பரிசுத்த வேதாகமமே இந்தக் கேள்விக்கு மிகத் தெளிவான பதிலைத் தந்திருக்கும்போது, நாம் ஏன் திருச்சபைத் தந்தையர் மற்றும் மறைவல்லுனர்களின் கருத்துக்களைத் தேட வேண்டும்? பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் தேடிப் பாருங்கள். அப்போது மிகச் சிலரே இரட்சிக்கப்படுகிறார்கள் என்ற இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுகிற பல உருவகங்களையும், அடையாளங்களையும், வார்த்தைகளையும் நீங்கள் காணலாம்.
நோவாவின் காலத்தில், மனித குலம் முழுவதும் பெருவெள்ளத்தில் அமிழ்த்தப்பட்டது. எட்டே எட்டுப்பேர் மட்டும் பேழையைக் கொண்டு காப்பாற்றப்பட்டார்கள். இந்தப் பேழை திருச்சபைக்கு உருவகம் என்று புனித பேதுரு கூறுகிறார்.
புனித அகுஸ்தினார் இதன் தொடர்ச்சியாக இந்த எட்டுப்பேரும் இரட்சிக்கப்படுகிற மிகச் சில கிறிஸ்தவர்களைக் குறிக்கிறார்கள். ஏனெனில் உண்மையாகவே உலகத்தைத் துறப்பவர்கள் ஒரு சிலரே. வெறும் வார்த்தைகளில் மட்டும் அதைத் துறப்பவர்கள் அந்தப் பேழையால் குறிக்கப்படுகிற பரம இரகசியமாகிய மோட்சத்திற்குச் சொந்தமாயிருக்க மாட்டார்கள் என்கிறார்.
எபிரேய மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியபின், இருபது இலட்சம் மக்களில் வெறும் இரண்டு பேர் மட்டுமே வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்தார்கள் என்றும், சோதோமையும், அதனோடு அழிந்த மற்ற நகரங்களையும் சுட்டெரித்த அக்கினியிலிருந்து நால்வர் மட்டுமே தப்பினார்கள் என்று பரிசுத்த விவிலியம் கூறுகிறது.
நெருப்பில் வைக்கோலைப்போல வீசியெறியப்படும் சபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பரலோகத் தந்தையால்
ஒ ரு நாள் அவருடைய களஞ்சியத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் விலையேறப்பெற்ற கோதுமை மணிகளாகிய இரட்சிக்கப்படு வோரின் எண்ணிக்கையை விட, கணக்கிட முடியாத அளவுக்கு மிகப் பெரிதாக இருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
இந்த சத்தியத்தை உறுதிப்படுத்தும்படி பரிசுத்த விவிலியத்தால் தரப்படுகிற எல்லா உருவகங்களையும் நான் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது என்றால், அந்தப் பட்டியலை நான் முடித்துக்கொள்ள மாட்டேன். எனவே அவதரித்த தேவ ஞானமானவரின் உயிருள்ள வார்த்தைகளுக்கு செவி கொடுப்பதோடு நாம் திருப்தியடைவோம்.
நற்செய்தியில் வினோதப்பிரியமுள்ள ஒரு மனிதன் நம் ஆண்டவரிடம், இரட்சிக்கப்படுபவர்கள் ஒரு சிலர்தானா? என்று கேட்டபோது, அவர் என்ன பதிலளித்தார்? மௌனம் சாதித்தாரா? தயக்கத்தோடு பதில் தந்தாரா? மக்களைத் தாம் அச்சுறுத்தி விடக்கூடும் என்ற பயத்தால் தமது எண்ணத்தை மறைத்தாரா? இல்லை, ஒரே ஒருவன் அவரிடம் கேள்வி கேட்டாலும், அவர் கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் பதிலளித்தார். அவர் அவர்களிடம், “ஒரு சிலர் மட்டும்தான் இரட்சிக்கப்படுவார்களா? என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள்.இதோ என் பதில்.ஒடுக்கமான பாதையின் வழியே நுழையபிரயாசைப்படுங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன். அநேகர் அதன் வழியே நுழைய முயன்றாலும், அதில் நுழைய மாட்டார்கள்” என்றார்.
இங்கே பேசிக் கொண்டிருப்பவர் யார்? நித்திய சத்தியமான சர்வேசுரனுடைய திருக்குமாரன்! அவர் மற்றொரு முறை இன்னும் தெளிவாக “அழைக்கப்பட்டவர்கள் பலர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ வெகுசிலரே” என்றார். எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் தெரிந்து கொள்ளப்படுகிறார்கள் என்றும் அவர் சொல்லவில்லை. மாறாக பலர் அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் சொல்கிறார். புனித கிரகோரியார் விளக்குவதுபோல, எல்லா மனிதர்களிலும் பலர் மெய்யான விசுவாசத்திற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றாலும் அவர்களில் சிலர் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள். சகோதரரே, இவை நமதாண்டவராகிய இயேசுகிறிஸ்துநாதருடைய வார்த்தைகள். இவை தெளிவாயிருக்கின்றன; இவை உண்மையானவை. இப்போது சொல்லுங்கள்; இருதயங்களில் விசுவாசமுள்ள உங்களால் இதை வாசித்து அச்சத்தால் நடுங்காமலிருக்க முடிகிறதா?