புறஜாதியாரைத் தேவாலயத்திற்குக் கூட்டி வந்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, சின்னப்பர் பொதுமக்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டபின், விலங்கிடப்பட்டவராக, உரோமைச் சேனாதிபதி யான லீசியாஸ் என்பவனால் அந்தோணியா கோட்டைக்குக் கூட்டி வரப்பட்டார். யூதர்கள் கைதியான சின்னப்பரைக் கொல்ல வஞ்சகமாக சதித்திட்டம் தீட்டினார்கள் என்பதை அறிந்த சேனாதிபதி, அவரை பலத்த காவலோடு செசாரேயாவுக்கு அனுப்பினான். அதுவே தேசாதிபதியாகிய ஃபெலிக்ஸ் என்பவனுடைய வசிப்பிடமாக இருந்தது. சின்னப்பருக்கு அவரைக் குற்றஞ்சாட்டியவர்களின் மேல் வெற்றி கொள்வதில் சற்று சிரமம் இருந்தது. ஆனாலும், அவர் தம் சுதந்திரத்தை பணம் கொடுத்து வாங்க மறுத்துவிட்டார் என்பதால், ஃபெலிக்ஸ் இரண்டு வருடங்களாக அவரைச் சங்கிலிகளில் கட்டுண்டவ ராகவே வைத்திருந்தான். மேலும் யூதர்களை மகிழ்விக்கும்படி, தன் அடுத்த ஸ்தானாதிபதியான பெஸ்து வரும்வரை, அவன் அவரை சிறையிலேயே விட்டு வைத்தான். புதிய ஆளுனன் ஜெருசலேமில் சின்னப்பரைக் குற்றஞ்சாட்டியவர்களின் முன்னிலையில் அவர் விசாரிக்கப்படும்படி கைதியான அவரை அங்கு அனுப்ப விரும்பினான். ஆனால் தம் எதிரிகளின் வஞ்சக எண்ணங்களை அறிந்திருந்த சின்னப்பர் செசாரிடம் விண்ணப்பித்தார். இந்த நேரத்திலிருந்து அவர் உரோமையில் மட்டுமே விசாரிக்கப்பட முடியும். அவருடைய சிறைவாசத்தின் இந்த முதல் காலகட்டம், அப்போஸ்தலரின் ஐந்து பிரசங்கங்களை உள்ளடக்கியிருந்தது. இவற்றில் முதலாவது, அந்தோணியா கோட்டையின் படிக்கட்டுகளில், அவரை மிரட்டிய கூட்டத்தின் முன்னால், எபிரேய மொழியில் செய்யப்பட்டது. அதில் சின்ன்பபர் தமது மனந்திரும்புதலைப் பற்றியும், அப்போஸ்தல அலுவல் புரிய தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் பற்றி விவரித்தார். ஆனால் மக்கள் கூட்டத்தின் பகையுடன் கூடிய கூச்சல்களால் அவரது பேச்சு இடைமறிக்கப் பட்டது (22:1-22). மறுநாள், லீசியாஸின் உத்தரவின் பேரில் கூடிய யூத ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக, அப்போஸ்தலர் திறமையாக பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்குமிடையே பிரச்சினையை எழுப்பி விட்டார். அன்று அவர்மீது எந்தக் குற்றமும் சாட்டப்பட முடியவில்லை. மூன்றாவது உரையில், தேசாதிபதி ஃபெலிக்ஸின் முன்னிலையில் தம்மைக் குற்றஞ்சாட்டிய தெர்த்துல்லுஸ் என்பவனுக்குப் பதில் தரும் விதமாக, திரித்துக் கூறப்பட்ட உண்மைகளை அனைவரும் அறியச் செய்து, தம் மாசற்ற தனத்தை எண்பிக்கிறார் (24:10-21). நான்காம் பிரசங்கம் ஃபெலிக்ஸுக்கும், அவன் மனைவி ட்ரூஸில்லவுக்கும் முன்பாக ஆற்றப்பட்ட கிறீஸ்தவ விசுவாசத்தின் ஒரு சுருக்கமான விளக்கவுரையாக மட்டுமே இருந்தது (24:24-25). தேசாதிபதியான பெஸ்து, அகிரிப்பா அரசன், அவன் மனைவி பெரேனீஸ் ஆகியவர்களுக்கு முன்பாக வழங்கப்பட்ட ஐந்தாவது உரை, மீண்டும் சின்னப்பர் மனந்திரும்பிய வரலாற்றை விவரிக்கிறது. ஆளுனனுடைய பரிகாசமுள்ள தலையீட்டினாலும், அரசனுடைய சங்கட முள்ள மனநிலையாலும் இந்த உரை முடிக்கப்படாமல் நின்று போனது (அப். 26).
செசாரேயாவிலிருந்து உரோமைக்கு கைதியான சின்னப்பரின் பயணம், இதற்கு மேல் ஆசிக்க எதுவும் இருக்க முடியாத விதத்தில், துல்லியமாகவும், நல்ல விறுவிறுப்புள்ள உயிரோட்டத்தோடும் அர்ச். லூக்காஸால் விவரிக்கப்படுகிறது. விளக்கங்களுக்கு ஸ்மித்தின் “அர்ச். சின்னப்பரின் கடற்பயணமும், கப்பற்சேதமும்” (1866) என்ற புத்தகத்தையும், ராம்சேயின் “பயணியும், உரோமைப் பிரஜையுமான அர்ச். சின்னப்பர்” என்ற நூலையும் (லண்டன், 1908) காண்க. செந்தூரியனான ஜூலியஸ், சின்னப்பரையும், மற்ற கைதிகளையும் ஒரு வியாபாரக் கப்பலில் ஏற்றியிருந்தான். லூக்காஸும், அரிஸ்தார்க்கும் அந்தக் கப்பலில் ஏறியிருந்தார்கள். கால நிலை மாற மாற, கடற்பயணம் மெதுவாகவும், கடினமாகவும் இருந்தது. அவர்கள் சீரியா, சிஸிலியா மற்றும் பம்பிலியா நாடுகளின் கரையோரமாய்ப் பயணம் செய்தார்கள். லீசியாவிலுள்ள மிராவில் கைதிகள் இத்தாலிக்குப் புறப்படவிருந்த ஒரு அலெக்ஸாந்திரியக் கப்பலுக்கு மாற்றப்பட்டார்கள். ஆனால் காற்று விடாமல் எதிர்த்து வீசவே, அவர்கள் கிரேத்தாத் தீவிலுள்ள நல்ல துறைமுகம் எனப்பட்ட இடத்திற்கு மிகுந்த சிரமத்தோடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குளிர்காலத்தை அங்கே கழிப்பது நல்லது என்று சின்னப்பர் அறிவுறுத்தினார். ஆனால் அவருடைய அறிவுரை ஏற்கப்படவில்லை. கப்பல் கடும்புயலில் சிக்கி, முழுமையாக பதினான்கு நாட்கள் கடலில் வழிதவறி அலைந்து, இறுதியாக மால்த்தாத் தீவின் கடற்கரையில் மோதி சேதத்திற்குள்ளானது. கப்பற் பயணம் மிக ஆபத்தானது என்று கருதப்படுகிற மூன்று மாதங்களை அவர்கள் அங்கே கழித்தார்கள். ஆனால் இளந்தளிர் காலத்தின் முதல் நாட்களில் கடற்பயணத்தைத் தொடங்க எல்லா அவசர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. சின்னப்பர் மார்ச் மாதத்தில் உரோமையை வந்தடைந்திருக்க வேண்டும். “பின்பு அவர் தமக்காக வாங்கின வாடகை வீட்டில் இரண்டு வருஷ முழுமையும் தங்கி... முழுத் தைரியத்தோடு யாதொரு தடையுமின்றி, சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பிரசங்கித்து, கர்த்தராகிய யேசுக்கிறீஸ்துவைப் பற்றிய விஷயங்களைப் போதித்துக் கொண்டு வந்தார்” (28:30-31). இந்த வார்த்தைகளுடன் அப்போஸ்தலருடைய நடபடிகள் ஆகமம் முடிவடைகிறது.
சின்னப்பரின் விசாரணை, அவர் குற்றமற்றவர் என்ற தீர்ப்போடு முடிவடைந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை, ஏனெனில்,
தேசாதிபதி பெஸ்துவின் அறிக்கையும், செந்தூரியனின் அறிக்கையும் நிச்சயமாக அவருக்கு சாதகமாகவே இருந்தன;
உரோமையிலுள்ள தங்கள் சக மதத்தவருக்கு இந்த விசாரணை பற்றி யூதர்கள் அறிவிக்கவிலை என்பதால், அவர்கள் தங்கள் குற்றச்சாட்டைக் கைவிட்டு விட்டது போல் தோன்றுகிறது (அப். 28:21);
காரியங்கள் நடந்தேறிய விதம் விடுதலையாவது பற்றிய நம்பிக்கைக்கு சின்னப்பரை இட்டுச் சென்றது. அவர் தம் விடுதலை பற்றி சில சமயங்களில் மிக நிச்சயமான முறையில் பேசுகிறார் (பிலிப். 1:25; 2:24; பிலமோன் 22);
அச்சமயத்தில் திருச்சபையின் அதிகாரமுள்ள ஒருவரால் எழுதப்பட்டவையாகக் கூறப்படும் மடல்கள் உண்மையிலேயே நம்பகத் தன்மையுள்ளவையாக இருந்தால், அவை சின்னப்பர் சிறைப்பட்ட பின் நடந்த நிகழ்வுகளின் காலகட்டத்தைப் பற்றிப் பேசுகின்றன. அவை நம்பகத்தன்மையற்றவை என்று வைத்துக்கொண்டாலும் அதே முடிவுதான் எட்டப்படுகிறது, ஏனெனில் இந்த ஆசிரியர், அப்போஸ்தலரின் வாழ்க்கையோடு நன்கு பரிச்சயமாகியிருந்தார் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள் கிறார்கள். சின்னப்பரின் சிறைவாசத்தைப் பற்றிய மடல்கள் என்று சொல்லப்படுபவை உரோமையில் இருந்து அனுப்பப்பட்டவை என்பது கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற கருத்தாக இருக்கிறது. அர்ச். சின்னப்பர் செசாரியாவில் சிறைவைக்கப்பட்டிருந்த போது, அவரே இந்த மடல்களை எழுதினார் என்று எண்பிக்க சிலர் முயன்றார்கள். ஆனால் மிகச் சிலரே அவர்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். கொலோசேயர், எபேசியர்கள், பிலமோன் ஆகியோருக்கு சின்னப்பர் எழுதிய நிருபங்கள் தீக்கிக்குஸ் என்னும் ஒரே தூதரால் ஒன்றாக அவற்றிற்குரிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் இவற்றிற்கு முந்தியதா, அல்லது பிந்தியதா என்பது இன்னும் சர்ச்சைக்குரிய காரியமாகவே இருக்கிறது. இந்தக் கேள்விக்கு உறுதியான வாதங்களைக் கொண்டு பதிலளிக்க இதுவரை யாராலும் முடியவில்லை (பிலிப்பியர், எபேசியர், கொலோசியர், பிலமோன் ஆகியோருக்கு அர்ச். சின்னப்பர் எழுதிய நிருபங்களைக் காண்க.).