடன் சம்பாஷித்தார்?
தமது சொந்தச் சரீரத்தோடு அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்களோடு உரையாடினார். பயணம் செய்தார், போசனம் செய்தார், அவர்களுக்குத் தேவ நற்கருணையை உண்டாக்கிக் கொடுத்தார்.
5. சேசுநாதர் தாம் உயிர்த்தபின் இவ்வுலகில் ஏன் நாற்பது நாள் தங்கியிருந்தார்?
(1) தாம் உயிர்த்தெழுந்தருளியதை அப்போஸ் தலர்கள் நன்றாய் அறியச் செய்து, அவர்களை விசுவாசத்தில் ஸ்திரப் படுத்தவும்,
(2) தமது தெய்வீக போதகங்களை இன்னும் அதிகமாய்ப் போதிக்கவும்,
(3) திருச்சபையை முற்றிலும் ஸ்தாபிக்கவும் தங்கி யிருந்தார்.
6. அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்த அவசியமா யிருந்ததோ?
ஆம். சேசுநாதர்சுவாமி யூதரால் பிடிபட்டு, சிலுவையில் மரணம் அடைந்தபடியால் அவர்கள் எல்லோரும் சேசுவின்மேல் கொண்டிருந்த விசுவாசம் குறைவுபட்டு விசுவாசத்தில் தத்தளித் தார்கள்.
7. சேசுநாதர் எப்படி அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார்?
அவர் பலமுறை அவர்களுக்குத் தம்மைக் காண்பித்து, அவர்களோடு பேசி, சாப்பிட்டு, தம்முடைய காயங்களில் அவர்கள் தங்கள் விரலை வைக்கச் சொல்லி, தாம் ஆவியாயிராமல், தமது சரீரத்தோடு மெய்யாகவே உயிர்த்ததாகக் காட்டினதாலும், தம்மைப் பற்றி சர்வேசுரன் தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்த காரியங்கள் எல்லாவற்றையும் தாம் நிறைவேற்றினதை அவர்களுக்குத் தெரியப்படுத்தினதாலும், அவர்களுடைய சந்தேகங்களை நீக்கி அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார்.
8. சேசுநாதர் அப்போஸ்தலர்களுக்கு எந்த விசேஷ தெய்வீக போதகங்களைப் போதித்தார்?
(1) தேவத்திரவிய அநுமானங்களை ஏற்படுத்தி, அவைகளை விசுவாசிகளுக்கு நிறைவேற்றும் விதத்தைப் படிப்பித்தார்;
(2) பாவங்களைப் பொறுக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்;
(3) சத்திய வேதத்தைப் போதித்து ஞானஸ்நானம் கொடுக்கக் கற்பித்தார்.
9. சேசுநாதர் எப்படித் தமது திருச்சபையை முற்றிலும் ஸ்தாபித்தார்?
(1) அர்ச். இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக நியமித்ததினாலும்,
(2) சத்திய வேதத்தைப் போதிக்க அப்போஸ்தலர்களை உலகம் எங்கும் அனுப்பினதினாலும்,
(3) திருச்சபையை ஆண்டு நடத்த வேண்டிய அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்ததினாலும்,
(4) அதை ஆண்டு நடத்த வேண்டிய வகையை அவர்களுக்குப் போதித்ததினாலும் சேசுநாதர் திருச்சபையை முற்றிலும் ஸ்தாபித்தார்.
73. அவர்களுக்கு என்ன அதிகாரம் கொடுத்தார்?
சகல மனுஷர்களுக்கும் சத்திய வேதத்தைப் போதிக்கவும், தேவத்திரவிய அநுமானங்களை நிறைவேற்றவும் அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
ஆதலால் அப்போஸ்தலர்களுடைய வேலை என்ன?
(1) வேதத்தைப் போதித்தல்;
(2) தேவத்திரவிய அனுமானங்களையும், மற்ற திருச்சபை ஆசார சடங்குகளையும் நிறைவேற்றுதல்;
(3) திருச்சபையிலுள்ளவர்களை ஞானக் காரியங்களில் ஆண்டு நடத்துதல்.