83. (45) அவர் தமக்குப் பதிலாகப் பிரத்தியட்சத் தலைவராக யாரை ஸ்தாபித்தார்?
அர்ச். இராயப்பரை ஸ்தாபித்தார்.
1. பிரத்தியட்சம் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?
கண்ணாலே காணக்கூடிய வஸ்துவேயாம்.
2. ஏன் சேசுநாதர் தமக்குப் பதிலாக ஒரு தலைவரை ஸ்தாபித்தார்?
திருச்சபையானது மனிதர்களைத் தன்னுள் அடக்கி யுள்ள காணக்கூடிய ஒரு கூட்டம். ஆதலால் அதுக்கு காணக்கூடிய ஒரு தலைவர் அவசியம். சேசுநாதர், மோட்சத்திற்கு எழுந்தருளின பிறகு காணக் கூடிய தலைவராயிருக்க முடியாது. ஆகையால் அவர் தமது அப்போஸ்தலர்களில் ஒருவராகிய அர்ச். இராயப்பரை இதற்குத் தலைவராக நியமித்தார்.
3. சேசுநாதர் தமது திருச்சபைக்குத் தலைவராக அர்ச். இராயப்பரை நியமித்தாரென்று நமக்கு எப்படித் தெரியும்?
நமது திவ்விய கர்த்தர் இவ்வுலகத்தில் பிரசங்கித்து, தமது வேதத்தைப் போதித்து வந்தபோது, ஒருநாள் இராயப்பரை நோக்கி, “சீமோனே, நீ கல்லாயிருக்கிறாய்; இந்தக் கல்லின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். (இப்படி உன்மேல் கட்டி யிருக்கும் திருச்சபையை நரகத்தின் வாசல்கள் மேற்கொள்ள மாட்டாது. மேலும் மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்” என்றார் (மத். 16:18,19). இந்தத் தேவ வாக்கியத்தால் சேசுநாதர் திருச்சபைக்குத் தலைவராக அர்ச். இராயப்பரை ஸ்தாபித்தாரென்று விளங்குகிறது.
4. இவ்வாக்கியம், அர்ச்ச. இராயப்பருக்கு மெய்யான தலைமையும் அதிகாரமும் கொடுக்கப்பட்டதென்று எப்படிக் காட்டுகிறது?
ஒரு வீடு அஸ்திவாரமில்லாமல் இருக்கக் கூடாதது எப்படியோ அப்படியே ஒரு சபை தலைவரில்லாமல் இருக்கவே முடியாது. மேலும் சாவியானது அதிகாரத்துக்கு அடையாளமா யிருக்கிறது. ஏனென்றால், வீட்டின் சாவி உடையவன் எவனோ, அவனே அதின் எஜமானாயிருக்கிறான். சுவிசேஷத்தில் மோட்ச இராச்சியம் என்னும் வார்த்தையால் திருச்சபை குறிக்கப்பட்டிருக் கிறது (மத். 13:24,31). ஆகையினாலே சேசுநாதர் அர்ச். இராயப்பரை மாத்திரம் திருச்சபைக்கு அஸ்திவாரமாக நியமிக்கும் போது அவரைத் திருச்சபைக்குத் தலைவராக மெய்யாகவே நியமித்தார். மோட்ச இராச்சியத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேனென்று சொல்லும்போது, சேசுநாதர் அர்ச். இராயப் பருக்குச் சகல அதிகாரத்தைக் கொடுத்து, அவரைத் திருச்சபைக்குத் தலைவராக ஸ்தாபித்தார்.
5. நரகத்தின் வாசல்கள் என்பதற்கு அர்த்தமென்ன?
இவ்விடத்தில் “வாசல்கள்” என்பதற்கு வல்லபம், வல்லமை, அதிகாரம் என்று அர்த்தமாகும். நமதாண்டவர் காலத்தில், ஜெருசலேம் தேவாலயத்து வாசல்கள் அண்டையில், (அதாவது, கடவுள் அண்டையில்) ஆலோசனை சபையாரும், வேத ஆசாரியச் சங்கத்தாரும் கூட்டம் கூடி தீர்ப்பு இடுகிறது வழக்க மானதால், “வாசல்கள்” என்னும் வார்த்தையானது “வல்லமை” என்ற உருவக அர்த்தம் கொண்டிருந்தது.
ஆகையால், (1) “நரகத்தின் வாசல்கள்” என்பது, பசாசின் வல்லமையும், அதன் சோதனைகளும், அந்தப் பசாசால் ஏவப்பட்ட தீயோருடைய சகல விரோதக் கிரியைகளும், உபத்திரவங்களுமே யாம்.
(2) “நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள மாட்டாது” என்றால் பேய்களும், பேய்களால் ஏவப்பட்ட இதர மதத்தாரும், துஷ்டர்களும் திருச்சபையை அழிக்க என்ன முயற்சி செய்தாலும், என்ன தந்திரம் பண்ணினாலும், திருச்சபையை அழிக்கவும் முடியாது, திருச்சபையை ஒருக்காலும் சத்தியத்தில் தவறவுமாட்டாதென்று அர்த்தமாகும்.
6. அர்ச். இராயப்பர் திருச்சபைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்ற வேத சத்தியத்தைச் சுவிசேஷத்திலிருந்து சில விசேஷங்களைக் கொண்டு எப்படி உறுதிப்படுத்தக் கூடும்?
(1) புதிய ஏற்பாட்டில் ஆச்சரியத்துக்குரிய விதமாய் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருக்கிற இராயப்பருடைய பெயர்.
சுவிசேஷத்திலும் அப்போஸ்தலர்களுடைய நடபடி என்னும் புஸ்தகத்திலும் சேசுநாதருடைய திருநாமம் 734 விசை கூறப்பட்டிருக்க, அர்ச். இராயப்பருடைய பெயர் 195 விசை குறிப்பிடப்பட்டிருக்கிறது. சேசுநாதர் சுவாமி விசேஷமாய் சிநேகித்தருளிய அர்ச். அருளப்பருடைய பெயர் 29 விசையும், மற்ற அப்போஸ்தலர்களுடைய நாமங்கள் எல்லாம் 101 விசையும் மாத்திரம் சொல்லப்பட்டிருக்கின்றன.
(2) சுவிசேஷகர் அப்போஸ்தலர்களுடைய பெயர்களையெல்லாம் அல்லது சிலருடைய பெயர்களை மாத்திரம் சொல்லும்போது, எப்போதும் இராயப்பருடைய பெயரை முதன்மையாகக் காட்டுகிறார்கள். இப்படியே சேசுநாதர் இராயப்பருடைய சகோதரராகிய பெலவேந்திரரை எல்லாருக்கு முந்தி அழைத்திருக்க, இராயப்பரை முதல்வரென்று அர்ச். மத்தேயு சொல்லியிருக்கிறார் (மத். 10:2; லூக். 6:14, 16).
(3) சேசுநாதர் உயிர்த்த நாளிலே மற்ற அப்போஸ் தலர்களுக்குத் தோன்றுகிறதற்கு முன் அர்ச். இராயப்பருக்குத் தரிசனையானார் (லூக். 26:34, 1 கொரி. 15:5).
84. அர்ச். இராயப்பருக்கு என்ன விசேஷ வரம் கொடுத்தார்?
அவர் வேத சத்தியங்களைப் போதிக்கையில் வழுவாமை என்னும் வரத்தையும் (தவறாவரம்), மற்ற அப்போஸ்தலர்கள் மேல் சிரேஷ்டர் என்னும் பட்டத்தையும் கொடுத்தார்.
1. வழுவாமை என்பதற்கு அர்த்தமென்ன?
தவறாமை என்று அர்த்தமாகும்.
2. சிரேஷ்டர் என்றால் யார்?
அதிகாரம் உடையவர்.
3. சேசுநாதர் இராயப்பருக்குக் கொடுத்த வழுவாமை என்னும் வரம் எதில் அடங்கியிருக்கிறது?
அர்ச். இராயப்பர் திருச்சபையில் பரம போதகராக வேத விஷயத்தில், அதாவது சகல கிறீஸ்தவர்கள் ஒரு காரியத்தை விசுவசிக்கும்படி அல்லது அனுசரிக்கும்படி தீர்மானிக்கும்போது அவர் ஒன்றிலும் ஏமாந்து போகாமலும் மனிதர்களை ஒன்றிலும் ஏமாற்றாமலும் இருப்பார்.
4. அர்ச். இராயப்பருக்கு சேசுநாதர் தவறாவரம் கொடுத்தாரென்று எப்படி எண்பிக்கலாம்?
முந்த முந்த அர்ச். இராயப்பர் ஒருவருக்கே (1) அவர் திருச்சபையின் அஸ்திவாரக்கல்லென்றும், (2) நரக வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாதென்றும், (3) அர்ச். இராயப்பருடைய விசுவாசம் ஒருபோதும் தவறாதபடிக்கும், (4) அவர் மற்ற அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் ஸ்திரப்படுத்தும்படியாகவும் தாம் வேண்டிக் கொண்டதாகவும், (5) தமது ஞான மந்தை சிதறிப் போகாதபடி அவர் பாதுகாக்க வேண்டுமென்றும், நமதாண்டவர் திருவுளம் பற்றினார். இந்தக் கற்பனையை அர்ச். இராயப்பர் சுமுத்திரையாய் நிறைவேற்றும்படி, அவரிடத்தில் நிச்சயமானதும், மாறாததும், தவறாததுமான போதகமிருப்பது அவசியம். அவரே தவறிப் போகக் கூடுமானால் மற்றவர்கள் தவறிப் போகாதபடி அவர் காக்க முடியாது. அஸ்திவாரம் ஸ்திரமாயிராவிட்டால், கட்டடம் முழுதும் இடிந்து தகர்ந்து போகும்.
5. அர்ச். இராயப்பருக்கு சேசுநாதர் தவறாவரம் கொடுத்தாரென்று எப்படி எண்பிக்கலாம்?
(1) சேசுகிறீஸ்துநாதர் முதன்மையாக அர்ச். இராயப் பரிடமும், அதற்குப் பின் அவரோடு ஒன்றித்திருந்த மற்ற அப்போஸ் தலர்களிடமும் திருச்சபையின் சாவியை ஒப்புவித்தார்.
(2) திருச்சபை ஊன்றி நிற்கும் அஸ்திவாரக் கல் அர்ச். இராயப்பரே.
(3) ஆடுகளையும், அவைகளின் குட்டிகளையும் மேய்க்கும் அதிகாரம் பெற்றிருக்கும் முதன்மையான மேய்ப்பர் அர்ச். இராயப்பர்தான்.
(4) கட்டவும், கட்டவிழ்க்கவும் முழு அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
(5) திருச்சபை எப்போதும் விசுவசித்த சத்தியம் இதுவே. இச்சத்தியத்தை மறுக்கிறவன் சபிக்கப்படக் கடவான் என்று “முதலாம் வத்திக்கான்” என்னும் பொதுச்சங்கம் கண்டிப்பாய்த் தீர்மானித்திருக்கிறது.
7. அர்ச். இராயப்பர் அதிசிரேஷ்ட அதிகாரத்தைச் செலுத்தி வந்தாரா?
அர்ச். இராயப்பர் தமக்கு அருளப்பட்ட இந்த அதிகாரத்தைப் பற்பல சமயங்களில் செலுத்தி வந்தார்.
(1) பெந்தேகோஸ்த் திருநாளன்று மற்ற அப்போஸ் தலர்கள் பேரால் ஜெருசலேமில் கூடின சகல சாதி சனங்களுக்கும் பிரசங்கித்தார் (அப். நட. 2:14).
(2) அஞ்ஞானிகளையும் திருச்சபையில் சேர்த்துக் கொள்ள வேணுமென்று அவரே தீர்மானித்தார் (அப். நட. 15:7).
(3) முதன்முதலில் புதுமை செய்தவரும் இவரே (அப்.நட. 3:6).
(4) யூதாசுக்குப் பதிலாக வேறொரு அப்போஸ்தல ரைத் தெரிந்து கொள்ளச் சொன்னவரும் இவரே (அப். நட. 1:15).
(5) அனனியாவையும், சாப்பிராளையும் நடுத்தீர்ப்பு செய்தவரும் இவரே (அப்.நட. 5:1-10).
7. அர்ச். இராயப்பரை மற்ற அப்போஸ்தலர்கள் தங்கள் தலைவ ராக அங்கீகரித்துக் கொண்டார்களோ?
ஆம். அதற்குச் சுவிசேஷம் அத்தாட்சியாகும்.
(1) நமதாண்டவர் உயிர்த்தபின் அர்ச். அருளப்பர், அர்ச். இராயப்பருக்கு முந்தி கல்லறைக்கு வந்து சேர்ந்தாலும், உள்ளே பிரவேசிக்காமல், அர்ச். இராயப்பர் அதற்குள் புகுந்த பிறகுதான், இவரும் உள்ளே பிரவேசித்தார் (அரு. 20:4-8).
(2) ஜெருசலேமில் முதல் பொதுச் சங்கம் நடக்கும் போது அப்போஸ்தலர்களுக்குள்ளே நீண்ட தர்க்கமுண்டாக, அர்ச். இராயப்பர் எழுந்திருந்து தீர்ப்புச் சொன்ன பிறகு, எல்லாரும் மெளனமாயிருந்து அவருடைய வசனத்திற்குச் சம்மதித்தார்கள் (அப்.நட. 15:7-12).
(3) அர்ச். சின்னப்பர் மனந்திரும்பினபின் மூன்று வருஷம் சென்று, ஜெருசலேமுக்குப் போய் அர்ச். இராயப்பரிடம் செல்லுவது தனது கடமை என்று மதிக்கின்றார் (கலாத். 1:18).
8. சிரேஷ்ட அதிகாரம் அர்ச். இராயப்பருக்கு அவசியமா யிருந்ததா?
ஆளுகையிலும், போதகத்திலும் ஒற்றுமையைக் காப்பாற்ற இது மகா அவசியம். அவருக்குச் சிரேஷ்ட முதன்மை யில்லாவிடில் வெகு சீக்கிரம் திருச்சபையில் பிரிவினைகள் உண்டாகி மேற்றிராணிமார்கள் ஒற்றுமையின்றி ஒவ்வொருவரும் மனது போல் சுய ஆளுகை செய்யவே, திருச்சபை சீக்கிரத்தில் அழிந்து போயிருக்கும்.
இதைக் கண்டுபிடிக்கும்படி அர்ச். பாப்புமார்களின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாத பற்பல பிரிவினை மதங்களின் ஆளுகையிலும், போதகங்களிலும் சம்பவித்தவைகளைப் பார்ப்பதே போதும்.
9. அர்ச். இராயப்பர் எப்போது இறந்தார்?
நீரோ என்னும் இரானொல், கிறீஸ்துவுக்குப் பின் 67-ம் வருஷத்தில் வேதத்துக்காகச் சாவுக்குத் தீர்வையிடப்பட்டுத் தலை கீழாக சிலுவையில் அறையுண்டு மரித்தார்.
10. அர்ச். இராயப்பர் இறந்து போன பிறகு சேசுநாதர் அவருக்குக் கொடுத்த விசேஷ வரங்கள் வீணாய்ப் போனதோ?
இல்லை. சேசுநாதர்சுவாமி தமது திருச்சபை எப்போ தும் நிலைகொண்டு நிற்க அதை ஸ்தாபித்தார். ஆகையினால் அர்ச். இராயப்பர் இறந்து போனபிறகு திருச்சபையை ஆண்டு நடத்தும் படி, அவரிடமிருந்த அதிகாரம், அவருக்குப் பதிலாளியாயிருப் பவர்களுக்கு சேசுநாதரால் கொடுக்கப்பட்டது.