கோபம்

கோபம் என்பது ஆத்துமத்தின் ஆசாபாசங்களுள் ஒன்றாக இருக்கிறது. ஒருவர் தன் செயலால் நம்மை நோகச் செய்கிறார் என்று நாம் எண்ணுகிறோம். இது நிஜமானதாகவோ, அல்லது வெறுமனே நம் கற்பனையாகவோ கூட இருக்கலாம். ஆனாலும், அப்படி நம்மை நோகச் செய்தவருடன் நாம் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். இந்த விருப்பத்தில் இருந்துதான் கோபம் பிறந்து வருகிறது. பழிவாங்குவதற்கான விருப்பத்தின் மீது நாம் வெற்றி கொள்ளாத போது அது பாவமாகவும், ஒரு தீமையாகவும் ஆகிறது. அது பிறர்சிநேகத்திற்கும், நீதிக்கும் எதிரானதாகும். ஆயினும் எல்லா விதமான கோபமும் தீமை அல்ல. அவ்வப்போது ஏற்படுகிற சிடுசிடுப்பான உணர்வு கோபம் என்னும் தீமையாக இருப்பதில்லை. எனவே அது பாவமில்லாமல் இருக்கக் கூடும். நல்லதும், புண்ணியத் தன்மை உள்ளதுமான ஒரு கோபமும் உண்டு. ஒரு முறையான காரணத்திலிருந்து இத்தகைய கோபம் புறப்பட்டு வருகிறது. தேவாலயத்திலிருந்து வாங்குவோரையும் விற்போரையும் நம் ஆண்டவர் சாட்டைகளால் அடித்து விரட்டிய செயல் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு.

ஒரு குறிப்பிட்ட ஆள், அல்லது ஆட்களின் மீது நம் இருதயத்தில் வன்மம் அல்லது சீற்றம் கொள்கிற போதும், வார்த்தையாலோ, செயலாலோ யாருக்காவது தீங்கு செய்ய வேண்டும் என்று திட்டமிடும் போதும், நம்மை நோகச் செய்தவரை அவமானப் படுத்தும் நோக்கத்தோடு பேசும்போதும், நாம் கோபத்துக்கு இடம் கொடுக்கிறோம். ஒருவரை அடிக்கும் அளவுக்கு, அல்லது காயப் படுத்தும் அளவுக்கு நாம் பரபரப்பும், கிளர்ச்சியும் அடையும் போதும், வேறொருவரோடு வாய்ச் சண்டையிலும் சச்சரவிலும் ஈடுபடும் போதும், சிடுசிடுப்பான முகபாவத்தாலோ, பேசாமல் மெளனம் சாதிப்பதாலோ அடுத்தவருக்கு எதிரான நம் மனக்கசப்பை வெளிப்படுத்தும் போதும், கோபம் என்னும் குற்றத்திற்கு நாம் ஆளாகிறோம். நம் இருதயத்தில் நாள்கணக்கில், அல்லது மாதக்கணக்கில், அல்லது வருடக் கணக்கிலும் கூட வன்மத்திற்கும், வெறுப்புக்கும் இடம் கொடுத்து, இரக்கம், நட்பு ஆகியவற்றின் அடையாளங்களைத் தவிர்த்து வாழும்போது கோபம் என்னும் பாவத்தைக் கட்டிக் கொள்கிறோம். நம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நமக்குக் கீழ் பணிபுரிகிறவர்களை அளவுக்கு மீறித் தண்டிக்கிற போதும் இதே பாவத்தை நாம் கட்டிக் கொள்கிறோம். அந்தரங்கத்திலோ, வெளியரங்கமாகவோ தானே விரும்பி தேவதூஷணம் சொல்கிறவன் சர்வேசுரனுக்கு எதிராகக் கூட கோபம் என்னும் பாவத்தைக் கட்டிக் கொள்கிறான்.

கோபம் அழிவை ஏற்படுத்துவதும், மிக அதிகமாகக் காயப்படுத்தக் கூடியதுமான தீமையாகும். கோபப்படும் போது நாம் அறிவை இழந்து விடுகிறோம். அது சர்வேசுரனிடமிருந்து நம்மை அந்நியமாக்குகிறது; நண்பர்களையும், உறவினர்களையும் நம்மிடமிருந்து அகற்றி விடுகிறது; அது நம் புத்தியை மூடி மறைக்கிறது. அதன் புத்திக்கு ஒவ்வாத பிடிவாத குணத்தினால், மற்றவர்களின் உரிமையை நாம் காலடியில் போட்டு மிதித்து விடுகிறோம்.

கோபம் சமாதானத்தை அழித்து, அழிவுக்குரிய போர்களை உருவாக்குகிறது; எல்லா வகையான தீமைகளுக்கும், பகைகளுக்கும், நீடிய சச்சரவுகளுக்கும், அவமானங்களுக்கும், வஞ்சத்திற்கும், அபாண்டங்களுக்கும், முரண்பாடுள்ள பிணக்குகளுக்கும், தேவ தூஷணத்திற்கும், வெறுப்புக்கும், பழிவாங்குதலுக்கும், கொலைக்கும் காரணமாக அமைகிறது. இவை எல்லாமும் சேர்ந்து பிறர்சிநேகத்தைக் கொன்று விடுவதோடு, சர்வேசுரனிடமிருந்து நமக்கு வரக்கூடிய மிகப் பெரும் கொடையாகிய வரப்பிரசாதத்திற்குப் பெரும் தடைகளாகவும் இருக்கின்றன.


கோபத்தை எதிர்த்து நிற்பதற்கு

கோபம்தான் நமது பிரச்சினை என்றால், என்ன காரணத்திற்காக நாம் அடிக்கடியும், எளிதாகவும் கோபவசப் படுகிறோம் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதைத் தடுப்பதில் கவனமாயிருந்து, அதை வெல்வதற்காக ஜெபிக்க வேண்டும். நமக்கெதிராகச் செய்யப்பட்ட குற்றம் எத்தகையதாக இருந்தாலும், அதைச் செய்தவர் யாராக இருந்தாலும், நம்மைச் சோதிக்கவும், சாந்தத்தைக் கடைப்பிடிக்க நம்மைப் பழக்கவும், அதன் மூலம் நம் பேறுபலன்களை அதிகரிக்கவும், சர்வேசுரன் தாமே அதை அனுமதிக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். மனக்குழப்பத்தின் அடையாளங்களை வெளிக் காட்டாமல் இருக்கவும், நம் மனத்தில் கடுஞ்சீற்றம் இருப்பதை வார்த்தையாலும் செயலாலும் காட்டிக் கொடுக்காமலும் இருக்கவும், கோபம் மனதில் அதிகரிப்பதற்கு இடம் தருவதை விடுத்து, நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஒரு ஞான நூலாசிரியர் பின்வரும் அற்புதமான அறிவுரையைத் தருகிறார்: “கோபத்தின் ஒவ்வொரு அசைவையும் அணைத்து விடக் கூடிய ஓர் அமைதியுள்ள தனியிடத்தை உனக்குள் எப்போதும் கொண்டிரு. இவ்வாறு எப்போதாவது நீ காயப்படுத்தப்பட்ட பின்பு, உன் உதடுகள் மெளனமாக இருப்பது மட்டுமில்லாமல், ஓர் உள்ளார்ந்த அமைதியையும் நீ கடைப்பிடிக்க வேண்டும். இப்படி உன்னையே நீ சாந்தப் படுத்திய பின், உனக்கெதிராகக் கோபத்தோடு இருப்பவனுடைய கோபத்தை அவனிடமிருந்து அகற்றப் பாடுபடு. நீ பெற்றுக் கொண்ட மனக் காயத்தை நீ ஒருபோதும் திரும்பவும் நினைக்கவே கூடாது”

கோபத்தைத் தடுப்பது என்பது சர்வேசுரனுடைய ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதை நோக்கி நாம் மேலும் ஓர் அடியெடுத்து வைப்பதற்கு சமமாகும். சீரான மனநிலை மற்றவர்களைக் கவர்வதோடு, முழுமையான சந்தோஷத்திற்கு உத்திரவாதமாகவும் இருக்கிறது. ஒரு மென்மையான பதில் கடுஞ்சினத்தை அகற்றுகிறது. எரிச்சலூட்டப் படும்போது மென்மையோடும், சாந்தத்தோடும் இருப்போமென்றால், கோபத்தால் தானும் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கிற மற்றொருவனுடைய கோபத்தை நாம் தணித்து விடுவோம். எத்தகைய பழிவாங்குவதையும் கடவுள் நமக்கு அனுமதிப்பதில்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவன் நம் கோபத்தைத் தூண்டியிருக்கிறான் என்றால், நம் இருதயத்திலிருந்து நாம் அவனை மன்னிக்க வேண்டும். அவனுக்கு இரக்கம் காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை நாம் தேட வேண்டும் என்று நம் ஆண்டவர் போதிக்கிறார். ஏனெனில் மற்றவர்களுக்கு நன்மை செய்வதால், நாம் அவர்களை நேசிக்கிறோம். இத்தகைய செயல் நமது உள்ளரங்கமான மன்னித்தலுக்கு வெளியரங்கமான முத்திரையாகிறது.

எல்லாச் சமயங்களிலும் கோபத்தை வெல்லவும், சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் நமக்கு தேவ வரப்பிரசாதம் தேவை. மன அமைதியையும், சந்துஷ்டியையும், சமாதானத்தையும் நமக்குத் தந்தருள வேண்டுமென்று நாம் சர்வேசுரனை அடிக்கடி மன்றாட வேண்டும்; சோதனை வேளைகளில் உடனடியாக நமக்கு உதவும்படி அவரை நாம் அழைக்க வேண்டும்.

இயல்பாகவே எளிதில் கோபப்படுகிறவர்களாக நாம் இருந்தால், பரலோக மந்திரத்தில் நாம் செய்யும் விண்ணப்பத்திற்குத் தனிக்கவனம் தர வேண்டும். அதில் நாம், “எங்களுக்குத் தீமை செய்கிறவர்களை நாங்கள் பொறுப்பது போல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்” என்று ஜெபிக்கிறோம். மேலும் நம் இருதயத்திலிருந்து பிறரை மன்னிக்க நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதுவே சுபாவத்திற்கு மேலான பொறுமையுள்ள மனவொடுக்கம், சாந்தம், மன்னித்தல் என்னும் புண்ணியமாகும்.

கோபம் என்பது முரண்பாடுகளைத் தாங்க முடியாத, எதிர்க்கப் பட்ட ஆங்காரம், தன் சொந்த செளகரியத்தையும், வசதியையும் மட்டுமே தேடுகிற சுயநலம் ஆகியவற்றின் குழந்தையாக இருக்கிறது. ஞான ஜீவிய முன்னேற்றத்திற்கு வெகு அவசியமான தேவையாகிய மனச் சமாதானத்திற்கு அது மிகவும் எதிரானது. அது வெடித்துச் சிதறுகிற கோப வெறியாக இருந்தாலும் சரி, சிடுசிடுப்பும், கசப்புமுள்ள மனநிலையாக இருந்தாலும் சரி, கிறீஸ்தவ ஜீவியத்தில் அதற்கு இடம் இல்லை. பொறுமையற்றதனம், எரிச்சல் ஆகியவற்றின் சிறு சிறு வடிவங்களைக் கூட தடுப்பது, கோபம் என்னும் ஆசாபாசமாகிய நோய் வருமுன்பே அதைத் தடுப்பதற்கு நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.