திருநாள்: ஜூன் 30
அர்ச். சின்னப்பர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள், மற்ற எந்த ஒரு வேதாகம அர்ச்சிஷ்டவரையும் விட அதிக முழுமையானவையாக இருக்கின்றன. சின்னப்பரின் அற்புதமான எழுத்துக்களான பதினான்கு நிருபங்கள் புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அவருடைய வேதபோதகப் பயணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன; பல்வேறு கிறீஸ்தவ சபைகளுக்கு அறிவுரை தருகின்றன, கடிந்து கொள்கின்றன; நல்லொழுக்கக் கோட்பாடுகளையும், வேதசத்தியங்கள் சார்ந்த காரியங்களையும் பற்றி விவாதிக்கின்றன; இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் இந்த மனிதரைப் பற்றியதும், அவருடைய உள்ளரங்க குணாதிசயங்களையும், அவருடைய பிரச்சினைகளையும், பயங்களையும் பற்றியதுமான ஒரு வெளிப்பாட்டை நாம் பெற்றுக் கொள்கிறோம். அர்ச். லூக்காஸின் அப்போஸ்தலருடைய நடபடி ஆகமமும், சில குறிப்பிட்ட சந்தேகத்திற்குரிய புத்தகங்களும், அர்ச். சின்னப்பரை அறிந்து கொள்ள நமக்குக் கிடைத்துள்ள வேறு சில ஆதாரங்களாகும். திருச்சபையின் ஸ்தாபகர்கள் அனைவரிலும் அநேகமாக சின்னப்பர்தான் அனைவரிலும் மிகச் சிறந்தவராகவும், பல பரிமாணங்களைக் கொண்டவ ராகவும், மிகப் பரந்த மனப்பாங்கு கொண்டவராகவும், அதனால், அந்நிய நாடுகளுக்கும், மக்களினங்களுக்கும் கிறீஸ்தவ வேதத்தை எடுத்துச் செல்வதற்கான மிகச் சிறந்த தேவ கொடைகள் பொழியப்பட்டவராகவும் இருந்தார்.
தார்சுஸிலுள்ள ஒரு செல்வமிக்க யூத குடும்பத்தில் ஒரு உரோமைப் பிரஜைக்கு மகனாகப் பிறந்த சவுல் (அவருடைய மனந்திரும்புதல் வரைக்கும் நாம் அவரை இப்படியே அழைப்போம்.) கமாலியேலின் தலைமையிலான பிரசித்தி பெற்ற ராபோனியப் பள்ளியில் பயிற்சி பெறும்படி ஜெருசலேமுக்கு அனுப்பப்பட்டார். இங்கே, வேதப் பிரமாணத்தோடும், தீர்க்கதரிசிகளோடும் சேர்த்து அவர் அன்றைய வழக்கப்படி ஒரு தொழிலையும் பயின்றார். இளம் சவுல் கூடாரம் செய்யும் தொழிலைத் தேர்ந்து கொண்டார். அவர் வளர்க்கப்பட்ட விதம் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், இன்னும் தார்சுஸில் இருந்த போதே சிறிய ஆசியாவிலுள்ள நகர சமூகத்தின் பல மட்டங்களிலும் அக்காலத்தில் ஊடுருவிப் பரவியிருந்த அதிகக் கட்டுப்பாடுகளற்ற கிரேக்க கலாச்சாரத்தின் செல்வாக்குகளுக்குத் தம்மை உட்படுத்தியிருந்தார். இவ்வாறு யூத, உரோமைய, மற்றும் கிரேக்கப் பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் இந்த மாபெரும் அப்போஸ்தலரை உருவாக்குவதில் பங்கு வகித்தன. இவர் சேசுநாதரின் தொடக்க கால சீடர் குழுவின் எளிய மீனவர்களில் இருந்து அந்தஸ்திலும், குணநலன்களிலும் மிகவும் வேறுபட்டிருந்தார். இவருடைய வேதபோதகப் பயணங்கள் இவருக்கு ஒத்துப் போகும் தன்மையையும், ஆழ்ந்த இரக்க உணர்வையும் தந்தன. இவை, கிறீஸ்துநாதருடைய உலக சகோதரத்துவ சுவிசேஷத்தைப் போதிப்பதற்கான ஒரு முன்மாதிரிகையான மனிதக் கருவியாக இவரை ஆக்கின.
கி.பி. 35-ஆம் ஆண்டில் சவுல், தாம் செய்வதே சரி என்று நம்புகிற ஓர் இளம் பரிசேயராக, ஏறத்தாழ கிறீஸ்தவத்திற்கு எதிராளியான யூத மத வெறியராகவும் சவுல் தோன்றுகிறார். பிரச்சினை தருகிற இந்த புதிய வேதப் பிரிவு நசுக்கப்பட வேண்டும், அதைத் தழுவியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் நம்பினார். முதல் வேதசாட்சியான அர்ச். முடியப்பர் கல்லால் எறியப்பட்டு, தம் மரணத்தை சந்தித்த போது, அதில் சவுல் பங்குபெறவில்லை என்றாலும், அச்சமயத்தில் அவர் அங்கே இருந்தார் என்று அப். நடபடி, ஏழாம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இதன் பிறகு வெகு சீக்கிரத்தில் சவுல் தம் வாழ்க்கையை மாற்றவிருந்த தேவ வெளிப்பாட்டிற்கு உட்பட்டார். கிறீஸ்தவர்களுக்கு எதிரான தம் கலாபனைகளைத் தொடரும்படி, அவர் சீரிய நகரமாகிய தமாஸ்குவுக்குச் சென்ற போது, வழியில் தாக்கப்பட்டு, பார்வையிழந்தார். தமாஸ்குவுக்கு வந்து சேர்ந்த போது, அவருடைய திடீர் மனமாற்றம், அவருடைய குருட்டுத்தன்மை சீடராகிய அனனியாஸால் குணமாக்கப்படுதல், அவரது ஞானஸ்நானம் ஆகிய விறுவிறுப்பான தொடர் நிகழ்ச்சிகள் நடந்தேறின. கிறீஸ்துநாதரின் சுவிசேஷத்தைப் போதிக்கும் அலுவலை சவுல் ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டார். ஆனாலும் ஒரு மாபெரும் அலுவலுக்கு அழைக்கப்பட்ட மற்ற அநேகரைப் போல, அவர் தம் தகுதியின்மையை உணர்ந்து, உலகத்திடமிருந்து விலகி, தம் அப்போஸ்தலப் பணியைத் தொடங்குவதற்கு முன் அராபியாவில் மூன்று ஆண்டுக் காலத்தைத் தியானத்திலும் ஜெபத்திலும் கழித்தார். அங்கிருந்து திரும்பி வந்த நேரம் முதல், இப்போது சின்னப்பர் என்னும் உரோமையப் பெயரை ஏற்றுக் கொண்டிருந்த அவர் தம் கடுமையான அலுவல்களில் ஒருபோதும் தயங்கினவரல்ல. அவருடைய வேதபோதக ஜீவியம், நாம் பதிவு செய்திருக்கிற அனைத்திலும் சிறந்த, மிகத் தனிப்பட்ட, போதகம், எழுத்து, சபைகளை ஸ்தாபித்தல் ஆகியவற்றின் ஜீவியமாக எண்பிக்கப்பட்டது. சாகசங்கள் மிக நிறைந்த அவருடைய மிக விரிவான, நில வழி, மற்றும் கடல் வழிப் பயணங்கள், புதிய ஏற்பாட்டு நிருபங்களைக் கவனத்தோடு வாசிக்கிற யாவரும் கண்டுபிடித்து அறிய வேண்டியவையாக இருக்கின்றன. ஆனாலும் இப்போதும் இருக்கிற நிருபங்களும், வரலாற்றுப் பதிவுகளும் சின்னப்பருடைய செயல்பாடுகளின் முழுமையான காலக்கிரம நிகழ்ச்சித் தொடரை வெளிப்படுத்துகின்றன என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது. தாம் கல்லால் எறியப்பட்டதாகவும், மும்முறை கசையடி பட்டதாகவும், மும்முறை கப்பற்சேதத்துக்கு உள்ளானதாகவும், பசியையும், தாகத்தையும், உறக்கமற்ற இரவுகளையும், ஆபத்துக்களையும், சிரமங்களையும் தாங்கியதாகவும் அவரே நமக்குக் கூறுகிறார். இந்த சரீர ரீதியான துன்பங்கள் தவிர, அநேக ஏமாற்றங்களையும், பலவீனமுள்ளவையும், பரவலாக சிதறியிருந்தவையுமான கிறீஸ்தவ சபைகளைப் பற்றிய இடையறாத கவலைகளையும் அவர் அனுபவித்தார்.
சின்னப்பர் தமாஸ்குவில் தம் போதகத்தைத் தொடங்கினார். இங்கே யூத மதத்தைக் கைவிட்டவர்களாகிய மக்களுக்கு எதிரான பழமைவாத யூதர்களின் கோபம் எவ்வளவு பெரிதாக இருந்ததென்றால், அவரே கூட பட்டணத்து மதிலின் மேலிருந்து ஒரு கூடையில் வைத்து இறக்கப்பட்டு, அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. அவர் ஜெருசலேமுக்கு இறங்கிப் போகையில், அங்கிருந்த யூத கிறீஸ்தவர்களால் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டார். ஏனெனில் மிகச் சமீபத்தில்தான் தங்களை வாதிக்கிறவராக இருந்த அவர், தங்களை ஆதரிக்கிறவராக மாறிவிட்டார் என்று நம்ப முதலில் அவர்களால் முடியவில்லை. அவர் மீண்டும் தம் சொந்த ஊரான தார்சுஸுக்கு வந்த போது, பர்னபாஸ் அவரோடு சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து சீரியாவின் அந்தியோக்குக்குப் பயணம் சென்றார்கள். அங்கே, பிற்பாடு ஆதிக் கிறீஸ்தவப் பதிவேடுகளில் புகழ்பெற்ற விளங்க வேண்டியிருந்த ஒரு கிறீஸ்தவ சபையை ஸ்தாபிக்கும் அளவுக்கு, அங்கு தங்கள் போதகத்தைப் பின்பற்றுவோரைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இங்குதான் சேசுநாதரின் சீடர்கள் முதல் முறையாக கிறீஸ்தவர்கள் என்ற பெயர் பெற்றார்கள். (“க்றீஸ்தோஸ்,” அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டது.) ஜெருசலேமில் பஞ்சத்தால் வாடிக் கொண்டிருந்த கிறீஸ்தவ சபையின் உறுப்பினர்களுக்குத் தேவையான உதவிகளைக் கொண்டு வரும்படி அங்கு மீண்டும் திரும்பி வந்த பிறகு, இந்த இரண்டு வேதபோதகர்களும் அந்தியோக்குக்குத் திரும்பிச் சென்றார்கள். அதன்பின் சைப்ரஸ் தீவுக்குக் கடற்பயணம் மேற்கொண்டார்கள். அங்கிருந்த போது, அவர்கள் உரோமை தேசாதிபதியான செர்ஜியுஸ் பவுலுஸ் என்பவரை மனந்திருப்பினார்கள். மீண்டும் ஒருமுறை சிறிய ஆசியாவின் முக்கிய நிலப்பகுதியில், அவர்கள் தோருஸ் மலைகளைக் கடந்து, உள்நாட்டில் பல பட்டணங்களையும், குறிப்பாக யூத குடியேற்றப்பகுதிகளைக் கொண்டுள்ள பட்டணங்களையும் சந்தித்தார்கள். இத்தகைய இடங்களில் முதலில் யூத ஜெப ஆலயங்களைச் சந்தித்து, யூதர்களுக்குப் போதிப்பது சின்னப்பரின் பொது வழக்கமாக இருந்தது. அவர்களால் நிராகரிக்கப் பட்டால், அதன்பின் அவர் புறஜாதியாருக்குப் போதிக்கச் செல்வார். பிஸிதியாவிலுள்ள அந்தியோக்கியாவில் சின்னப்பர் யூதர்களுக்கு ஒரு மிக அற்புதமான பிரசங்கத்தை செய்தார். பின்வரும் வார்த்தைகள் அந்தப் பிரசங்கத்தின் முடிவாக இருந்தன (அப். 13:46-47): “சர்வேசுரனுடைய வாக்கியத்தை முந்தி உங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டியதாயிருந்தது; நீங்களோ இதை வெறுத்துத் தள்ளி நித்திய ஜீவியத்துக்கு உங்களை அபாத்திரவான்களாகத் தீர்த்துக் கொள்ளுகிறீர்கள். ஆகையால் இதோ, உங்களை விட்டு புறஜாதியாரிடத்திற்குப் போகிறோம். ஏனெனில்: நீர் பூமியின் கடைசி எல்லை மட்டும் இரட்சிப்பாயிருக்கும்படிக்கு உம்மைப் புறஜாதியாருக்கு ஒளியாக ஏற்படுத்தினேன் என்றபடி, ஆண்டவர் எங்களுக்கு இவ்விதமாய்க் கட்டளையிட்டிருக்கிறார்.” இதற்குப் பிறகு யூதர்கள் தங்கள் மத்தியிலிருந்து சின்னப்பரையும், பர்னபாவையும் துரத்தி விட்டார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு நம் வேதபோதகர்கள் ஜெருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே, இன்னும் தன் அங்கத்தினர்களில் யூத ஆதிக்கத்தைக் கொண்டிருந்த கிறீஸ்தவத் திருச்சபை, மனந்திரும்பின புறஜாதியார் மட்டில் கொண்டிருக்க வேண்டிய மனப்பாங்கைப் பற்றி அதன் மூப்பர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இதில் விருத்தசேதனமே பிரச்சினைக்குரிய காரணமாக இருந்தது. ஏனெனில் புறஜாதியார் யூத சட்டத்தின் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது முக்கியம் என்று பெரும்பாலான யூதர்கள் நினைத்தார்கள். ஆனாலும் இறுதியில் அதிக சுயாதீனத் தன்மையுள்ளதாக இருந்த, விருத்தசேதனத்திற்கு எதிரான சின்னப்பர் தரப்புதான் வெற்றி பெற்றது.
கிபி. 49 முதல் 53 வரை நீடித்த இரண்டாவது வேதபோதகப் பயணம், சின்னப்பரையும் அவருடைய புதிய உதவியாளரான சீலாவையும் பிரிஜியாவுக்கும், கலாத்தியாவுக்கும், துரோவாவுக்கும், ஐரோப்பாவின் முக்கிய நிலப்பகுதிக்கும், மக்கதோனியாவிலுள்ள பிலிப்பிக்கும் இட்டுச் சென்றது. மருத்துவரான லூக்காஸ் இப்போது இந்தக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தார். நடபடியாகமத்தில் அவர் இந்த வரலாற்றுப் பதிவை நமக்குத் தருகிறார். அவர்கள் தெசலோனிக்காவுக்கும், அதன்பின் அங்கிருந்து இறங்கி ஏத்தென்ஸுக்கும், கொரிந்துவுக்கும் சென்றார்கள். ஏத்தென்ஸில் சின்னப்பர் அரையொப்பாகு சங்கத்தில் பிரசங்கித்தார். அங்கே ஸ்தோயிக், எப்பிக்யூரஸ் என்னும் தத்துவஞானி களைப் பின்பற்றியவர்கள் அவர் சொன்னதைக் கேட்டு, அவருடைய உயிர்த் துடிப்பு மிக்க அறிவாலும், அவருடைய கவர்ந்திழுக்கும் ஆளுமையாலும், அவருடைய நல்லொழுக்கக் கோட்பாடுகள் சார்ந்த போதனைகளாலும் வசீகரிக்கப்பட்டவர்களாக, அவரோடு வாதிட்டார்கள். அந்தக் கோட்பாடுகள் பல விதங்களிலும், அவர்கள் பின்பற்றிய கோட்பாடுகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. அங்கிருந்து கொரிநதுக்குச் சென்ற அவர், சரியாக கிரேக்க-உரோமைய உலகத்தின் மையத்தில் தாம் இருக்கக் கண்டார். இந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய நிருபங்கள், அவருக்கு எதிராயிருந்த பெரும் பாதகமான நிலைமைகளையும், அஞ்ஞான விசுவாசமின்மைக்கும், அலட்சியத்திற்கும் எதிராகத் தாம் தொடுக்க வேண்டியிருந்த இடையறாத போராட்டத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார் என்று காட்டுகின்றன. ஆனாலும் அவர் கொரிந்துவில் பதினெட்டு மாதங்கள் தங்கியிருந்தார். அங்கே மக்களை மனந்திருப்புவதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் அடைந்தார். அங்கிருந்த இரண்டு மதிப்பு மிக்க ஊழியர்களாகிய அக்கிலாவும், அவர் மனைவி பிரிஸில்லாவும் ஆசியாவுக்கு அவரோடு திரும்பிச் சென்றார்கள். கொரிந்துவில் இருந்துதான் இன்றும் இருக்கிற எல்லாவற்றிற்கும் முந்திய வேதபோதக நிருபங்களை அவர் எழுதினார். அவை, நன்னடத்தை பற்றிய அவருடைய மிக மேலான கவலையையும், நன்மை செய்ய மனிதருக்கு பலம் தருகிற இஸ்பிரீத்துசாந்துவானவர் மனித அந்தரங்கத்தில் வாசம் பண்ணுவது பற்றிய அவருடைய நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.
மூன்றாவது வேதபோதகப் பயணம் 52 முதல் 56 வரை நிகழ்ந்தது. லீதிய நாட்டின் ஒரு முக்கிய நகரமும், கிரேக்க-லோனிக் பெண் தெய்வமாகிய தியானாவின் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இடமுமாகிய எபேஸில், சின்னப்பர் இந்த வழிபாட்டுக்கு எதிராகவும், அங்கே நல்ல வளர்ச்சி பெற்றிருந்த அந்தப் பெண் தெய்வத்தின் வெள்ளிச் சிலைகள் விற்பனைக்கு எதிராகவும் ஒரு கிளர்ச்சியை உருவாக்கினார். பிற்பாடு ஜெருசலேமில், தேவாலயத்திற்குச் சென்றதன் மூலம் அங்கு ஒரு பெரும் அமளியை ஏற்படுத்தினார். அங்கே கைது செய்யப்பட்டு, முரட்டுத்தனமாக நடத்தப்பட்டு, சங்கிலி களால் பிணைக்கப்பட்டார். ஆனால் நீதி ஸ்தலத்திறகு முன்பாகக் கொண்டு வரப்பட்டபோது, தம்மைக் கைது செய்தவர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அவர் தற்காப்பு வாதத்தில் ஈடுபட்டார். புறஜாதியாரை அவர் தேவாலயத்திற்குள் அனுமதித்தார் என்று போலியாகக் குற்றஞ் சாட்டிய ஜெருசலேமைச் சேர்ந்த சில யூதர்கள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற வதந்தியின் காரணமாக, அவர் பலத்த பாதுகாப்போடு செசாரேயாவுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே தேசாதிபதிகள் பெலிக்ஸ், பெஸ்து என்பவர்களின் கீழ், விசாரணையை எதிர்பார்த்தபடி, இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். இந்த உரோமை ஆளுனர்கள் யூதர்கள், கிறீஸ்தவர்கள் ஆகிய இரு தரப்பினரோடும் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்கும்படி, சின்னப்பரின் மீதான தீர்ப்பை மாதக் கணக்கில் தள்ளி வைத்தார்கள். இறுதியாக சின்னப்பர் செசாருக்கு முறையீடு செய்தார். நீரோவே தம் வழக்கை விசாரிக்கிற ஒரு உரோமைப் பிரஜைக்குரிய சட்ட உரிமை தமக்கு வேண்டும் என்று அவர் கேட்டார். ஒரு செந்தூரியனின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவனால் உரோமைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலருடைய நடபடியாகமம், இந்த இராஜ பட்டணத்தில், தம் வழக்கு விசாரணைக்காக அவர் காத்திருக்கும் நிலையில் முடிவடைகிறது.
சின்னப்பரின் மேல் முறையீடு வெற்றிபெற்றது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் அநேக மாக, மக்கதோனியாவுக்கு அவர் மேற்கொண்ட மற்றொரு வேதபோதகப் பயணத்தைப் பற்றிய சில ஆதாரங்கள் இருக்கின்றன. பல்வேறு கிறீஸ்தவ சபைகளை அவர் இம்முறை கடைசியாக சந்தித்தபோது, அவர் தீத்துவை கிரேத்தாவுக்கும், திமோத்தேயுவை எபேசுவுக்கும் மேற்றிராணியார்களாக நியமித்தார் என்று நம்பப்படுகிறது. அவர் மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சங்கிலி யிடப்பட்டவராக சிறைவாசம் அனுபவித்தபின், உரோமைச் சபையின் மேற்றிராணியாராகிய அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் வேதசாட்சியமடைந்த அதே சமயத்தில், தாமும் வேதசாட்சியாக மரித்தார். 2ம், 3ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நிலவறைக் கல்லறைக் குகைகளி லுள்ள கல்வெட்டுகளில் அர்ச். இராயப்பர் மற்றும் சின்னப்பர் வணக்கத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த பக்தி அதன் பிரசித்தியில் ஒருபோதும் குறையவில்லை. கிறீஸ்தவ ஓவியக் கலையில் அர்ச். சின்னப்பர் வழக்கமாக கறுத்த தாடியுள்ள, தலை வழுக்கையான, சற்று குள்ளமும், குண்டுமான, ஆனால் துடிப்பும், கடுமையுமுள்ள மனிதராக சித்தரிக்கப்படுகிறார். அவருடைய அருளிக்கங்கள் உரோமையிலுள்ள அர்ச். சின்னப்பர் பேராலயத்திலும், லாத்தரென் தேவாலயத்திலும் வணங்கப்பட்டு வருகின்றன.