காவலான சம்மனசுகள்

35. மனுஷர்களை விசேஷமாய் விசாரிக்கும் சம்மனசுகள் உண்டோ? 

உண்டு. கர்ப்பம் முதல் கல்லறை மட்டும் ஒவ்வொரு மனுஷனையும் விசாரிக்கும் ஒரு காவலான சம்மனசு உண்டு.

1. மனிதருக்குக் காவலான சம்மனசுகள் உண்டென்று நாம் எப்படி அறிவோம்?

(1) பழைய ஏற்பாட்டில் ஆகாரின் (ஆதி. 21:17), யாக்கோபின் (ஆதி. 58:6) தானியேலின் (தானி. 3:49), யூதித்தின் (யூதி. 13:20) சம்மனசுக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.--“உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு சர்வேசுரன் தமது தூதர்களுக்குக் கட்டளையிட்டார்” (சங். 90:11) என்று தாவீது வசனித்திருக்கிறார்.

(2) பிள்ளைகளுக்குச் சம்மனசுகள் இருப்பதாக புதிய ஏற்பாட்டில் திட்டமாய்ச் சொல்லியிருக்கிறது (மத். 18:10):- அப்போஸ்தலர் நடபடி என்னும் ஆகமத்தில் அர்ச். இராயப்ப ருடைய சம்மனசானவரைக் குறித்துப் பேசியிருக்கிறது (அப். நட. 12:15).

(3) திருச்சபையின் ஆதிகால முதற்கொண்டு இந்நாள் வரையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சம்மனசு காவலாயிருக்கிறார் என்கிற சத்தியத்தைக் கிறீஸ்தவர்கள் விசுவசித்து வருகிறார்கள்.

(4) மனிதர்களைக் காப்பாற்றி வருகிறதற்கு விசேஷ பூதங்கள் இருப்பதாக அஞ்ஞானிகளும் நம்புகிறார்கள்.

2. மனிதருக்கு மாத்திரம் காவலான சம்மனசுகள் உண்டோ?

ஒவ்வொரு தேசத்திற்கும், ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு பங்கு விசாரணைக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு கோவிலுக்கும் வெவ்வேறு தனித்தனி காவலான சம்மனசு களும் உண்டு (தானி. 10:13,21; சக்கா. 1:12; அப். நட. 16:9).

3. நமக்கு அவர்கள் என்ன நன்மை செய்வார்கள்?

ஞான விஷயமாகவும் உலக விஷயமாகவும் நாம் அநேக நன்மைகளைக் காவலான சம்மனசானவரின் மூலமாய்ப் பெறுகிறோம்.

(1) அவர் நம்மைக் காத்து, நமக்கு நேரிடும் பொல்லாப்புகளைத் தடுப்பார்;

(2) பசாசு நமக்குக் கொண்டு வரும் ஆபத்துகளைத் தள்ளி, சோதனை நேரத்தில் நம்மைக் காப்பாற்றி, நல்ல எண்ணங்களை நமது இருதயத்தில் எழுப்புவார்;

(3) நாம் தீயவர்களின் பழக்கத்தால் கெட்டழி யாதபடி நம்மைக் காப்பாற்றுவார்.

(4) நமது செபங்களைக் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுப்பார்;

(5) துன்ப காலங்களில் நமக்கு ஆறுதல் வருவிப்பார்;

(6) நமக்காக வேண்டிக் கொண்டு, நமது ஆத்துமத் துக்கும் சரீரத்துக்கும் தேவையானவைகளைக் கேட்டுச் சுவாமி யிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுவார்;

(7) விசேஷமாக நமது மரண சமயத்தில் நாம் பசாசின் சோதனைக்கு உள்ளாகாமல் நம்மைக் காப்பாற்றுவார்; 

(8) நமது ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருக்கும் போது நமக்கு ஆறுதல் வருவிப்பார்;

(9) கடைசியாய் நம்மை மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போவார்.

4. காவலான சம்மனசானவர்மட்டில் நமக்குள்ள கடமைகள் என்ன?

நம்முடைய காவல் சம்மனசானவர் இடைவிடாமல் நமது அருகிலிருக்கிறபடியினால், நாம் நமது அவசியங்களில் விசேஷமாய்ச் சோதனை நேரத்தில் அவரை வேண்டிக் கொண்டு, அவருக்குச் சங்கை, நன்றியறிதல், சிநேகங்காட்டி, அவர் நற்புத்தி மதிகளைக் கேட்டு, எப்போதும் மேரை மரியாதையுடன் நடந்துவர வேண்டும். பாவத்தால் அவருக்கு மகா வெறுப்பும், கஸ்தியும், வருத்தமும் உண்டாகிறபடியினால், அவர் சமூகத்தில் எந்தப் பாவத்தையும் செய்யாதிருக்க வேண்டும்.

5. நமது காவலான சம்மனசானவரை நோக்கி நாம் சாதாரண மாய்ச் செபிக்கும் செபம் எது?

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய சம்மன சானவரே, தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து, என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். ஆமென்.

சரித்திரம்

(1) அர்ச். ஆக்னசம்மாளை அஞ்ஞான அதிகாரி வேதத் தினிமித்தம் நிஷ்டூரமாய் உபாதித்தும் வேதசாட்சி தைரியமா யிருப்பதைக் கண்டு, “நீ வேதத்தை விடாவிட்டால் வேசிகள் வீட்டுக்கு உன்னை அனுப்புவேன்” என்று அதிகாரி பயமுறுத்து வதைக் கேட்ட கன்னிகை: “எனக்கு அப்பேர்ப்பட்ட அவமானம் வராதபடி எனக்குக் காவலாயிருக்கிற சம்மனசானவர் என்னைக் காப்பாற்றி இரட்சிப்பார்” என்றாள். அதிகாரியினுடைய மகன் தீய எண்ணத்துடன் வேதசாட்சியிருந்த வீட்டுக்குப் போனபோது, சம்மனசுவினால் கொல்லப்பட்டு ஆக்னேசம்மாளின் பாதத்தில் விழுந்தான்.

(2) தூர் நகரின் மேற்றிராணியாரான கிரகோரியார் குழந்தையாயிருந்த போது அவருடைய தகப்பனார் கடின வியாதி யாய் விழுந்தார். தன் தகப்பன் சுகப்படும்படி கிரகோரியார் நாள்தோறும் வேண்டிக்கொண்டு வந்தார். ஒருநாள் அவருடைய காவலான சம்மனசானவர் அவருக்குத் தோன்றி ஒரு சிறு துண்டுத் தாளில் சேசுநாதரின் திருநாமத்தை எழுதி அத்துண்டைத் தம் தகப்பனின் தலையணையில் வைக்கும்படி சொன்னார். சம்மனசின் கற்பனைப்படி கிரகோரியார் செய்தார். என்ன அதிசயம்! வியாதிக்காரர் தலையணையில் தலையைச் சாய்க்கவே, அதே கணத்தில் பூரண குணமடைந்தார்.