8. விசுவாசப் பிரமாணத்தில் 6-ம் பிரிவைச் சொல்லு.
“பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.”
2. வீற்றிருக்கிறார் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?
மகிமைப் பிரதாபத்தோடு உட்கார்ந்திருக்கிறார் என்று அர்த்தம் ஆகும்.
74. (38) நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
1. “பரலோகத்துக்கு எழுந்தருளினார் என்பதற்கு அர்த்தமென்ன?
நமதாண்டவர் உயிர்த்த நாற்பதாம் நாள், மகிமைப் பிரதாபத்தோடு வானத்தில் ஏறி, மோட்சத்திற்கு எழுந்தருளி, அதிலே மகிமையோடு பிரவேசம் பண்ணினாரென்று அர்த்தமாம்.
2. அவர் அரூபியாய் மோட்சத்துக்குச் சென்றாரோ?
இல்லை. தமது திரு ஆத்துமத்தோடேயும், திருச் சரீரத்தோடேயும் மோட்சத்துக்குச் சென்றார்.
3. அவர் எங்கே இருந்து மோட்சத்துக்கு ஏறினார்?
அவர் இரத்த வியர்வை வியர்த்த ஒலிவத் தோட்டத் துக்கு அருகாமையிலிருந்த ஒரு சிறு மலை மேலிருந்து மோட்சத் துக்கு ஏறினார்.
4. அவர் மோட்சத்துக்கு ஏறுவதற்கு முன் என்ன செய்தார்?
தமது கரங்களை சீடர்களின்மேல் உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டே மேலெழுந்து, அவர்கள் பார்த்துக் கொண்டு நிற்க வானத்தின்மேல் ஏறினார் (லூக். 24:51).
5. அதற்குப் பிறகு சம்பவித்ததென்ன?
ஒரு மேகம் வந்து அவரை மறைக்கவே, சீஷர்கள் பயந்து அங்கேயே நின்று கொண்டிருக்கும்போது, இரண்டு சம்மனசுகள் வந்து அவர்களுக்குத் தோன்றி, “ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்? இப்போது மோட்சத்துக்கு எழுந்தருளின இந்த சேசுநாதர் எப்படிப் பரலோகத்துக்கு எழுந் தருளிப் போகக் கண்டீர்களோ, அப்படியே மறுபடியும் வருவார்” என்றார்கள் (அப். நட. 1:11). அதை அவர்கள் கேட்டு ஜெருசலேம் பட்டணத்துக்குப் போனார்கள்.
6. சேசுநாதரை மோட்சத்துக்குத் தூக்கிக் கொண்டு போனது யார்?
அவரை ஒருவரும் தூக்கிக் கொண்டு போகவில்லை. அவர் எல்லாம் வல்லபமுள்ள தேவனாகையால், யாதொரு உதவியுமின்றி, தமது சொந்த வல்லமையினால் மோட்சத்துக்கு எழுந்தருளிப் போனார்.
7. தெய்வீகத்துக்குரிய வல்லமையினால் மாத்திரமா சேசுநாதர் மோட்சத்துக்குப் போனார்?
சேசுநாதர் தமது தெய்வீகத்துக்குரிய வல்லமையினால் மாத்திரமல்ல, மகிமையடைந்த தமது மனுஷீகத்துக்குரிய வல்லபத்தினாலும் மோட்சத்துக்கு எழுந்தருளிப் போனார்.
8. சேசுநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளிப் போனதற்கு முன் மோட்சத்தில் இருந்ததில்லையோ?
சேசுநாதர் சர்வேசுரனாகிய மட்டும் எப்போதும் மோட்சத்திலிருந்தார். ஆனால் தேவனும் மனிதனுமாகிய மட்டும் அங்கே இருந்ததில்லை. அவர் மோட்சத்துக்கு ஏறிப் போன பிறகோவெனில், அவர் அங்கே மெய்யான மனிதனும், மெய்யான சர்வேசுரனுமாக வீற்றிருக்கிறார்.
9. சேசுநாதரோடு வேறே யாராகிலும் மோட்சத்துக்குப் போனார்களா?
கணக்கில்லாத சம்மனசுகள் அவரைப் புடைசூழ்ந்து சென்றார்கள். மேலும் பாதாளத்திலிருந்த புண்ணியாத்துமாக்களையும் தம்மோடு மோட்சத்துக்கு அழைத்துக் கொண்டு போனார்.
10. சேசுநாதர் ஏன் மோட்சத்துக்குப் போனார்?
(1) இவ்வுலகத்தில் பாடுகள் பட்ட தமது மனித சுபாவத்திற்குப் பரலோக மகிமைப் பிரதாபத்தையும், இன்ப பாக்கியத்தையும் கொடுக்கவும் (அரு.27:57, எபே. 1:21),
(2) மோட்சத்தின் கதவுகளைத் திறந்து, நமக்கு ஓர் இடத்தை ஆயத்தம் செய்யவும் (அரு.4:2).
(3) பிதாவிடத்தில் நமக்காகப் பரிந்துபேசவும் (1 அரு.2:1),
(4) தாம் வாக்களித்தபடி இஸ்பிரீத்துசாந்துவை அனுப்பி வைக்கவும் போனார் (அரு.16:7).
11. சேசுநாதர் பரலோகத்துக்கு ஏறின நாளை நாம் இப்போது எப்படி அழைக்கிறோம்?
கர்த்தர் மோட்சத்துக்கு ஆரோகணமான திருநாள் என்று அழைக்கிறோம்.
12. சேசுநாதர் மோட்சத்தில் வீற்றிருக்கிறார் என்று சொல்லுவது ஏன்?
நிற்கிறதைவிட உட்கார்ந்திருக்கிறதே சுகம். சேசுநாதர் மோட்சத்தில் முடிவில்லாத சகல பேரின்ப பாக்கியத்தையும் அனுபவிக்கிறாரென்று காட்டும்பொருட்டு அவர் வீற்றிருக்கிறா ரென்று சொல்லுகிறோம்.
13. பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் என்பதற்கு அர்த்தம் என்ன?
பிதாவாகிய சர்வேசுரனுக்குச் சரீரமில்லாததாலும், அவர் எங்கும் வியாபித்திருப்பதினாலும், அவருக்கு வலது பக்கம், இடது பக்கம் உண்டென்று ஒருபோதும் எண்ணக்கூடாது. ஆனால் வலது பக்கம் மகிமை ஸ்தானத்தின் அடையாளம். இப்படியே ஒரு இராஜா தன்னிடத்தில் வந்த ஒரு இராஜாவுக்கு மரியாதை செய்ய வேண்டிய இவரைத் தன் வலது பக்கத்தில் உட்காரச் செய்வான். ஆகையினாலே மோட்சத்தில் சர்வேசுரன் சேசுநாதருடைய மனித சுபாவத்திற்கு எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலான இடத்தையும் கொடுத்திருக்கிறாரென்று அர்த்தமாகும்.
14. சேசுநாதர் சர்வேசுரனாகியமட்டும் பிதாவாகிய சர்வேசுர னுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறாரா?
சேசுநாதர் சர்வேசுரனாகிய மட்டும் எங்கும் வியாபித்திருக்கிறார். ஆனதால் மனிதனாகிய மாத்திரம் பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
15. அப்படியானால் எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?
சேசுநாதர் சர்வேசுரனாகியமட்டும் எல்லாவற்றிலும் பிதாவுக்குச் சரிசமானமாயிருக்கிறதுமன்றி, மனிதனாகியமட்டும் சகல தெய்வீக நன்மை வரங்களையெல்லாம் மற்ற சிருஷ்டிகளுக்கு மேலாக அநுபவித்துக் கொண்டு மோட்சத்தில் நித்திய மகிமைப் பிரதாபத்தோடு வீற்றிருக்கிறார்.
75. (39) இப்போது சேசுநாதர்சுவாமி எங்கே இருக்கிறார்?
சர்வேசுரனாகிய மட்டும் எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனுஷனுமாகிய மட்டும் பரலோகத்திலுந் திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.
சேசுநாதர் நமது பள்ளிக்கூடத்தில் இருக்கிறாரா?
அவர் சர்வேசுரனாகிய மட்டும் இருந்தபோதிலும், மனிதனாகிய மட்டும் நமது பள்ளிக்கூடத்தில் இருக்கிறதில்லை.