ரஷ்யாவின் ஐக்கிய அர்ப்பணம் என்றால் என்ன?

மூன்றாம் கேள்வி:

60. “ரஷ்யாவை எனக்கு அர்ப்பணியுங்கள். உங்களுக்கு சமாதானம் அருளப்படும். ஏனெனில் சமாதானத்தின் பிரபுவாகிய கிறீஸ்து, சமாதானத்தை நீங்கள் என் வழியாக மட்டுமே பெற வேண்டும் என விரும்புகிறார். என் இருதயத்தின் வழியாக அவர் தம்மையே உங்களுக்கு அளிப்பார்" என்று திருச்சபையின் பாப்பரசருக்கும், ஆயர்களுக்கும் அளிக்கப்பட்ட இச்செய்தியை நாம் மீண்டும் சிந்திப்போம்.

61. இந்த அர்ப்பணத்தை உடனே செய்ய வேண்டியதுதானே? இந்த வேண்டுகோளை இன்னும் நிறைவேற்றாமல் பாப்பரசரும், ஆயர்களும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என விசுவாசிகள் பல முறை வியப்படைந்திருக்கலாம். ஆனால் நண்பர்களே, நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அன்னையின் குரலுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றுதான் அவர்கள் காத்துக் கொண்டிருக் கிறார்கள். இதுவரை நாம் கேள்விப்பட்டிராததும், நினைத்துப் பார்க்கவே முடியாத அளவும் குழப்பம் மிகுந்த தற்காலச் சூழ்நிலையில் இந்தச் செயலை (ரஷ்யாவின் ஐக்கிய அர்ப்பணத்தை) செய்வதற்கு, முதன்மையாக பாப்பரசருக்கும், மற்றும் ஆயர்களுக்கும் தேவையான விசேஷமான வரப்பிரசாதங்களை ஜெபத்தின் மூலமாகவே பெற முடியும். மனிதனால் நினைத்துப் பார்க்க இயலாத காரியங்கள் விசேஷ வரப்பிரசாதங்களால் நிறைவேற்றப் படும். இந்த வரப்பிரசாதங்கள் திருச்சபையின் ஆட்சி பீடத்தை நமது அன்னைக்குக் கீழ்ப்படியச் செய்யும். ஒவ்வொரு கிறீஸ்தவனும், திருச்சபையும் செய்யும் செபம், தவம், ஒறுத்தல்கள் ஆகிய இவற்றின் மொத்த அளவே இந்த விசேஷ வரப்பிரசாதங்களை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதி உள்ளவர்கள் ஆக்கும்.

முடிவுரை

62. இவ்வுரையின் முடிவு என்ன? பாத்திமா செய்தியை நாம் உடனே தொடங்கி நடைமுறைப் படுத்தப்படக்கூடிய முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். முன்னறிவிக்கப்பட்ட தண்டனை எந்த ஆண்டில் எந்தத் தேதியில் நிகழும் என்றோ, தண்டனையை எதிர்பார்த்தோ நாம் பயந்து கொண்டே வாழக் கூடாது. அத்தண்டனை எந்த நாளில் வரும் என்பதை நாம் அறியோம்; ஆனால் தண்டனையோ நிச்சயமானது என்பதை அறிந்திருக் கிறோம். 

இச்சமயம் நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நமது அன்னையின் மாசற்ற இருதயத்தைச் சரணடைவதே ஆகும். இந்த எளிய உரையை நீங்கள் கேட்டு சிந்தித்த பின், உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறேன். அப்படிப்பட்ட ஒரு திருப்பத்தை என் சொற்கள் உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் ஏற்படுத்துமானால், நான் மாதாவின் செய்தியைப் பரப்ப என்னால் இயன்ற சிறிய ஊழியம் செய்த பாக்கியம் பெற்றவன் ஆவேன். அன்னையின் வேண்டுகோளைக் கேட்ட உங்கள் வாழ்வில் வரும் ஒவ்வொரு நாளிலும் உங்கள் செப, தவ, பரிகாரப் பதிலுரை முயற்சிகள் மென்மேலும் அதிக பலன் அளிப்பனவாக இருப்பதாக.

63. முழுத் திருச்சபையின் முயற்சிகளும், நம் ஒவ்வொருவரது செபப் பரித்தியாகங்களுமே ஒரு பெரும் சக்தியாக உருவாகி உலக விடுதலை அளிக்கும் இந்த ரஷ்யாவின் ஐக்கிய அர்ப்பணத்தைச் செய்யத் தேவையான வரப்பிரசாதத்தைப் பாப்பரசருக்கும், மேற்றிராணிமார்களுக்கும் அளிக்க வேண்டும். (ஐக்கிய அர்ப்பணம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.)

அப்போது மரியாயின் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்; கம்யூனிச ரஷ்யா மனந்திரும்பி சமாதானம் பெறும். அதன் தொடர்பாக அகில உலகிற்கும் சமாதானம் அளிக்கப்படும். சகல வரப்பிரசாதங்களுக்கும் மாதாவே மத்தியஸ்தி என்னும் சத்தியம் பிரகடனப்படுத்தப்படும்.

நாம் எதிர்நோக்கும் ஆன்மீகப் புதுப்பித்தல், பொய்யானதும், திட்டமிட்டு ஏமாற்ற நினைப்பதுமாகிய மறுமலர்ச்சியாக இராமல், உண்மையான, உள்ளார்ந்த ஞானப் புதுப்பித்தலாக இருக்கும். அதுவே சர்வேசுரனால் வாக்களிக்கப்பட்ட உண்மையான உலகின் புதுப்பித்தல். சேசு மரியாயின் திரு இருதயங்களுக்கும், பிதாவாகிய சர்வேசுரன், சுதனாகிய சர்வேசுரன், இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் ஆகிய பரிசுத்த தமதிரித்துவத்துக்கும் மகிமையாக திருச்சபையும், உலகமும் புதுப்பிக்கப்படும். ஆமென்.

“பரிதாபத்திற்குரிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை இப்போது கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார். நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள். சமாதானமும் நிலவும்.”

(பாத்திமா மூன்றாம் காட்சியில் (13.7.1917) காட்சி பெற்ற குழந்தைகளிடம் மாதா கூறியது)

மாதாவின் சூசை அச்சகம், தூத்துக்குடி. போன்: 0461-2361989.