நான்காவது அம்சம்
34. நான்காவது உண்மை இறுதி வெற்றி பற்றிய அறிவிப்பும், வாக்குறுதியும் ஆகும். பாத்திமா செய்தி கடுமையானது, கனமானது, துயரமானது. இவற்றையும் மீறி அது ஒரு மிகுந்த நம்பிக்கையின் செய்தியாக இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்த இறுதி வெற்றியை நமது அன்னை அறிவிக்கும் விதத்தைச் சிறிது உற்றுக் கவனியுங்கள். “ஆனால், இறுதியில் எனது மாசற்ற இருதயம் வெற்றி பெறும்.” ஏன் இந்த அறிவிப்பில் “ஆனால்” என்ற சொல்? ஏனென்றால் தனது வேண்டுகோள் நிறை வேற அதிக காலதாமதம் ஆகும் என்று நமது அன்னைக்குத் தெரியும். மேலும் “இறுதியில்” என்ற சொல் ஏன் உபயோகிக்கப்படுகிறது? ஏனெனில் அன்னையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் மறுதலிக்கப்பட்டு, நிறை வேறக் காத்திருக்கும் காலகட்டத்தில் பாவமும் அதன் கொடூரமான விளைவுகளும் அதிகரிக்கும். இவ்வாறு இறுதி வெற்றியைப் பற்றி அறிவிக்கும் அதே வாக்கியத்தில், மனித இனம் அனுபவிக்க இருக்கும் துன்பங்கள், தண்டனைகள் பற்றிய அறிவிப்பும் பொதிந்து இருப்பதை நாம் அறியலாம்.
35. பாத்திமா செய்தி பற்றிச் சிந்திப்பவர்கள், அச்செய்தியில் அறிவிக்கப்படுகிற துயரங்களை நினைக் கிறார்கள். வரக்கூடிய பெரும் ஆபத்துக்களையும் நினைக் கிறார்கள். நினைத்து அதற்கு மேல் நோக்காதிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட எண்ணம் நல்லதோ, நலம் தருவதோ அல்லது கிறீஸ்தவ இயல்புக்கு உகந்ததோ அல்ல. நாம் எப்பொழுதும் சிலுவையை நினைவில் கொள்ள வேண்டும். கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிக்க வேண்டும். ஆனால் கிறீஸ்துவின் பாடுகளை அவரது உயிர்ப்பின் ஒளி யிலே தியானிக்க வேண்டும். இதை நாம் செய்வதற்கு உதவி யாகத்தான் நமது அன்னை, “ஆனால் இறுதியில் எனது மாசற்ற இருதயம் வெற்றிபெறும்” என்ற வாக்குறுதியை அளிக்கிறார்கள். இறுதி வெற்றியைப் பற்றி அறிவிக்கும் இந்தச் செய்திதான் பாத்திமா செய்தியை நம்பிக்கையின் செய்தியாக, வெற்றியின் செய்தியாகக் காட்டுகின்றது. நம்பிக்கையைத் தட்டி எழுப்பும் நமது அன்னையின் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளில்தான் நம் அன்றாட கிறீஸ்தவ வாழ்வுப் போராட்டத்தைத் தொடருவதற்கு பலமும், ஊக்கமும் பெறுகிறோம். உலகம் நாஸ்திக பாவத்தில் ஆழமாக மூழ்க மூழ்க, கிறீஸ்தவ வாழ்வின் போராட்டம் மிகவும் கடினமானதாகும். இதுபற்றி சந்தேகமே வேண்டாம். கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் பிடியில் சிக்கிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தலைவிரித்தாடும் கொடுமை நம்மையும் தண்டிக்க வரும். ஏனெனில் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற சர்வேசுரனின் சித்தத்திற்கு நாம் செவிசாய்க்கவில்லை; பதில் அளிக்கவில்லை.
36. ஆகையால் சமீபத்திலிருக்கும் எதிர்காலத்தில் திருச்சபையின் சிலுவையே நமக்கு அளிக்கப்பட்டிருக் கிறது. ஆனால் இந்தச் சிலுவை நமக்கு உயிர்ப்பின் ஒளி யிலே காணப்படுகிறது. ஆகையால்தான் பாத்திமா செய்தி நம்பிக்கையின் செய்தியாக, சமாதானத்தின் செய்தியாக, வலிமையின் செய்தியாக, மேலும் சொல்லப் போனால், மகிழ்ச்சியின் செய்தியாக இருக்கிறது. ஏனெனில் இது இறுதி வெற்றியின் செய்தி. மேலும் இந்த வெற்றி அன்பின் வெற்றியாகும். “இருதயம்” என்ற சொல்லின் பொருளே அதுதான். “என்னுடைய இருதயம் வெற்றி பெறும்” என்றால் “அன்பு வெற்றி பெறும்” என்றுதானே பொருள்! காட்சி யாகமத்தில் சொல்லப்பட்டிருப்பது போல, “அர்ச்சியசிஷ்ட வர்களின் பொறுமையினாலும்” விசுவாசிகளின் பிரமாணிக்கத்தினாலும் கிறீஸ்துநாதர் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த சிலுவையைத் திடமாகவும், நீடித்தும் சுமப்பதினாலும், இவ்வாறு திருச்சபை தன் சிலுவையைச் சுமந்து செல்வதினால் மரியாயின் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்.
இரண்டாம் பாகம்
37. இதுவரை நாம் பாத்திமா செய்தியையும், அதன் வேதசாஸ்திர அடிப்படைகளையும் ஆராய்ந்தோம். இந்த இரண்டாம் பாகத்தில் பாத்திமா செய்தியின் தாற்பரியங்கள் என்ன என்பதைப் பார்ப்போம். மூன்று முக்கியமான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் வாயிலாக பாத்திமா செய்தியின் தாற்பரியங்களை உணர முயல்வோம்.