1. விசுவாசப் பிரமாணத்தின் 5-ம் பிரிவைச் சொல்லு.
“பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.”
2. இதில் எத்தனை பாகம் உண்டு?
சேசுநாதருடைய ஆத்துமம் பாதாளத்தில் இறங்குதல், அவருடைய உயிர்ப்பு ஆகிய இரண்டு பாகம் உண்டு.
3. அவர் பாதாளத்தில் இறங்கினார் என்பதினால் என்ன விசுவசிக்கிறோம்?
சேசுநாதருடைய ஆத்துமம் அவருடைய சரீரத்தை விட்டுப் பிரிந்திருந்தாலும், தேவசுபாவத்தோடு எப்போதும் ஒன்றித்திருந்து, பாதாளத்துக்குள் இறங்கிச் சென்றதென்று விசுவசிக்கிறோம்.
67. (34) அப்போது சுவாமியுடைய ஆத்துமம் எங்கே போயிற்று?
பாதாளத்தில் இறங்கி, அங்கேயிருந்த புண்ணிய ஆத்துமாக் களுக்கு மோட்சப் பாக்கியம் கொடுக்கப் போயிற்று.
68. அவருடைய திருச்சரீரத்தை எங்கே அடக்கம் செய்தார்கள்?
கல்வாரி மலையில் ஒரு புதுக் கல்லறையிலே அடக்கம் செய்தார்கள்.
1. பாதாளம் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?
பூமியின் கீழே இருக்கும் ஸ்தலம் என்று அர்த்தமாம்.
2. பூமியின் கீழேயுள்ள ஸ்தலங்கள் எத்தனை உண்டு?
மூன்றுவித பாதாள ஸ்தலங்கள் வேதப் புஸ்தகங்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன.
(1) சபிக்கப்பட்ட பசாசுகளும், பாவிகளும் இருக்கும் நரகம்,
(2) தங்கள் பாவங்களுக்காக விதிக்கப்பட்ட அநித்திய தண்டனையை முழுதும் தீர்க்காமல், இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் மரித்தவர்கள் இருக்கும் உத்தரிக்கிற ஸ்தலம்,
(3) சேசுநாதர்சுவாமி வருவதற்கு முன் மரித்த நீதிமான்களின் ஆத்துமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லிம்போ என்னும் இளைப்பாற்றி ஸ்தலம்.
3. சேசுநாதருடைய ஆத்துமம் இறங்கின ஸ்தலம் எது?
(1) நரகமானது சபிக்கப்பட்டவர்களுடைய ஸ்தலமா யிருக்கிறபடியால் சேசுநாதருடைய ஆத்துமம் அங்கே இறங்கிப் போகவில்லை.
(2) உத்தரிக்கிற ஸ்தலமானது, ஆத்துமாக்கள் பரிகாரம் செய்யும் ஸ்தலமானதால் சேசுநாதருடைய மாசற்ற ஆத்துமம் அங்கே இறங்கிப் போகவில்லை.
(3) ஆகையால் நீதிமான்களுடைய ஆத்துமங்கள் இருந்த லிம்போ என்ற ஸ்தலத்துக்குத்தான் நமதாண்டவருடைய ஆத்துமம் இறங்கிப் போனதென்று சொல்ல வேண்டும்.
4. நீதிமான்களுடைய ஆத்துமங்கள் பரிசுத்தமானவைகளா யிருந்ததால் அவைகள் மோட்சத்துக்குப் போகாமல் ஏன் லிம்போவில் நிறுத்தி வைக்கப்பட்டன?
ஆதித்தாய் தகப்பனுடைய பாவத்திலே மோட்சம் அடைபட்டிருந்தது. இரட்சகர் அந்த அடைபட்ட மோட்சத்தைத் தமது மரணத்தால் திறக்குமட்டும் அதில் யாரும் பிரவேசிக்கக் கூடாதிருந்தது. ஆகையால் அந்த ஆத்துமாக்கள் மோட்சத்துக்குப் போகாமல், லிம்போவில் தங்கியிருந்தார்கள்.
5. சேசுநாதர் பாதாளத்தில் இறங்குமுன்னே அங்கே யுள்ள நீதிமான்களுடைய நிலைமை என்ன?
அவ்விடத்தில் தண்டனை ஒன்றும் இல்லாமலும், சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறாமலும் அங்கே சிறைப்பட்டிருந்தார்கள். ஆகையால் அங்கே இருந்தவர்கள் இரட்சகரின் வருகைக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந் தார்கள்.
6. ஏன் சேசுநாதருடைய ஆத்துமம் பாதாளத்தில் இறங்கினது?
உலக இரட்சணியம் தம்மால் நிறைவேறிற்று என்பதை அவ்விடத்திலுள்ள நீதிமான்களுடைய ஆத்துமங்களுக்கு அறிவித்து அவர்களைச் சந்தோஷத்தினால் நிரப்பி, பேரின்ப தேவ தரிசனத் துக்குப் பங்காளிகளாக்கி, பிறகு, தம்மோடு கூட மோட்ச பாக்கியத் துக்கு அழைத்துக் கொண்டு போகவே பாதாளத்தில் இறங்கினார்.
7. சேசுநாதர் பாதாளத்தில் இறங்கின மாத்திரத்தில் நீதிமான் களுடைய ஆத்துமங்கள் அநுபவித்ததென்ன?
நல்ல கள்ளனுக்குக் கொடுத்த வாக்குப்படி நமது ஆண்டவர் பாதாளத்தைப் பரகதியாக்கி, தேவ தரிசனையின் ஆனந்தத்தால் நீதிமான்களின் இருதயத்தைப் பூரிப்பாக்க, அந்த ஆத்துமாக்கள் மோட்சத்துக்குரிய அளவில்லாத பாக்கியத்தை அநுபவிக்கத் துவக்கினார்கள்.
8. சேசுநாதருடைய ஆத்துமமும் சரீரமும் பாதாளத்தில் இறங்கினதோ?
அவருடைய ஆத்துமம் மாத்திரம் இறங்கினது.
9. அவருடைய சரீரம் எங்கே இருந்தது?
அவருடைய சரீரம் கல்வாரி மலையின் பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில் இருந்தது.
10. சேசுநாதருடைய ஆத்துமம் அவருடைய சரீரத்தை விட்டுப் பிரிந்திருந்தபொழுது அவருடைய தேவசுபாவம் எதிலிருந்தது?
எப்பொழுதும் அவருடைய ஆத்துமத்தோடும், சரீரத்தோடும் ஒனறித்திருந்தது.
11. அப்படியானால் மரித்தபோது இரண்டாம் ஆளாகிய சேசு கிறீஸ்துநாதர் ஒரே நேரத்தில் கல்லறையிலும், பாதாளத்திலும் இருந்தார் என்று சொல்ல வேண்டுமா?
சொல்ல வேண்டும்.
12. எத்தனை நாள் சேசுநாதருடைய ஆத்துமம் பாதாளத்தில் இருந்தது?
சேசுநாதர் உயிர்க்கும் நேரமட்டும், அதாவது மூன்று நாளாய் பாதாளத்தில் இருந்தது.