சோம்பல்

சோம்பல் என்பது சரீர சோம்பலையும் குறித்தாலும், முக்கியமாக அது ஞான சோம்பலையே குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேவ நம்பிக்கையின்மையால்தான் இது உண்டாகிறது. இது நம் அர்ச்சிப்புக்கு அவசியமான வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் நாம் அலட்சியமாய் இருக்கச் செய்கிறது. இது ஞான ஊக்கத்தின் மீதான ஒரு வெறுப்பு ஆகும். இதன் விளைவாக நாம் வரப்பிரசாதத்தை மறுதலிக்கிறோம். நாம் சாவான பாவம் கட்டிக் கொண்டவுடனேயே சர்வேசுரனிடம் திரும்பி வருவதை இது தள்ளிப் போடச் செய்கிறது என்பதுதான் இதன் மிக மோசமான விளைவாக இருக்கிறது. பாஸ்குக் கடமையை அலட்சியம் செய்தவர்களும், திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்களுமாகிய எத்தனை ஆத்துமங்கள் சோம்பலின் கட்டுக்களை முறித்தெறிய முடியாத காரணத்தால், தங்கள் நித்திய இரட்சணியத்தை ஆபத்துக்கு உள்ளாக்கிக் கொண்டு, வருடக் கணக்கில், தங்கள் பாவ நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

சோம்பல் நம் மனத்திலும், சித்தத்திலும் குடியிருக்கிறது. இதுவே எல்லாத் தீமைகளிலும் மிக ஆபத்தான தீமையாகும். ஏனெனில் நாம் வரப்பிரசாதத்தோடு ஒத்துழைக்க மறுக்கும் படி இது செய்து விடுகிறது. அது நம்மைப் பாவப் பழக்கங்களில் சார்புள்ளவர்களாக ஆக்குகிறது; அந்தப் பழக்கங்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடவே முடியாதோ என்ற கடும் அச்ச உணர்வை நம்மில் ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறு அது நம் மரண வேளையில் கூட மனந்திரும்ப முடியாத நிலைக்கு நம்மைக் கொண்டு சென்று, நம் ஆத்துமத்தை நித்தியத்திற்கும் இழந்து போகக் காரணமாகி விடுகிறது.

நம் மந்தநிலை, வெதுவெதுப்பு, தேவ ஊழியத்தில் அலட்சிய மனநிலை ஆகியவை, எண்ணற்ற அற்பப் பாவங்களுக்குக் காரணமாகின்றன. இந்த அற்பப் பாவங்கள் தங்கள் பங்கிற்கு நம் சித்தத்தைப் பலவீனப்படுத்துகின்றன. நாம் ஒரு வலையில் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்கிறோம், ஆனாலும் அதை அறுத்தெறிய நாம் விரும்புவதில்லை.

ஞான காரியங்களில் நமது வலுவற்ற மனநிலை, நமது அசமந்தமான சித்தம், காலம் கடத்துதல், அதாவது முக்கிய காரியங்களை வேறொரு நேரத்திற்குத் தள்ளி வைத்தல், நம்மைப் பராக்கிற்கு உட்படுத்தி, நம் ஆத்துத்தின் தேவைகளைக் கவனிக்க நேரமில்லாமல் செய்கிற ஒருவித படபடப்பான செயல்பாடாக இருக்கிற, வீணான, பயனற்ற நம் உழைப்பு, உடல் சொகுசையும், செளகரியத்தையும் தேடும் நம் மனநிலை, நம் செயலற்ற நிலை, அல்லது எந்த நன்மையுமே செய்யாதிருத்தல் ஆகியவற்றைக் கொண்டு சோம்பலானது எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது என்பதை நாம் அடையாளம் காண முடியும்.

சோம்பலால், நம் அந்தஸ்தின் கடமைகளை அலட்சியம் செய்கிறோம்; நம் பிரதிக்கினைகளை நிறைவேற்றும் முயற்சிகளை அது கைவிடச் செய்கிறது; நம் வரப்பிரசாதங்களை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்ற அறிவு நம்மைத் துயரத்திலும், சோகத்திலும் ஆழ்த்துகிறது; நம்மை ஒப்புக் கொடுப்பதில் நாம் தாராளமானவர்களாக இல்லை என்பதால் எல்லாக் காரியங்களையும் நாம் விருப்பமில்லாமலும், முணுமுணுப்போடும் செய்யச் செய்கிறது; நம் கணக்கைச் செலுத்த நாம் மனமில்லாதவர்களாய் இருப்பதாலும், அதனால் நம் ஞான ஆற்றல்களை நாம் வீணாக்கி, நம் மனந்திரும்புதலைத் தள்ளிப் போடுவதாலும், சோம்பலானது அதிகம் பேசுவதில் ஆர்வமுள்ளவர்களாகச் செய்கிறது.

அர்ச் மத்தேயு சுவிசேஷத்தில் நம் ஆண்டவரால் சொல்லப் படுகிற சோம்பேறியான ஊழியனைப் பற்றிய உவமை (25:14-30), சோம்பலின் ஆபத்துக்களையும், பலனற்ற தன்மையையும், அதன் முடிவான நரகத்தையும் பற்றி நம்மை எச்சரிக்கிறது.

சோம்பலில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன: ஒன்று தேவையற்ற காரியங்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருத்தல்; நம் மனச்சான்றின் குரலைக் கவனிக்க நேரமில்லாமல் போகும் அளவுக்கு, இந்த வகை சோம்பலினால் நாம் எவ்வாறு நம்மையே திசைதிருப்பிக் கொள்கிறோம் என்பதை மேற்கண்ட பகுதிகளில் நாம் போதுமான அளவுக்கு விவரித்தாயிற்று. மற்ற இரண்டு வகைகள்: பராக்கு, மற்றும் அச்சம் தரும் ஞானச் சோர்வு ஆகியவை.

பராக்கு, ஜெபத்தில் நமது தியானவுணர்வை அழிக்கிறது; பக்திப்பற்றுதலும், கவனமுமின்றி நம் ஞான முயற்சிகளை நிறைவேற்றச் செய்கிறது; இங்கு, இப்போது செய்ய வேண்டிய காரியத்தை நாம் தள்ளிப்போடுமாறு, நம்மை அடித்து வீழ்த்துகிற ஒரு களைப்பால் நம்மை நிரப்புகிறது. நம் கடமைகளை சர்வேசுரனுக்காகச் செய்வதில் உள்ள சலுகையையும், அதைக் கொண்டு பரலோகத்தில் நித்தியப் பேறுபலனைச் சேர்த்து வைப்பதையும் தேடாமல், நம் கடமைகளைத் தாங்க முடியாத சுமையாக மட்டுமே நாம் பார்க்கிறோம்.

அச்சந் தருகிற ஞானச் சோர்வு, அல்லது ஊக்கமின்மை என்பது நம் மீதே நாம் கொள்ளும் ஒரு இரகசியக் கோபமாகவும், ஒரு வித சுய நேசமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக, நம் குற்றங் குறைகளையும், நம் பாவப் பழக்கத்தையும் உடைத்தெறிய நமக்குத் தைரியம் இருக்காது. அதனால் ஒரு விதப் பேரச்ச உணர்வை எப்போதும் நாம் உணர்கிறோம். இது தன் பங்கிற்கு நம்மை சண்டை, சச்சரவு செய்கிறவர்களாக ஆக்குகிறது. நம் உள்ளரங்கப் போராட்டங்களிலிருந்தும், கவலையிலிருந்தும் தப்பிக்க விரும்பி நாம் சிருஷ்டிகளிடம் திரும்பி, தேவையற்ற காரியங்களால் ஆக்கிரமிக்கப் படுகிறோம். அதே வேளையில் நம் அசமந்த நிலை, காலந் தாழ்த்துதல், வெதுவெதுப்பான நிலை அல்லது பாவம் ஆகியவை தொடர்ந்து நீடிக்கிறது.

நமது ஞானச் சோர்வானது பசாசுக்கு நம் ஆத்துமத்தின் மீது வல்லமை தருகிறது. அது பல மோசமான பாவங்களுக்கு எளிதாக இழுத்துச் செல்லக்கூடிய ஆத்தும நிலையாக இருக்கிறது. தேவத்திரவிய அனுமானங்களின் நற்பாதிப்புகளை அது பலவீனப்படுத்தி, அவற்றைத் தடுக்கிறது. ஞான ஜீவியத்தின் உத்தமமான வழிகள் நம் மட்டில் ஒரு விஷத்தைப் போலச் செயல்படச் செய்து விடுகிறது. சர்வேசுரனைக் கண்டடைய நம்மால் முடிவதில்லை. சர்வேசுரன் தருகிற ஆறுதல்களைத் தேடுகிற அளவுக்கு அவரை நாம் தேடுவதில்லை, நம் ஆசைகள், நற்கீர்த்தி ஆகியவை பற்றி நாம் கவலைப்படுகிற அளவுக்கு, அவருடைய சித்தத்தையும், மகிமையையும் நாம் பெரிதாக எண்ணுவதில்லை. என்றாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், நம் மகிழ்ச்சியற்ற நிலை அதிகரிக்கிறது. நம் சொந்த ஞான சமாதானமும், முன்னேற்றமும், அதாவது ஞான முறையிலான சுய தேடலுமே நம் குறிக்கோளாக இருக்கின்றனவே அன்றி, சர்வேசுரனை நாம் தேடுவதில்லை. நம் சொந்த இறுதிக் கதியையும், அதை அடைவதற்கான வழியையும் பற்றிய பார்வையை நாம் இழந்து போகிறோம்.

சுவாமி ஃபேபர் ஆத்துமத்தின் இந்த நிலையைக் குறித்து இவ்வாறு பேசுகிறார்: “துயரம் என்பது ஒரு விதமான ஞான இயலாமை ஆகும். ஞானச் சோர்வுள்ள ஒரு மனிதன் சர்வேசுரனுடைய இல்லத்தில், நோய் நீங்கி படிப்படியாக சுகம் பெற்று வருகிற ஒருவனாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு மேலான ஒரு நிலைக்கு அவன் ஒருபோதும் உயரவே முடியாது. அவன் சர்வேசுரனைத் தனது தந்தையாகவும், அரசராகவும் கண்டு அவருக்குப் பணிவிடை செய்வதற்குப் பதிலாக, அவர்தான் அவனுடைய மருத்துவராக இருந்து அவனைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. . . . சிடுசிடுப்பான மனநிலை, உணர்ச்சிகளுக்கு அடிமைகளாயிருத்தல் ஆகியவற்றில் உள்ள தார்மீக மந்த புத்தியை விடப் பெரிதான மந்தபுத்தி எதுவுமில்லை. தன் வாழ்நாள் முழுவதும், நோய்ப்படுக்கையில் இருப்பது போல, வறியதாகவும், தளர்ச்சியுற்றதாகவும் விழுந்து கிடக்கிற ஒரு ஆத்துமம், சர்வேசுரனுக்காக என்னதான் செய்து விட முடியும்?”

இன்று, சோம்பல் அடிக்கடி, சாக்குப்போக்குகளின் மூலம் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் என்ற பெயரால் குறிப்பிடப் படுகிறது. சோம்பலுக்குப் பலியான ஒருவன், தான் ஒரு ஞான மூடுபனியாக, அதாவது ஞானத் தெளிவற்ற நிலையில், இருப்பதை உணர்கிறான். அவன் அந்நிலையில் இருப்பதற்கான உண்மையான காரணம், சிநேகத்தை அழிக்கிற சித்தத்தின் செயலற்ற நிலைதான். ஆனால் அவன் அதை மறைத்து, தனது ஞான வறட்சி, அல்லது வேறு ஏதோ ஒரு காரியம்தான் அதற்குக் காரணம் என்று குற்றம் சாட்ட முயற்சி செய்யக் கூடும்.

நம் வாழ்நாள் முழுவதும் தடுமாற்றத்தோடு வாழ்ந்து, சோம்பல்தான் ஞான ஜீவியத்தில் நம்மை முன்னேற விடாமல் தடுக்கிறது என்பதை நாம் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம். சோம்பல் எத்தனை பேரை தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுவதினின்றும், அனுதினப் பூசையினின்றும், திவ்ய நன்மை உட்கொள்வதினின்றும் தடுத்து வைத்திருக்கிறது என்பதை ஒருவரும் அறியார். நம் ஞான ரீதியானதும், லெளகீகமானதுமாகிய பிறர் சிநேகச் செயல்களைக் கொண்டே நாம் தீர்ப்பிடப்படுகிறோம். இத்தகைய இரக்கச் செயல்கள் சோம்பலின் காரணமாக, எவ்வளவு அதிகமாக அலட்சியம் செய்யப்படுகின்றன என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும், இந்தத் தீமையானது எண்ணற்ற வழிகளில் பெரும் சேதங்களை விளைவிக்கிறது என்பது நிச்சயம்.

பயனுள்ள காரியங்களாலும், தீவிர உழைப்பாலும் நம் புத்தியை ஆக்கிரமித்துக் கொள்வதை நாம் அலட்சியப் படுத்தும்படி செய்து விடுகிற மனச் சோம்பலும் கூட மிக ஆபத்தானது. ஏனெனில் இவ்வாறு தன்னை நிரப்பிக் கொள்ளாத ஒரு மனம் தீமையை நோக்கிச் செல்கிறது. அதன் வேகமான அழிவை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. நம் சரீரம் சுறுசுறுப்பான காரியங்களில் ஈடுபட்டிருக்கும்போதும் கூட நம் மனம் நல்ல, பயனுள்ள சிந்தனைகளால் நிரப்பப் படலாம். இதற்கு மாறாக, சரீர சோம்பல், அல்லது வேலையற்ற, செயலற்றதனம், ஆயிரக்கணக்கான சோதனைகளுக்குள் நம்மை இழுத்துச் சென்று விடும். சோம்பலின் செயலற்ற நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் நம் சித்தத்தின் பலவீனம், அசமந்தம் ஆகியவை காரணமாக அந்த சோதனைகளை எதிர்த்து நிற்க நம்மால் முடியாது.

சோம்பலானது, நாம் இரட்சணியத்தைப் பெற்றுக் கொள்ள விடாமல் தடுப்பதாலும், அது பல தீமைகளுக்குத் தாயாக இருப்பதாலும், அதனிடமிருந்து நாம் பறந்தோடிப் போக வேண்டும். எதையும் விதைக்காதவன், எதையும் அறுவடை செய்ய முடியாது. நம் வாழ்வு குறுகியது, பரலோக நித்தியப் பேரின்பத்தை சுதந்தரித்துக் கொள்ள நமக்கு மிகச் சில வருடங்களே இருக்கின்றன. கடும் உழைப்பு, ஒறுத்தல்கள், திருப்பாடுகள், திருச் சிலுவை ஆகியவற்றால் பரலோக மகிமையை வெற்றி கொண்ட நம் ஆண்டவரின் முன்மாதிரிகையை நாம் பின்பற்ற வேண்டும். நித்தியப் பேறுபலன்களைச் சேர்த்து வைக்கத் தவறுவது என்பது பரலோகத்தில் நம் தகுதியைக் குறைப்பதாகும். நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யத் தவறுவது என்பது ஒரு நீண்ட உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைக்கு நம்மை ஆயத்தம் செய்வதாகும். நித்திய இரட்சணியத்தைப் பெற்றுக் கொள்ளத் தவறுவதோ, முழுவதுமாகத் தவறிப் போய், நித்திய ஆக்கினையின் சாபத்தை அறுவடை செய்வதாகும்.

சர்வேசுரனுக்காகவும், ஆத்துமங்களின் நன்மைக்காகவும் விழிப்பாயிருந்து மிகுந்த ஆர்வத்தோடு உழைப்பது என்பது சோம்பலுக்கு எதிரான புண்ணியமாகும். அது நம் வேதக் கடமைகளை நிறைவேற்றுவதை இலகுவானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றுகிறது. நற்கிரியைகளின் எண்ணெயால் விசுவாச ஒளி போஷிக்கப் படுகிறது. பல சோதனைகளையும், பாவங்களையும் தவிர்ப்பதற்கு அது நமக்கு உதவுவதோடு, நம் கடைசி நிலைமை வரத்தை உறுதிப் படுத்துவதிலும் நமக்கு உதவுகிறது.


சோம்பலுக்கான தீர்வு

சோம்பலை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் நம்மில் உள்ள சோம்பலின் மீதான நாட்டங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்த வேண்டும்; மேலும் ஜெபத்திலும், தேவத் திரவிய அனுமானங்களிலும் உதவி தேட வேண்டும். பொதுத் தீர்வை நாளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது மந்தமான சித்தத்தைத் தட்டியெழுப்ப ஞான வாசகம் நமக்கு உதவும். ஆயினும் எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்பிரீத்து சாந்துவானவரிடம் பக்தி கொண்டிருப்பது மிகுந்த வல்லமையுள்ளதாக இருக்கும். ஏனெனில், சிநேகமல்ல, பயமே சோம்பலைத் தூண்டி நடத்துகிற ஆதாரமாக இருக்கிறது. இஸ்பிரீத்து சாந்துவானவரோ நேசத்தின் இஸ்பிரீத்துவாகவும், அதன் ஆதாரமாகவும் இருக்கிறார். சோம்பலுக்கு எதிரான மாற்று மருந்தாகிய தேவ சிநேகத்தைக் கண்டடையும்படி நாம் அவரிடம்தான் செல்ல வேண்டும். நம் இருதயங்களுக்குள் சிநேகத்தை ஊற்றும்படியாக அவரிடம் நாம் கெஞ்சி மன்றாட வேண்டும்.