1916 செப்டம்பர் மாத பிற்பகுதி அல்லது அக்டோபர் மாத முற்பகுதியாயிருக்கலாம். கபேசோ குகையில் மூன்று குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். பின் செபமாலை சொல்லி, மூவரும் சம்மனசு கூறியது போல் முகம் தரைப்படக் கவிழ்ந்து ஒரே குரலில் "என் தேவனே உம்மை விசுவசிக்கிறேன்...” என்ற செபத்தை சில தடவைகள் சொல்லவும் ஒரு ஒளி அவர்களைச் சூழ்ந்தது. அங்கே நின்றார் தூதன்! அவரின் இடது கரத்தில் பூசைப் பாத்திரத்தைப் பிடித்திருந்தார். பாத்திரத்தின் மேலே திரு அப்பத்தை வலது கையில் ஏந்தியிருந்தார். திரு அப்பத்திலிருந்து இரத்தம் துளிர்த்து பாத்திரத்துள் விழுந்தது!
பின் தூதன் பாத்திரத்தையும் நற்கருணை அப்பத்தையும் அப்படியே ஆகாயத்தில் நிற்க விட்டுவிட்டு குழந்தைகளுடன் முழங்காலிட்டு சாஷ்டாங்கமாய் விழுந்து: “ஓ மகா பரிசுத்த திரித்துவமே, பிதாவே! சுதனே! இஸ்பிரீத்து சாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்குமுள்ள நற்கருணைப் பேழைகளிலிருக்கும் சேசுகிறீஸ்துவின் விலைமதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். அவருடைய திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்” என்ற செபத்தை மும்முறை சொல்லி செபித்தார்.
பின் எழுந்து ஆகாயத்தில் நின்ற பாத்திரத்தையும் நற்கருணை அப்பத்தையும் முன்போல் ஏந்திக்கொண்டு முழங்காலிட்டு:
“நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தப்படுகிற சேசுகிறீஸ்துவின் திருச் சரீரத்தையும் திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்காகப் பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்” என்றார்.
நற்கருணை அப்பத்தை லூஸியாவுக்கும், திரு இரத்தத்தை பிரான்சிஸ், ஜஸிந்தாவுக்கும் தூதன் உட்கொள்ளக் கொடுத்தபின் மறைந்தார்.
சம்மனசின் ஆயத்தக் காட்சிகள் இவை. இவற்றை வாசித்துவிட்டுப் போனால் பயன் ஏற்படாது. இங்கே நாம் நடந்த நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் மட்டும் தருகிறோம். அவற்றை ஆழ்ந்து சிந்தித்து தியானிக்க வேண்டும்.