போசனப் பிரியம்

போசனப் பிரியம் என்பது உணவு, பானங்கள் ஆகியவற்றின் மீது ஒருவனுக்குள்ள முறைப்படுத்தப்படாத நேசம் ஆகும். அது ஒழுங்கற்ற பசி ஆகும். அதன் மூலமாக உண்பதற்கும், குடிப்பதற்கும் சர்வேசுரன் தந்திருக்கிற நியாயமான இன்பத்தை நாம் துர்ப்பிரயோகம் செய்கிறோம். மிருகங்கள் ஒருபோதும் அதிகமாக உண்பதோ, குடிப்பதோ இல்லையென்றாலும், போசனப் பிரியம் மனிதனை மிருகத்துக்கு ஒப்பாக்குகிறது என்று சில சமயங்களில் சொல்லப் படுகிறது. இருந்தாலும் இந்த வாக்கியத்தில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஏனென்றால் போசனப் பிரியம், மனத்தை, அதாவது புத்தியையும், அறிவையும் மந்தமாக்குகிறது. இந்த சத்துவமே நம்மை மிருகங்களுக்கு மேலானவர்களாக ஆக்குகிறது.

போசனப் பிரியம் நம் ஞான ஜீவியத்தில் ஏற்படுகிற மோசமான தடைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. அதிகமாக உண்டு குடித்தபின் படிப்பதோ, ஜெபிப்பதோ எளிதான காரியமல்ல. போசனப்பிரியம் சித்தத்தைப் பலவீனப்படுத்தி, சோம்பலுணர்வையும், புலன்களின் இச்சையையும், அசுத்ததனத்தையும் வளர்க்கிறது. பெரும்பாலும் அபத்தமும், வக்கிரமும், அருவருப்பான பேச்சுமே இதன் விளைவுகளாக இருக்கின்றன.

அளவுக்கு அதிகமாக உண்பதன் மூலம், அல்லது மிக வேகமாகவும், பேராசையோடும் உண்பதன் மூலம் நாம் சாப்பாட்டுப் பிரியர்கள் என்று அழைக்கப்படக் கூடும். மிகவும் நுணுக்கமான சுவை உணர்வுள்ளவர்களாகவும், வழக்கத்துக்கு மாறான உணவுகள், பதார்த்தங்களை விரும்புகிறவர்களாகவும் நாம் இருந்தால், நாக்கை நம்பி வாழ்கிறவர்கள் என்ற பெயர் கூட நமக்கு வரலாம். அற்ப காரியங்களிலும் மிகுந்த கவனம் செலுத்திக் கொண்டும், திருப்திப் படுத்தப் பட கடினமானவர்களாகவும், விமரிசன மனமுள்ளவர்களாகவும், உணவைப் பற்றி முணுமுணுக்கிறவர்களாகவும் இருப்பதன் மூலம் நாம் சிறு சிறு பாவங்களைக் கட்டிக் கொள்ள நேரிடலாம்.

அதிகமாக மது அருந்துவது ஒருவனை போதையில் ஆழ்த்துகிறது. இதுவே இந்தத் தீமையின் மிக மோசமான வடிவமாக இருக்கிறது. குடிகாரன் மதுபானத்தில் தன் அறிவை மூழ்கடிக்கிறான். அதனால் தான் செய்வது இன்னதென்று அவன் அறியாதிருக்கிறான். அவனது இந்தக் கெட்ட பழக்கம் அவனுக்கிருந்த நல்ல பெயரைக் கெடுத்து, மற்றவர்கள் அவனை இகழும்படி செய்து விடுகிறது. மிக அடிக்கடி அது அவனை வறுமைக்கும், அவமானத்திற்கும், அவனது குடும்பத்தை பசி, பட்டினிக்கும் ஆளாக்குகிறது. கோபம், சபிப்பது, சச்சரவு செய்வது, சண்டையிடுவது, திருடுவது, ஏமாற்றுவது ஆகியவை பெரும்பாலும் குடிப்பழக்கத்தின் விளைவுகளாக இருக்கின்றன.

இந்தத் தீமையின் காரணமாக ஒரு மனிதன் தன் மனைவி, பிள்ளைகளை அடிக்கலாம், ஏன், கொலை கூட செய்யலாம். அசுத்ததனத்தின் பாவங்கள் அதனோடு நெருக்கமாக இணைந்துள்ளன. குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களால்தான் எண்ணற்ற வாகன விபத்துக்கள் நேரிடுகின்றன. மிக அடிக்கடி இந்த விபத்துக்களால் அநேகர் காயமடைகிறார்கள், அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது. குடிகாரர்கள் பெரும்பாலும் தங்கள் போதை மயக்கத்திலேயே மரணமடைகிறார்கள். இதனால் தங்கள் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட அவர்களால் முடிவதில்லை. அப்படியானால் அவர்களுடைய நித்திய முடிவு எத்தகையதாக இருக்கும்? “மோசம் போகாதேயுங்கள்; தூர்த்தரும், விக்கிரக ஆராதனைக் காரரும், விபச்சாரக் காரரும், சிற்றின்பப் பிரியரும், ஆணும் ஆணுமாய் மோகிக்கிறவர்களும், திருடரும், பொருளாசைக்காரரும், குடிவெறியரும், உதாசீனரும், கொள்ளைக் காரரும் சர்வேசுரனின் இராச்சியத்தைச் சுதந்தரிப்பதில்லை” என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (1 கொரி.6:9,10).

துரதிருஷ்டவசமாக, முந்தின காலங்களில் குறித்துக் காட்ட முடிந்தது போல இப்போது குடிப்பழக்கம் ஆண் வர்க்கத்தை மட்டுமே சார்ந்ததாக இல்லை. மாறாக பெண்களிடையேயும் அது மிகப் பரவலாக ஆகியுள்ளது. மது அருந்துவது அவர்களை இன்னும் அதிகக் கேவலமான நிலைக்கு உள்ளாக்குகிறது.

போதையில் பல மட்டங்கள் உள்ளன. அறிவை ஒருவனிடமிருந்து முற்றிலுமாக அகற்றி விடுகிற முழுப் போதை, சாவான பாவமாக இருக்கிறது. தீவிரமான ஒழுங்கீனங்கள் இல்லாத வரைக்கும், குறைவான போதை அவ்வளவு மோசமான தீமையாக இல்லாதிருக்கலாம். பாவத்தின் அளவு ஒழுங்கீனத்தின் அளவுக்கு இசைவானது.

ஒருவனை அதிகமாகக் குடிக்கத் தூண்டுவதன் மூலம் அவனுடைய பாவத்தில் நாமும் பங்காளிகளாகக் கூடும். எனவே நட்புறவு, உபச்சாரம் ஆகியவற்றின் அடையாளமாக ஒருவருக்கு மதுவைக் குடிக்கத் தரும் போதும், சமூக விழாக்களில் மதுவைப் பரிமாறுகிற போதும், நாம் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவன் மது அருந்த மறுக்கிற போது அவனைக் கட்டாயப் படுத்துவதோ, அல்லது இளம் வயதினருக்கு அதிக போதை தரும் மதுவகைகளைத் தருவதோ தவறானது.

குடிப் பழக்கம், அதன் பல்வேறு தீமையான விளைவுகளின் காரணமாக, நம் காலத்தின் மிகப் பரவலான தீமைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம்பெண்களும் அதற்குப் பலியாகிறார்கள். கடும் வெறுப்பு, விவாக ரத்து ஆகியவற்றைக் கொண்டு அது பல குடும்பங்களை அழிக்கிறது. தன் இரும்புப் பிடியில் சிக்கியிருக்கிற அனைவருடைய வாழ்வையும் அது சீரழிக்கிறது.

மது வகைகளைப் பயன்படுத்தும் போது மட்டுமிதமும், குடிவெறிக்கு உட்படாத நிதானமும் எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று திருச்சபை கற்பிக்கிறது. அநேகர், என்றாவது ஒருநாள் எல்லைக் கோட்டைத் தாண்ட மாட்டார்கள், தொடக்கத்தில் அவ்வப்போது, சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் அருந்திய மதுவின் காரணமாக பிற்பாடு ஒரு குடிகாரனாக ஆக மாட்டார்கள் என்பதற்கு, அவர்கள் மது அருந்துவதை முழுவதுமாக விலக்குவது மட்டுமே உத்திரவாதமாக இருக்கிறது.

இவ்விஷயத்தில் போதைப் பொருட்களின் துஷ்பிரயோகத்தைப் பற்றியும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். சில நோய்களின் போது போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. ஆனால், ஒரு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அவை பயன்படுத்தப் பட வேண்டும். ஏனெனில் அவற்றைப் பயன்படுத்துவது ஒரு பழக்கமாக உருவாகி விடும் ஆபத்து அதில் இருக்கிறது.


மட்டுமிதத்தால் பாதுகாக்கப் படுதல்

உண்பதிலும், குடிப்பதிலும் மட்டுமிதத்தோடு இருக்கக் கடுமையாக முயற்சி செய்யும் காரியத்தில் நம் ஆண்டவரின் ஒறுத்தல், உணர்ச்சிவசப்படாத சம நிலை, போதையை விலக்குதல், பரித்தியாகம் ஆகியவை நம்மைத் தூண்டும் முன்மாதிரிகைகளாக இருக்கினறன. இவ்வாறே அர்ச்சியசிஷ்டவர்களின் முன்மாதிரிகையும் நமக்குப் பாடமாக உள்ளது. அவர்கள் எப்போதும் உணவு, மற்றும் மது ஆகியவற்றில் வீரத்துவமுள்ள கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தனர். அதன் மூலம் அவர்கள் தங்கள் பசி, தாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தியிருந்தனர். இதன் மூலம் தங்கள் ஆத்தும சுதந்திரத்தை அவர்கள் காத்துக் கொண்டதோடு, தங்கள் ஞான பலத்தையும், ஆற்றல் வளத்தையும், தைரியத்தையும் பெருக்கிக் கொண்டனர்.

உபவாசம், அல்லது உணவின் காரியத்தில் பரித்தியாகம் மற்றும் சுய-மறுதலிப்பு என்பது சில குறிப்பிட்ட சமயங்களில் திருச்சபையால் கட்டளையாகத் தரப்படுகின்றது. மிதமான, ஒழுங்குபடுத்தப்பட்ட உபவாசம் சரீரத்தின் ஆரோக்கியத்தையும், பலத்தையும் கூட நல்ல முறையில் பாதுகாக்கிறது. அது மனத்தை விழிப்புள்ளதாக்கி, இழிந்த ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது; மற்ற புண்ணியங்களை அனுசரிப்பது இதனால் எளிதாகிறது. வழக்கமாகவே, தான்தோன்றியான, கட்டுப்பாடற்ற வாழ்வு முறையையே நம் மனம் விரும்புகிறது. உபவாசம் இந்த நிலையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

உண்பதிலும் குடிப்பதிலும் உள்ள இன்பம் தன்னிலேயே ஒரு முடிவு அல்ல, மாறாக அது உயிரைக் காத்துக் கொள்ளும் ஒரு வழி ஆகும். உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்பது என்னும் பண்டைய விதிதான் போசனப் பிரியத்தைத் தவிர்ப்பதில் நம்மை வழிநடத்துகிற கொள்கையாக இருக்கிறது. “நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும், வேறெதைச் செய்தாலும், எல்லாவற்றையும் சர்வேசுரனுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” என்று அர்ச். சின்னப்பர் அறிவுறுத்துகிறார் (1 கொரி. 10:31).