(அப். நட. 13:1-14;27)
புறஜாதியாருக்கு ஒரு விசேஷமான முறையில் சுவிசேஷம் அறிவிக்கப்படும்படி இஸ்பிரீத்து சாந்துவானவர் தந்த கட்டளையால் இந்தப் பணிக்கென ஒதுக்கப்பட்டு, சவுலும், பர்னபாஸும் சைப்ரஸுக்குக் கப்பற்பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்கள் சலாமினா ஜெப ஆலயத்தில் பிரசங்கிக்கிறார்கள்; சந்தேகமின்றி தெற்குக் கடற்கரையைப் பின்பற்றி அந்தத் தீவை கிழக்கிலிருந்து மேற்காகக் கடந்து சென்று, உரோமை ஆளுனனாகிய செர்ஜியுஸ் பவுலுஸின் வசிப்பிடமான பாஃபோஸை அடைகிறார்கள். அங்கே ஒரு திடீர் மாற்றம் நிகழ்கிறது. உரோமை ஆளுனரின் மனந் திரும்புதலுக்குப் பிறகு, இதுவரை சவுலாக இருந்தவர் திடீரென்று சின்னப்பராக மாறுகிறார். அர்ச். லூக்காஸ் எப்போதும் ஒரே விதமாக பர்னபாஸுக்கு முந்தின ஸ்தானத்திலேயே அவரைக் குறிப்பிடு கிறார். இதுவரை பர்னபாஸ் வழிநடத்தி வந்த இந்த வேதபோதகப் பயணத்தின் தலைமைப் பொறுப்பை இப்போது சின்னப்பர் வெளிப்படையாகவே எடுத்துக் கொள்கிறார்.
இந்த மாற்றத்தின் விளைவுகள் சீக்கிரத்திலேயே வெளிப்படுகின்றன. சீரியா, சிசிலியா ஆகிய இரு நாடுகளும் கிறீஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளும்போது, இயல்பாகவே அவற்றின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைப்ரஸும் கிறீஸ்துவின் விசுவாசத்தைத் தழுவிக் கொள்ளும் என்று சந்தேகமற முடிவு செய்த சின்னப்பர், தம் அப்போஸ்தல ஊழியத்தின் களமாக சிறிய ஆசியாவைத் தேர்ந்து கொண்டார். அவர் செஸ்த்ருஸின் முகத்துவாரத்திற்கு மேலாக எண்பது மைல் தொலைவிலிருந்த பம்பீலியாவிலுள்ள பெர்கேவுக்குக் கப்பற்பயணம் மேற்கொண்டார். அச்சமயத்தில் பர்னபாஸின் ஒன்றுவிட்ட சகோதர ராகிய ஜான் மாற்கு என்பவர், நம் அப்போஸ்தலரின் துணிச்சல் மிக்க பயணத் திட்டங்களைக் கேட்டுத் திகைப்படைந்தோ என்னவோ, அந்தப் பயணத்தைக் கைவிட்டு, ஜெருசலேமுக்குத் திரும்பிப் போய் விட்டார். அதே வேளையில் சின்னப்பரும், பர்னபாஸும் கொள்ளையர்களும், அச்சந் தரும் செங்குத்தான பாறைகளும் நிறைந்திருந்த கடினமான பிஸிதியா மலைகளின் வழியாக மிகச் சிரமப்பட்டு கடந்து வந்தார்கள். பெர்கேயிலிருந்து ஏழு நாள் பயண தூரத்தில் அமைந்திருந்த உரோமைய குடியேற்றப் பகுதியாகிய அந்தியோக்கைச் சென்றடைவது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. இங்கே சின்னப்பர் இஸ்ராயேலுக்குக் கடவுள் விடுத்த அழைப்பைப் பற்றியும், மெசையாவை அவர் அனுப்பியதில் வெளிப்பட்ட தேவ பராமரிப்பு பற்றியும் பேசினார். சின்னப்பர் யூத தேவாலயங்களில் ஆற்றிய பிரசங்கங்களின் ஒரு மாதிரியாக, அதன் முழுப் பொருண்மையில் அர்ச். லூக்காஸால் எழுதப்பட்டுள்ள ஒரு பிரசங்கம் இது (அப். 13:16-41). அந்தியோக்கியாவில் இந்த இரு வேதபோதகர்களும் தற்காலிகமாகத் தங்கியிருந்த காலம், அந்த நாடு முழுவதும் ஆண்டவரின் வார்த்தையைப் பரப்புவதற்குப் போதுமானதாக இருந்தது (அப். நட. 13:49).
யூதர்கள் தங்கள் இரகசிய சதிமானங்களால் அவர்களுக்கு எதிரான நாடுகடத்தும் உத்தரவைப் பெற்றுக் கொண்ட போது, அவர்கள் மூன்று, நான்கு நாட்கள் பயணத் தூரத்திலிருந்து இக்கோனியா என்ற இடத்திற்குச் சென்றார்கள். அங்கேயும் அவர்கள் யூதர்களால் அதே விதமான கலாபனைக்கு உள்ளானார்கள். ஆனால் புறஜாதியாரிடமிருந்தோ, அதே ஆர்வமுள்ள வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது. யூதர்களின் பகைமை, பதினெட்டு மைல் தொலைவிலிருந்த லிஸ்திரா என்னும் உரோமைக் குடியேற்றப் பகுதியில் அவர்கள் தஞ்சமடையும்படி செய்தது. இங்கே அந்தியோக்கு மற்றும் இக்கோனியாவைச் சேர்ந்த யூதர்கள் சின்னப்பரைக் கொல்லத் திட்டமிட்டார்கள். அவர்கள் அவரைக் கற்களால் எறிந்து, அவர் இறந்து விட்டதாக எண்ணி, அவரை விட்டு விட்டுப் போய்விட்டார்கள். ஆனால் அவர் மறுபடியும் இதிலிருந்து தப்பினார். இந்த முறை அவர் சுமார் நாற்பது மைல் தொலைவில், கலாத்தியா மாகாணத்தின் எல்லையில் அமைந்திருந்த தெர்பேயில் அவர் அடைக்கலம் புகுந்தார். தங்களுடைய இந்தப் பயணச் சுற்று இப்படி முடிவுபெற, வேதபோதகர்கள் இருவரும், இவ்வளவு அதிக விலை கொடுத்து தாங்கள் ஸ்தாபித்த ஒவ்வொரு சபையிலுமிருந்த புதிதாக மனந்திரும்பிய சீடர்களையும், தங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட குருக்களையும் சந்திக்கும்படி தாங்கள் வந்த வழியாகவே திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் பெர்கேயை அடைந்து, அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காகத் தங்கினார்கள். அநேகமாக பன்னிரண்டு மைல் தொலைவிலிருந்த அத்தாலியா துறைமுகத்திற்குக் கப்பலேறும் வாய்ப்புக்காகக் காத்திருந்தபடி அவர்கள் அங்கே தங்கியிருந் திருக்கலாம். குறைந்தது மூன்று வருடங்களுக்குப் பிறகு சீரியாவிலுள்ள அந்தியோக்குவுக்கு அவர்கள் திரும்பி வந்த போது, பெரும் மகிழ்ச்சியோடும் நன்றியறிதலோடும் அவர்கள் வரவேற்கப்பட்டார்கள். ஏனெனில் கடவுள் புறஜாதியாருக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்து விட்டிருந்தார்.
திருச்சபையில் புறஜாதியாருக்குள்ள அந்தஸ்து பற்றிய பிரச்சினை, இப்போது கடுமையான முறையில் வெளிப்படலாயிற்று. ஜெருசலேமிலிருந்து இறங்கி வந்த சில யூத கிறீஸ்தவர்கள், புறஜாதி யாரும் விருத்தசேதனத்திற்கு உட்பட வேண்டும் என்று உரிமை கொண்டாடினார்கள். அவர்கள் பாலஸ்தீனத்திற்கு வெளியே வாழ்ந்த மனந்திரும்பிய யூதர்களை எப்படி நடத்தினார்களோ, அப்படியே இந்தப் புறஜாதியாரையும் நடத்தினார்கள். இதற்கு எதிராக சின்னப்பரும், பர்னபாஸும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி ஜெருசலேமில் ஒரு கூட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பவுலும் பர்னபாஸும் அந்தியோக்கு கிறீஸ்தவர்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்றார்கள். இராயப்பர் புறஜாதியாரின் சுதந்திரத்தை வற்புறுத்த, யாகப்பர் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். அதே சமயம், புறஜாதியார் குறிப்பாக யூதர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கிய சில குறிப்பிட்ட காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.
முதலாவதாக, யூதர்கள் மோயீசனின் வேதப் பிரமாணத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக, சீரியாவையும், சிசிலியாவையும் சேர்ந்தவர்கள் விக்கிரகங் களுக்குப் படைக்கப்பட்டவைகளுக்கும், இரத்தத்திற்கும், மூச்சடைத்து செத்தவைகளுக்கும், வேசித் தனத்திற்கும் விலகியிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மூன்றாவதாக, இந்த அதிகாரமுள்ள கட்டளை மோயீசனின் சட்டப் பிரகாரம் இல்லாமல், இஸ்பிரீத்துசாந்துவானவரின் நாமத்தினாலேயே அவர்கள் மீது சுமத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது சின்னப்பரின் கருத்துக்களுடைய முழு வெற்றியாக இருந்தது.
சீரியா மற்றும் சிசிலியா ஆகியவற்றின் புதுக் கிறீஸ்தவர்கள் மேல் சுமத்தப்பட்ட இந்தக் கட்டுப்பாடு, அவருடைய சபைகளைப் பாதிக்கவில்லை. யூதக் கிறீஸ்தவர்களின் பலமான எதிர்ப்பு களையும் மீறி, சின்னப்பரின் தோழரான தீத்து விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி கட்டாயப் படுத்தப்படவில்லை (கலாத். 2:3-4). இங்கே கலாத்தியர் 2-ம் அதிகாரமும், அப்போஸ்தலருடைய நடபடியும் ஒரே நிகழ்ச்சியை விவரிக்கிறபடி, சின்னப்பரும், பர்னபாஸும் ஒரு புறத்திலும், இராயப்பரும், யாகப்பரும் மறுபுறத்திலுமாக, அதே விவாதம் நடந்தேறியது. புறஜாதியாரின் விருத்த சேதனத்தைப் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டது; இந்தக் காட்சிகள் அதே அந்தியோக்கிலும், ஜெருசலேமிலும் மீண்டும் நடந்தன, காலமும் அதேதான், கிட்டத்தட்ட கி.பி. 50-ஆம் ஆண்டில் இந்த விவாதம் நடந்தது. முடிவும் அப்படியே இருந்தது: யூத கிறீஸ்தவர்கள் மீது சின்னப்பர் வெற்றி பெற்றார்.
ஆனாலும் ஜெருசலேமில் எடுக்கப்பட்ட முடிவு எல்லாச் சிரமங்களையும் தீர்த்து விடவில்லை. இந்தப் பிரச்சினை புறஜாதியாரோடு மட்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கவில்லை. மோயீசனின் சட்டத்திலிருந்து அவர்களை விலக்கியபோது, அந்தக் கட்டளை அவர்களை இரண்டாந்தர வகுப்பினரான யூத மதத்திற்கு மனந்திரும்பியவர்களுக்கு ஒப்பானவர்களாக அவர்களை ஆக்கியது போலத் தோன்றியதால், மோயீசனின் பிரமாணத்தை அனுசரிப்பது அவர்களுக்கு பேறுபலனுள்ளதாகவும், அதிக உத்தமமானதாகவும் இருந்திருக்காது என்று பிரகடனம் செய்யப் படவில்லை. மேலும் யூத கிறீஸ்தவர்கள் ஜெருசலேம் பொதுச் சங்கத்தின் தீர்ப்புக்கு உட்படாததால், தங்களை இன்னும் இந்தச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவே கருத அவர்களுக்கு சுதந்திரம் இருந்தது. இதிலிருந்தே சிறிது காலத்திற்குப் பின் அந்தியோக்குவில் இராயப்பருக்கும் சின்னப்பருக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. யூதர்களுக்கும் கூட யூத சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று சின்னப்பர் வெளிப்படையாகப் போதித்தார். இராயப்பருக்கும் இதில் உடன்பாடு இருந்தது. ஆனாலும் யூத கிறீஸ்தவர்களுக்கு எதிராக செயல்படுவதைத் தவிர்ப்பதும், யூத சட்டத்தில் கட்டளையிடப்பட்ட எந்தக் காரியத்தையும் அனுசரியாமல் இருந்த புறஜாதியாரோடு சேர்ந்து உண்பதை விலக்குவதும் புத்திசாலித்தனம் என்று அவர் நினைத்தார். இதன் மூலம் யூதர்களைப் போல் வாழும்படி புறஜாதியாரை அவர் தார்மீகமான முறையில் தூண்டியதால், இந்த வெளிவேடமும், சந்தர்ப்பவாதமும் எதிர்காலக் குழப்பங்களுக்கும் போராட்டங்களுக்கும் கூட வழிவகுத்தது என்றும், அந்தச் சமயத்திலேயே கூட வருந்தத்தக்க விளைவுகளை இது ஏற்படுத்தியது என்றும் கூறி சின்னப்பர் அவரை எதிர்த்தார். சின்னப்பரின் வாதங்களால் இராயப்பர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதை, சின்னப்பர் இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் முறை சந்தேகத்திற்கு இடமின்றி எடுத்துக் காட்டுகிறது (கலாத். 2:11-20).