பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.

அப்பமானது உடலின் உயிருக்கு ஆதாரமாக இருப்பது போலவே, நம்  ஆண்டவர் அப்பத்தின் தோற்றத்திற்குள் ஆத்துமத்தின் உயிருக்கு ஆதாரமாகத் தம்மையே தருகிறார்.  திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும் என்பது ஒரு தேவ கட்டளையாகும்.  “நீங்கள் மனுமகனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களிடத்தில் ஜீவனைக் கொண்டிருக்க மாட்டீர்கள்” (அரு. 6:54).

இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கான விசே­ காலம் எதையும் நம் ஆண்டவர் நமக்கு நியமிக்க வில்லை.  அது தமது திருச்சபையாலேயே தீர்மானிக்கப் பட அவர் விட்டு விட்டார்.  குறைந்தது  கிறீஸ்தவ ஆண்டின் மிகப் பெரும் திருநாளாகிய உயிர்ப்பு விழா அன்றாவது விசுவாசிகள் அனைவரும் பக்தியோடு திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டுமென்று லாத்தரன் நான்காம் பொதுச் சங்கம் சட்டம் இயற்றியது.  இந்தப் பாஸ்குத் திவ்ய நன்மை வாங்குவதற்கான காலம் சாம்பல் புதனன்று தொடங்கி, வழக்கமாக தமத்திரித்துவ ஞாயிறு வரை நீளுகிறது.

புத்தி விவரம் அறிந்து, புது நன்மை வாங்கிய அனை வரும், பாஸ்குக் காலத்தில் திவ்ய நன்மை வாங்கக்  கடமைப் பட்டிருக்கிறார்கள்.  தேவத் துரோகமான முறையில் உட்கொள்ளப்படும் திவ்ய நன்மை, இந்தக் கடமையை நிறைவேற்றாது. சரியான காலத்தில் இந்தக் கடமை நிறைவேற்றப் படவில்லை என்றால், அது இன்னும் நீடிக்கிறது.  சமயம் வாய்க்கும் போது, கூடிய சீக்கிரம் அது நிறைவேற்றப் பட வேண்டும்.


அடிக்கடி திவ்ய நன்மை உட்கொள்வதன் மீதான ஆணை மடல்

திவ்ய நன்மை  வாங்கும்  கடமைக்குத் திருச்சபை எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை, அதை உட்கொள்ளும் காலத்தின் மீதே கட்டுப்பாடுகள் விதிக்கிறது என்பது 1905‡ஆம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று, பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதரால் வெளியிடப் பட்ட ஆணை மடலின் மூலம் முற்றிலும் தெளிவாகிறது.

(1)  கத்தோலிக்கர்கள் அடிக்கடியும், அனுதினமும் கூட திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும் என்பது நம் ஆண்டவராகிய கிறீஸ்துநாதருடையவும், அவருடைய பரிசுத்த திருச்சபையினுடையவும் மாபெரும் ஏக்கமாக இருக்கிறது.  இந்த அனுதின நன்மை உட்கொள்ளும் பேறு, சகல விசுவாசிகளுக்கும் கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்வின் எந்த அந்தஸ்தில், அல்லது நிலையில்  இருந்தாலும் சரி.  இதன் மூலம், தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருப்பவர்களும், சரியான, சுத்தக் கருத்தோடு திவ்ய பந்தியை அண்டிச் செல்வோருமான யாருமே அனுதின நன்மை உட்கொள்வதில் இருந்து  நியாயமான முறையில் தடுக்கப் பட முடியாது.

(2) திவ்ய பந்தியை அணுகிச் செல்கிறவன் பழக்கத்திற்காகவோ, வீண் மகிமைக்காகவோ, அல்லது முகஸ்துதிக்காகவோ அப்படிச் செய்யாமல், சர்வேசுரனை மகிழ்விப்பதற்காகவும், தேவ சிநேகத்தால் அவரோடு அதிக நெருக்கமாக இணைக்கப் படுவதற்காகவும், தனது பலவீனத்திற்கும், குறைபாடுகளுக்கும் எதிரான இந்தத் தெய்வீகமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும் என்பதுதான் இதற்கான சுத்தக் கருத்தாக உள்ளது.

(3)  அடிக்கடி, அல்லது அனுதினமும் திவ்ய நற்கருணை உட்கொள்பவர்கள் அற்பப் பாவங்களில் இருந்தும், குறிப்பாக முற்றிலும் வேண்டுமென்றே செய்யப்படுகிற அற்பப் பாவங்களிலிருந்தும், அவை தொடர்பான எத்தகைய ஆசாபாசத்தினின்றும் விடுபட்டிருக்க வேண்டும் என்பது மிகவும் விரும்பத் தக்கதுதான்.  என்றாலும் அவர்கள் சாவான பாவத்திலிருந்து விடுபட்டிருப்பது போதுமானது.  இனி ஒருபோதும் பாவம் செய்யக் கூடாது என்கிற நோக்கமும் அவசியம்.  இந்த நேர்மையான நோக்கம் அவர்களுக்கு இருக்குமானால், தினமும் திவ்ய நன்மை வாங்குபவர்கள் படிப்படியாக அற்பப் பாவங்களில் இருந்தும், அவை தொடர்பான சகல ஆசாபாசங்களில் இருந்தும் விடுபடாதிருக்க வாய்ப்பேயில்லை.

(4)  ஆனாலும் புதிய சட்டத்தின் தேவத்திரவிய அனுமானங்கள், அவற்றை வெறுமனே பெறுவதாலேயே, (eமு லிஸ்ரீere லிஸ்ரீerழிமிலி) நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  என்றாலும், அவற்றைப் பெறுபவரின் ஆத்துமத்தின் பண்புகள் அதிக நல்லவையாக இருக்கும் போது, அவை இன்னும் மேலான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  எனவே, திவ்ய நன்மை உட்கொள்வதற்கு முன், ஒவ்வொருவருடைய வலிமை, சூழ்நிலைகள் மற்றும் கடமைகளுக்கு ஏற்றபடி,  நல்ல முறையில் ஆயத்தம் செய்வதிலும், நன்மை வாங்கிய பிறகு தகுதியான விதத்தில் நன்றியறிதல் செலுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்தப் பட வேண்டும்.

(5) அடிக்கடி, அல்லது தினமும் திவ்ய நற்கருணை வாங்கும் வழக்கமானது அதிக விவேகத்தோடு செய்யப் பட வேண்டுமென்றும், அதன் மூலம் அபரிமிதமான பேறுபலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறவர்கள், தங்கள் ஆன்ம குருவின் ஆலோசனையை  அடிக்கடி பெறுவது அவசியமானது.  ஆயினும், ஆன்ம குருக்கள் தேவ இஷ்டப் பிரசாத நிலையிலும், சுத்தக் கருத்தோடும் இருக்கிற யாரையும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கலாகாது என்று யாரையும் தடுத்து விடாதபடி கவனமாயிருக்க வேண்டும்.  

குழந்தைகள் புத்தி விபரம் அறிந்து, அப்பத்தின் வடிவத்தில் தங்களிடம் வருகிற தங்கள் ஆண்டவருக்கும், சாதாரண அப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பகுத்துணரக் கூடியவர்களாக இருந்தால், அவர்கள் புது நன்மை வாங்கி விட வேண்டுமென்று 1910‡ஆம் ஆண்டில் பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் பிரகடனம் செய்தார்.  பெற்றோர்களும், குழந்தைகளுக்குப் பொறுப்பாக இருக்கிற அனைவரும், தங்கள் வசமுள்ள குழந்தைகள்  பாஸ்குக் கடனைச் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

நள்ளிரவிலிருந்து கடுமையான உபவாசத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்களாயிருந்த விசுவாசிகளும் அடிக்கடி திவ்ய நன்மை வாங்குவதை இன்னும் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் 1957, மார்ச் 25 அன்று, நன்மை வாங்குமுன் கடைப்பிடிக்க வேண்டிய உபவாசத்தை மூன்று மணி நேரமாகக் குறைத்தார்.


திவ்ய நற்கருணை உபவாசத்திற்குரிய புதிய விதிகள்

(1) எப்போது வேண்டுமானாலும் நீர் அருந்தலாம்.

(2) திவ்ய நன்மை வாங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் திட உணவு அருந்தலாம்.

(3)  மது அல்லாத திரவ உணவுகளை ஒரு மணி நேரத்திற்கு முன்  உட்கொள்ளலாம்.

(4) படுத்த படுக்கையாக இருக்க அவசியம் இல்லாத நோயாளிகள் திட, திரவ மருந்துகளையும், மதுவல்லாத திரவ உணவுகளையும் திவ்ய நன்மை வாங்குவதற்கு முன் எந்நேரத்திலும் உட்கொள்ளலாம். இந்தப் புதிய விதிகள் ஒரு நாளில் திவ்ய நன்மை வழங்கப் படுகிற எந்த நேரத்திற்கும் பொருந்தும்.  அவஸ்தை நன்மையின் வி­யத்தில் தவிர, மற்றபடி ஒரே நாளில் இரு தடவைகள் திவ்ய நன்மை வாங்குவது கூடாது.

ஆயினும் முடிந்த வரை, நள்ளிரவிலிருந்தே உபவாசம் இருந்து திவ்ய நற்கருணை உட்கொள்வது, அதிக ஞான நன்மைகளைப் பெற்றுத் தரும்.