பழைய சட்டத்தின் கீழ், சர்வேசுரனுடைய மக்கள், அவர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி, பலவிதமான பலிகளைக் கொண்டு அவரை மகிமைப் படுத்தினர். ஆயினும் இந்தப் பலிகள், கடைசி இராப் போஜனத்தின் போது சேசு கிறீஸ்து நாதரால் ஏற்படுத்தப் பட்ட புதிய சட்டத்தின் பலியின் மாதிரிகளாக மட்டுமே இருந்தன. திருச்சபையின் வேதபாரகராகிய அர்ச். அல்போன்சஸ் திவ்ய பலி பூசையைப் பற்றிப் பேசும் போது, “பூசையில், சர்வேசுரன் எந்த அளவுக்கு மகிமைப்படுத்தப்படத் தகுதியுள்ளவராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு மகிமைப் படுத்தப் படுகிறார். ஏனெனில் கிறீஸ்து நாதர் சிலுவையின் மீது தம்மையே பலியாக்கிய போது, அவருக்கு அளித்த அதே எல்லையற்ற மகிமை, திவ்ய பலி பூசையின் போதும் அவருக்கு அளிக்கப் படுகிறது” என்று கூறுகிறார். திவ்ய நற்கருணைப் பலியே சகல பக்திச் செயல்களிலும் அதிக நல்லதும், அதிக ஆதாயமுள்ளதுமாக இருக்கிறது. ஏனென்றால், பூசையில் சேசுநாதருடைய ஒப்புக் கொடுத்தலின் வழியாகப் பிதாவாகிய சர்வேசுரன் எல்லையற்ற மகிமையையும், ஆராதனையையும் பெறுகிறார். இந்தக் காரணத்திற்காகவே ஞாயிற்றுக் கிழமை களிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணும்படி திருச்சபை நமக்குக் கட்டளையிடுகிறது.
கத்தோலிக்கப் பாரம்பரிய ரீதிப்படி கடன் திருநாட்கள் : கிறீஸ்துமஸ் திருநாள் (டிசம்பர் 25), சேசுநாதருடைய பரலோக ஆரோகணம், தேவமாதாவின் பரலோக ஆரோகணத் திருநாள் (ஆகஸ்ட் 15).
ஆண்டவருக்கு அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் ஒப்புக் கொடுத்த மெல்கிசெதேக்கின் பலி, பூசைப்பலியின் முன்னடையாளமாக இருந்தது. “சூரியன் உதயந் தொட்டு அஸ்தமனம் வரையிலும் நமது நாமம் சனங்கள் நடுவில் மகத்தானதாயிருக்கிறது. எவ்விடத்திலும் நமது நாமத்துக்குச் சுத்தமான பலி செலுத்தப் படுகிறது” என்று மலாக்கியாஸ் தீர்க்கதரிசி பூசைப் பலியைப் பற்றித் தீர்க்கதரிசனம் கூறினார்.
நம் ஆண்டவரின் காலம் வரையிலும், ஜெருசலேம் என்னும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பலிகள் செலுத்தப் பட்டு வந்தன. மிருகங்களின் உடல், இரத்தம் ஆகியவற்றின் இந்தப் பலிகளுக்குப் பதிலாக, சேசு கிறீஸ்து நாதர் அப்ப, இரசத்தின் தோற்றங்களுக்குள் தமது சொந்த சரீரம் மற்றும் இரத்தத்தின் பலியை ஒப்புக் கொடுத்து, “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.
மலாக்கியாஸ் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, சூரியன் உதயம் தொட்டு, அஸ்தமனம் வரை உலகின் ஒவ்வொரு பாகத்திலும் கத்தோலிக்கத் திருச்சபையில் பலி இருந்து வருகிறது. பூசையில் சர்வேசுரனுக்குச் செலுத்தப் படுகிற இந்த சுத்தப் பலி ஒருபோதும் நின்று போய் விடாது.
திவ்ய நற்கருணைப் பலி நான்கு நோக்கங்களுக்காக ஒப்புக் கொடுக்கப் படுகிறது: 1) சர்வேசுரனுக்கு ஸ்துதியும், மகிமையும் செலுத்துதல், 2) அவரது சகல நன்மைகளுக்கும் நன்றியறிதல், 3) அவருடைய மன்னிப்பை இரந்து மன்றாடுதல், உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்தல், 4) சேசு கிறீஸ்து நாதர் வழியாக நமக்குத் தேவையான சகல வரப்பிரசாதங்களையும், ஆசீர்வாதங் களையும் பெற்றுக் கொள்ளுதல்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்பது புத்தி விபரம் அறிந்த சகல கத்தோலிக்கர்களுக்கும் உரிய கடமை. திருச் சபையால் நியமிக்கப் பட்ட நாட்களில் இந்தப் பூசைப் பலியில் பங்கு பெறுவது அவர்களுக்கு மிகக் கட்டாயக் கடமையாகும். தங்கள் பொறுப்பிலுள்ள குழந்தைகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறார்களா என்று கண்காணிப்பது பெற்றோர், பாதுகாவலர்களின் கடமையாகும்.
பூசை காணும் கடமையை நிறைவேற்றுவதற்கு, நாம் இந்தப் பூசைப் பலியின் தொடக்கம் முதல் இறுதி வரை அதில் பங்குபெற வேண்டும். சரியான காரணமின்றி பூசைக்குத் தாமதமாக வருவதோ, பூசை முடிவதற்கு முன் சென்று விடுவதோ அற்பப் பாவமாக இருக்கிறது.
வியாதி, அல்லது வியாதியஸ்தரைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், மூப்பு, தேவாலயத்தில் இருந்து அதிகத் தொலைவு, மிக மோசமான கால நிலை, அல்லது பூசை நேரங்களின் போது செய்யப் பட வேண்டிய வேலை ஆகிய ஏதாவது ஒரு தீவிரமான அசெளகரிய நிலை இருக்கும் போது, பூசை காண நமக்குக் கடமையில்லை.
நம் பிதாவாகிய சர்வேசுரனுடைய குழந்தைகள் என்ற முறையில், ஓய்வுநாளாக அவர் குறித்திருக்கிற நாளில் அவரை ஆராதித்து வணங்குவது நம் கடமையாகும். இப்போது மிகப் பரிசுத்த பூசைப் பலியில் சேசுநாதர் நம் பரலோகப் பிதாவுக்கு மிக உன்னதமான வழிபாட்டு முறையை நமக்காக ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தக் காரணத்திற்காகவே, தாம் புதிய சட்டத்திற்குரிய இந்தப் பலியை ஏற்படுத்திய போது அவர், “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். எனவே ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் கவனத்தோடும் பக்தியோடும் பூசை காண வேண்டும் என்றும், அப்படிச் செய்யாதவர்கள் சாவான பாவம் கட்டிக் கொள்கிறார்கள் என்றும் பரிசுத்த திருச்சபை தனது பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகிறது. நியாயமான காரணமின்றி வேண்டுமென்றே இந்த நாட்களில் பூசைக்கு வரத் தவறுவது, கத்தோலிக்கர்களுக்கு சாவான பாவமாக இருக்கிறது. சர்வேசுரனுக்குரிய பொது வழிபாட்டை அலட்சியம் செய்கிற கத்தோலிக்கன் தன் சிருஷ்டிகரைத் தனது அரசராகவும், ஆண்டவராகவும், எஜமானராகவும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.
இந்தப் பரிசுத்த நாட்களின் போது சரீரப் பிரயாசையான வேலைகளைச் செய்யலாகாது என்றும் திருச்சபை தன் பிள்ளைகளைத் தடுக்கிறது. ஆனாலும் ஞாயிறு அன்று வேலைக்குச் செல்லவில்லை என்றால் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றால், அப்போது அவர்கள் அந்த நாட்களிலும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். ஆனாலும், இந்தப் பரிசுத்த நாட்களில் சரீரப் பிரயாசையான வேலைகளைச் செய்வது, சூழ்நிலையின் காரணமாக, தங்களுக்குப் பாவமாகாது என்ற போதும், அதற்குப் பின் அவர்கள் தங்களுக்காக சரீரப் பிரயாசையான வேலைகளைச் செய்யக் கூடாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.