ஓ! மரியாயின் மாசற்ற இருதயப் பக்தியின் உயர்வையும் சிறப்பையும் அவசியத்தையும் யாரால் எடுத்துரைக்கக்கூடும்? மரியாயின் மாசற்ற இருதயம் என்பதென்ன? சர்வேசுரனின் சிருஷ்டிக்கப்பட்ட அமலோற்பவமல்லவா? திரியேக கடவுளின் பிரதிபலிப்பாயிருக்கிற மாசற்ற மாதாவல்லவா?
பரமபிதா உலகத்தை எவ்வளவு நேசித்தாரென்றால் தம் ஏக சுதனையே அதற்குத் தந்தாரென்பது எப்படிப்பட்ட அன்பின் கொடை! (அரு. 3:16). இங்கே பரிசுத்த தமதிரித்துவ சர்வேசுரனே தம் குமாரத்தியும் தாயும் பத்தினியுமான மாதாவை இக்கடைசி காலங்களில் மனுக்குலத்தின் கடைசிப் பிணையாக -- லூஸியா சொல்கிறபடி ஒருவித நடுக்கத்துடனே -- கடவுளின் இந்தப் பொக் கிஷத்தை, நாம் மறுத்துவிடுவோமோ என்ற பயத்தோடு தருகிறாரே! அப்படியென்றால் இத்தாயை நாம் எவ்வளவான அன்புடனும் ஆர்வத்துடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! ஏற்பது மட்டுமல்ல, இப்புனித மாதாவை பொக்கிஷமாய் நேசித்து அவர்களின் மாசற்ற இருதயத்தை நோகச் செய்யும் எதையும் செய்யாதிருப்பதோடு, பாவிகளால் அவர்களுக்கு ஏற்படும் நோவை நம் அன்புப் பரிகாரத்தால் நீக்க வேண்டும்!
மரியாயின் மாசற்ற இருதயப் பரிகாரப் பக்தியே இன்று திருச்சபையைக் காப்பாற்றும். சகல தப்பறைகளையும் அழிக்கும். ஆன்மாக்களை மனந்திருப்பி இரட்சிக்கும். ரஷ்யாவை மனந்திருப்பி உலக சமாதானத்தைக் கொண்டு வரும். மாதாவின் பிந்திய கால அப்போஸ் தலர்களே! நீங்கள் இதை நன்றாக சிந்தித்து உணருங்கள்.
பரிகாரப் பக்தியை சேசுவும் மாதாவும் கேட்ட அபூர்வமான காட்சி
பாத்திமா சிறுவர்களுக்கு நரகத்தைக் காட்டிய பின் மாதா: பாவிகள் நரகத்தில் விழுவதைத் தடுத்து நிறுத்த, ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்க வேண்டுமென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்கவேண்டுமென்றும் கேட்க வருவேன் என்று கூறியிருந்தபடியே அவற்றைக் கேட்க வந்தார்கள்.
டிசம்பர் மாதம் 10-ம் தேதி 1925-ம் ஆண்டு. அப்போது அர்ச். டோரதியம்மாள் சபையில் லூஸியா நவகன்னியாயிருந்தாள். அன்று பால சேசுவும் மாதாவும் அவளுக்குத் தரிசனையானார்கள். சேசு 10 வயதுச் சிறுவனாக ஒரு சிறு ஒளி மேகத்தில் நின்றார். முழங்காலிட்டிருந்த லூஸியாவின் தோளில் தன் இடது கையைப் படிய வைத்தபடி மாதா தோன்றினார்கள். அவர்களின் வலது கையில் முட்கள் குத்தி நிறைந்திருந்த ஒரு இருதயம் இருந்தது. சேசு லூஸியாவைப் பார்த்து: "உன் மிகப்பரிசுத்த அன்னையின் இருதயத்தின் மீது இரக்கப்படு. நன்றியற்ற மனிதர் ஒவ்வொரு கணமும் அதைக் குத்தும் முட்களால் அது நிறைந்துள்ளது. பரிகார முயற்சி செய்து அவற்றை எடுப்பதற்கு யாருமில்லை” என்றார்.
இதன்பின் மாதா லூஸியாவிடம்: “என் மகளே! நன்றியற்ற மனிதர்கள் தங்கள் தூஷணங்களாலும் நன்றிக் கேட்டினாலும் ஒவ்வொரு கணமும் குத்துகிற முட்களால் சூழப்பட்டிருக்கிற என் இருதயத்தைப் பார்! நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு. இதை நீ அறிவி: தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில் எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்து, 53 மணி ஜெபமாலை சொல்லி, நற்கருணை உட்கொண்டு, தேவ இரகசியங்களைத் தியானித்தபடி கால் மணி நேரம் என்னுடன் செலவிடுகிறவர்களுக்கு அவர் களுடைய மரண சமயத்தில், ஈடேற்றத்திற்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய்வேன் என நான் வாக்களிக்கிறேன்” என்று கூறினார்கள். நம் தாயின் கனிந்த அன்பை இதில் காணாதவர்கள் யார்?
இவ்வாறு செபத்தாலும், பரித்தியாகங்களாலும், மாசற்ற இருதயத்துக்கு முழுவதுமாக நம்மை அர்ப்பணித்துக் கொள்வதாலும், முதல் சனி பக்தியை அனுசரிப்பதாலும், ஜெய மாலையை அனுதினமும் சொல்வதாலும் அனுசரிக்கப்படுவதே மரியாயின் மாசற்ற இருதயபக்தியாகும். இதை சகோதரிலூஸியா "பரிகார பக்தி” என்றே குறிப்பிடுகிறாள். ஆகவே மாதாவின் மாசற்ற இருதய பக்தி என்பதே மாசற்ற இருதய பரிகாரப் பக்திதான்.
மாதா இணைமீட்பராயிருப்பதும் சேசுவுடன் இணையாக வைக்கப்படுவதும் மாதாவின் மகிமைகளுக்கு ஓர் அளவுமில்லை, எல்லையுமில்லை; துவக்கமுமில்லை, முடிவுமில்லை. ஆயினும் இப்பூவுலகில் அவர்களுடைய மகுடத்தில் முழுமையான மகிமையின் இரத்தினம் “மாதா சேசுவுடன் இணை-மீட்பர்” என்பதே. இந்த ஒளிவீசும் ஞான இரத்தினக் கல், பாத்திமா செய்திக்குள் சிப்பிக்குள் முத்துப் போல் அடங்கியுள்ளது. அந்த முத்தை நமக்கு வெளிப்படுத்துவது, பாத்திமாவின் இறுதிக்காட்சி எனக் கூறப்படும் பரிசுத்த தமதிரித்துவத்தின் காட்சியாகும்.
1929-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி இரவு அருளப்பட்ட தமதிரித்துவக் காட்சியை லூஸியாவின் வார்த்தைகளிலேயே இங்கு தருகிறோம்.