திருச்சபை உண்டா என்பதின் உண்மையும், அதன் தன்மையும்

1. சேசுநாதர் இவ்வுலகத்தில் இருக்கும்போது ஒரு சபையை உண்டாக்கினாரா?

ஆம். (1) அவர் ஒருநாள் இராயப்பரை நோக்கி: “நீ கல்லாயிருக்கிறாய்; இந்தக் கல்லின்மேல் எனது சபையைக் கட்டுவேன்” என்றார் (மத். 16:18). இன்னமும் வேத புஸ்தகத்தில் பற்பல வசனங்கள் அதற்கு அத்தாட்சி (எபே. 1:22,23, 4:11,12).

(2) ஆதித் துவக்கத்திலிருந்தே திருச்சபையானது சேசு நாதரையயாழிய வேறு யாதொருவரையும் தன்னை ஏற்படுத்தின வராக ஒருக்காலும் அங்கீகரிக்கவில்லை.

(3) சேசுநாதருக்கு முன் யாதொரு திருச்சபை இருந் ததாக குறிக்கப்படவில்லை. அவருடைய படிப்பினையோடும், சகல ஜனங்களுக்கும் போதிக்கும்படி அவராலே அனுப்பப்பட்ட அப்போஸ்தலர்களின் போதகத்தோடும் திருச்சபை உண்டாயிற்று.

2. சேசுநாதர் ஏற்படுத்தின சபையை மெய்யான சபையென்று சொல்லலாமா?

சொல்ல வேண்டும். ஏனெனில் மெய்யான சபைக் குள்ள நிபந்தனைகள், அவர் உண்டாக்கின சபைக்கு இருக்கின்றன.

3. மெய்யான சபைக்குள்ள நிபந்தனைகள் எவை?

ஒரு சபை மெய்யான சபையாயிருக்கும்படி:

(1) அது அநேகருடைய புத்தியிலும், மனதிலும் ஒரு ஒன்றிப்பைக் கொண்டிருக்க வேண்டும்,

(2) அது பொதுவான ஒரு கதியின்மேல் நோக்கமா யிருக்க வேண்டும்,

(3) அந்தக் கதியை அடைவதற்காக அது பொதுவான வழிவகைகளைப் பிரயோகிக்க வேண்டும்.

4. சேசுநாதர் உண்டாக்கின சபைக்கு இம்மூன்று நிபந்தனைகள் உண்டா?

உண்டு. திருச்சபையானது:

(1) சேசுநாதரைப் பின்செல்ல மனதாயிருந்து ஞான ஸ்நானத்தைப் பெற்றவர்களுடைய சேர்க்கையாயிருக்கிறது,

(2) நித்திய சீவியத்துக்குச் சகல மனிதர்களையும் கொண்டுபோய்ச் சேர்ப்பதே அதன் ஏக கதியாம்,

(3) அக்கதியை அடைவதற்காக திருச்சபை பொது வான சாதனங்களைப் பிரயோகித்து வருகிறது. அதாவது, ஒரே விதமான சத்தியங்களைப் படிப்பித்தலும், ஒரே விதமான கற்பனைகளைக் கற்பித்தலும், ஒரே விதமான தேவத்திரவிய அநுமானங்ளை நிறைவேற்றுதலும், அர்ச். பாப்பானவராகிய ஒரே தலைவருக்குக் கீழ்ப்படிதலுமாம்.

5. சேசுநாதர் எப்படித் திருச்சபையை உண்டாக்கினார்?

(1) நமதாண்டவர் தமது சீடர்களுக்குள் பன்னிரண்டு பெயரை அப்போஸ்தலர்களாகத் தெரிந்தெடுத்து,

(2) அவர்களைத் தமது போதனைகளாலும், மாதிரிகை யினாலும் உருவாக்கி,

(3) தேவ வரப்பிரசாதத்தால் உறுதிப்படுத்தி,

(4) குருத்துவத்தினால் அபிஷேகம் பண்ணி,

(5) தமக்குப் பதிலாக அர்ச். இராயப்பரை நியமித்து,

(6) விசுவாசிகளுக்குப் போதிக்கவும், அவர்களை ஆண்டு அர்ச்சிக்கவும் அதிகாரத்தை அளித்து,

(7) உலகக் கடைசி வரையில் அவர்களோடுகூட இருப்பதாக வாக்குக் கொடுத்து,

(8) தாம் தமது பிதாவோடு ஒன்றாயிருக்கிறதுபோல், திருச்சபையின் அங்கத்தினர்களாகிய மேய்ப்பர்களும், விசுவாசி களும் ஒன்றாயிருப்பதாக வேண்டிக்கொண்டு, திருச்சபையை ஸ்தாபித்தார்.

6. தமது சபை எப்போதைக்கும் இருக்கும்படியாக சேசுநாதர் அதை உண்டாக்கினாரா?

“உலக கடைசி வரையில் உங்களோடுகூட இருக் கிறேன்” (மத்.28:20) என்பதால், சேசுநாதர் தாம் ஏற்படுத்தின திருச் சபை உலக முடிவுவரை இருக்கும்படியாகவே அதனை உண்டாக் கினாரென்று காணப்படுகிறது. மேலும் சகல மனிதரும் இரட்சணி யம் அடைய சேசுநாதர் தமது திருச்சபையை ஸ்தாபித்திருக்கிற படியால் அது உலக முடிவு வரையில் நிலைத்திருக்க வேண்டும்.

7. சேசுநாதர் ஸ்தாபித்த திருச்சபை இன்னும் இருக்கிறதா?

சர்வேசுரனான சேசுநாதர் உலக முடிவுவரை தமது திருச்சபையோடு இருப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதால், அவர் ஸ்தாபித்த சபை இன்னும் இருப்பதாகத் தீர்மானிக்க வேண்டும்.

8. சேசுநாதர் ஸ்தாபித்த திருச்சபை சுபாவத்துக்கு மேற்பட்டதா யிருக்கிறதெப்படி?

அதன் கதி சுபாவத்துக்கு மேற்பட்டதாயிருப்பது மட்டுமல்லாமல் அக்கதியை அடைய வேண்டிய உபாயங்களும் சுபாவத்துக்கு மேற்பட்டதாயிருக்கின்றன.

9. சேசுநாதர் ஸ்தாபித்த சபை ஏன் காணக்கூடியதாயிருக்க வேண்டும்?

சகல மனிதர்களையும் மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போகும்படி திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டிருப்பதினால், நல்ல மனதுள்ள சகலரும் அதை எளிதாய் அறிந்து கொள்ளக் கூடுமாயிருக்க வேண்டும்.

10. எப்படி திருச்சபை பரிசுத்தமாயிருக்கிறது?

அதை ஸ்தாபித்த சேசுநாதர் பரிசுத்தராயிருக்கிறது மல்லாமல், அதின் அங்கத்தினர்களெல்லாரும் பரிசுத்தத்தனத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

11. கத்தோலிக்கம் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?

பொது என்று அர்த்தம் ஆகும்.

12. திருச்சபை ஏன் பொதுவாயிருக்கவேண்டும்?

எல்லா மனுக்குலத்தையும் இரட்சிக்கிறதற்காகத்தான் சேசுநாதர் பாடுபட்டு மரணத்தை அடைந்தார்.

13. ஏன் மனிதர் நித்திய ஈடேற்றத்தை அடைவதற்குத் திருச் சபையில் சேர வேண்டியது?

மோட்சத்தை அடைய திருச்சபை ஏக வழியாயிருக் கிறபடியினால்தான். 

14. சேசுநாதருக்கும் திருச்சபைக்குமுள்ள சம்பந்தம் என்ன?

சேசுநாதர் திருச்சபையின் ஸ்தாபகராகவும், அதற்கு அஸ்திவாரமாகவுமிருக்கிறார்; திருச்சபையோவென்றால் இஸ்பிரீத்து சாந்துவினால் சீவியம் அளிக்கப்பெற்று உய்யும் சேசுநாதருடைய மிஸ்திக்கு (ஞான) சரீரமும், அவருடைய பத்தினியுமாயிருக்கிறது.

15. இவற்றுள் அடங்கியுள்ள விசேஷங்கள் எவை?

திருச்சபையானது:

(1) சேசுநாதருடைய ஞான சரீரமாயிருக்கிறது,

(2) அதன் சிரசு சேசுகிறீஸ்துநாதர்,

(3) இஸ்பிரீத்துசாந்து அதன் ஆத்துமமாயிருக்கிறார்,

(4) சேசுநாதருடைய பத்தினியாயிருக்கிறது.

16. திருச்சபையானது சேசுநாதருடைய சரீரமாயிருக்கிறதாக எப்படி அறிவோம்?

சேசுநாதர் கிறீஸ்துவர்களை உபத்திரவப்படுத்திய சவுலுக்குத் தரிசனமானபோது: “ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் ... நீ உபத்திரவப்படுத்துகிற சேசுநாதர் நாமே” என்று சொன்னார் (அப்.நட. 9:4,5). மேலும் அர்ச். சின்னப்பர் தாம் எழுதிய பற்பல நிருபங்களில் இந்த வேதசத்தியத்தை விவரித்திருக்கிறார் (உரோ. 12:4,5; 1 கொரி. 12:12-31; எபே. 1:22,23, 2:19-22, 4:1-16, 5:22,23, கொலோ. 1:17-20 காண்க.)

17. அர்ச். சின்னப்பர் திருச்சபையானது, சேசுநாதருடைய சரீரம் என்று சொல்லியிருக்க, மிஸ்திக்கு (ஞான) என்னும் பதம் அந்த வார்த்தை களோடு ஏன் சேர்க்கப்பட்டது?

அர்ச். கன்னிமரியம்மாளிடமிருந்து பிறந்ததும், தேவ நற்கருணையில் மறைந்திருக்கிறதுமாகிய சேசுநாதருடைய மெய் யான சடப்பொருளான சரீரம் வேறே, கிறீஸ்துநாதரைச் சிரசாகவும் தலைவராகவும் கொண்ட திருச்சபை எனப்படும் சமுதாயச் சரீரம் (அதாவது, கிறீஸ்துவ விசுவாசிகளின் பொதுச் சங்கம்) வேறே என்று பிரித்துக் காண்பிக்கும்படியாகத்தான்.

18. சேசுநாதர் அந்த ஞான சரீரத்தின் சிரசாயிருக்கிறாரென்று எப்படி நிரூபிக்கலாம்?

“சர்வேசுரன் அவரை (அதாவது சேசுநாதரை) சர்வ திருச்சபைக்குத் தலைமையாகக் கொடுத்தார்” (எபே. 1:22). “அவரே திருச்சபையாகிய சரீரத்துக்குத் தலைமையானவர்” (கொலோ. 1:18) என்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார்.

19. இஸ்பிரீத்துசாந்து திருச்சபையின் ஆத்துமமாயிருக்கிறார் என்று சொல்லுவது ஏன்?

ஏனெனில், திருச்சபையும், அதைச் சேர்ந்தவர்களும் மெய்யான தேவ சீவியம் சீவிக்கும்படி இஷ்டப்பிரசாதத்தைப் பொழிந்தருளுகிறவர் அவரே.

20. திருச்சபையானது சேசுநாதருடைய பத்தினி என்று ஏன் அழைக்கப்படுகிறது?

(1) சேசுநாதர் திருச்சபையை அளவிறந்த பட்சத் தோடு நேசிக்கிறபடியினாலும், (எபே. 5:25-27),

(2) திருச்சபையானது மனிதர்களுக்கு ஞானஸ்நானத் தைக் கொடுத்து, அவர்களை இரட்சணிய வழியில் நடத்தி, இப்படி யாக, சேசுநாதருக்கு அநேக பிள்ளைகளைப் பிறப்பிக்கிறபடி யினாலுந்தான்.

81. திருச்சபை ஆவதென்ன?

அர்ச். பாப்பானவரோடும், அவருக்குக் கீழ்ப்பட்ட மேற்றிராணி மார்களோடும் ஒன்றித்திருக்கிற விசுவாசிகளுடைய சபையே திருச் சபையாம்.

1. திருச்சபை என்னும் வார்த்தைக்கு அர்த்தமென்ன?

பரிசுத்த கூட்டம் என்று அர்த்தமாம்.

2. தங்கள் ஞான அதிகாரிகளோடு விசுவாசிகள் ஒன்றித்திருக்க வேண்டுமென்று சொல்லுவது ஏன்?

அதிகாரிகளோடு விசுவாசிகள் ஒன்றித்து நிற்பதுதான் கத்தோலிக்கத் திருச்சபையாகும்.

3. விசுவாசிகள் யார்?

ஞானஸ்நானம் பெற்று, சேசுநாதர்சுவாமி படிப்பித்த வேத சத்தியங்களையெல்லாம் விசுவசித்து, அவர் ஏற்படுத்தின தேவத்திரவிய அநுமானங்களை ஏற்றுக்கொண்டு, அவருக்குப் பதிலாளியாயிருக்கிற அர்ச். பாப்பானவருடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள்தான்.

4. திருச்சபையில் எத்தனை வகுப்பினர் உண்டு?

போதிக்கிறவர்கள், போதிக்கப்படுகிறவர்கள் ஆகிய இரண்டு வகுப்பினர் உண்டு.

5. போதிக்கிறவர்கள் யார்?

அர்ச். பாப்பானவரும், அவருடன் ஐக்கியமாயிருக்கிற மேற்றிராணிமார்களும். இதினிமித்தம் போதிக்கும் திருச்சபை என்பது இவர்கள் பெயர்.

6. அவர்கள் வேலை என்ன?

விசுவாசிகளுக்கு சேசுநாதரின் வேதத்தைப் போதித்து, தேவத்திரவிய அநுமானங்களை நிறைவேற்றி, திருச்சபையை ஆண்டு நடத்துவது அவர்கள் வேலையாகும்.

7. போதிக்கப்படுகிறவர்கள் யார்?

சாதாரண குருக்களும், விசுவாசிகளும்.

8. அவர்களுடைய கடமைகள் எவை?

தங்கள் ஞான அதிகாரிகளுக்குச் சரிவர கீழ்ப்படிந்து, அவர்கள் மூலமாய் வேதத்தைக் கற்றுக்கொள்ளுகிறது இவர்களைச் சேர்ந்த கடமையாகும். “உங்கள் ஞான வழிகாட்டிகளுக்குப் பணிந்து அடங்கி நடங்கள்” (எபிரே. 13:17).

9. பாவிகள் திருச்சபையின் அங்கத்தினரா?

நோவாவின் பெட்டகத்தில் சுத்தமான மிருகங்களும், அசுத்தமான மிருகங்களும் இருந்ததுபோல், பாவிகளும் திருச்சபை யின் அங்கத்தினராயிருக்கிறார்கள். ஆனால் பாவிகள் இவ்வுல கத்தில் பச்சாத்தாபப்பட்டாலொழிய நித்தியத்தில் திருச்சபையின் அங்கத்தினராயிருக்க மாட்டார்கள்.

10. சேசுநாதர் ஏன் திருச்சபையை ஸ்தாபித்தார்?

தமது வேலையைப் பூலோகத்தில் தொடர்ந்து நடத்தும்படியாகத்தான். எப்படியென்றால், தாம் திருச்சிலுவையில் நிறைவேற்றிய இரட்சணியத்தின் பலன்கள், திருச்சபையிலும், திருச் சபையின் மூலமாகவும், உலக முடிவுவரையிலும், மனிதர்களுக்குக் கிடைக்கும்படியாக ஏற்பாடு செய்தார்.