1916-ம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமாயிருக்கலாம். லூஸியாவுக்கு அப்போது மாதம் வாரம் தேதிகளைக் கணிக்கத் தெரியாது. நடுப்பகல் லூஸியாவின் வீட்டருகில் மூவரும் ஒரு அத்திமர நிழலில் விளையாடினர்.
திடீரென அதே சம்மனசானவர் தோன்றினார். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? செபியுங்கள். மிக அதிகமாக செபியுங்கள். சேசு மரிய இருதயங்கள் இரக்கமுள்ள திட்டங்களை உங்களுக்கென வைத்துள்ளார்கள். செபங்களையும் பரித்தியாகங்களையும் உந்நதருக்கு ஒப்புக்கொடுங்கள்” என்றார்.
“நாங்கள் எப்படி பரித்தியாகங்கள் செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் லூஸியா.
“நீங்கள் செய்யும் யாவற்றையும் ஒறுத்தல் முயற்சி ஆக்குங்கள். கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவற்றை ஒப்புக்கொடுங்கள். இவ்விதமாய் உங்கள் நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வாருங்கள். நானே அதன் காவல் தூதன், போர்த்துகலின் தூதன். யாவற்றுக்கும் மேலாக நமதாண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்று தாங்கிக்கொள்ளுங்கள்' என்று தூதன் பதிலளித்தார்.