நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது.

பழைய ஏற்பாட்டில், தேவாலய குருக்களின் ஆதரவுக்காகவும், வேதத்தைப் பேணுவதற்காகவும் சர்வேசுரன் ஏற்படுத்திய ஒரு விசே­ சட்டம் இருந்தது.  புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் தமது ஊழியர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ, அவர்களால் ஆதரிக்கப் பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.  “கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் புசிக்கிறார்கள் என்றும், பீடத்தின் பரிசாரகர்கள் பீடத்துக்கு உரியவைகளில் பங்கடைகிறார்கள் என்றும் அறியீர்களோ? அவ்வாறே, சுவிசே­த்தைப் பிரசங்கிக்கிறவர்களும் சுவிசே­த்தினாலே பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார்  (1 கொரி. 9:13‡14). எனவே, தேவ கட்டளைப்படி, தங்களால் இயன்ற அளவில் விசுவாசிகள் தங்கள் மேய்ப்பர்களுக்குத்  தேவையானவைகளைத் தர கடமைப் பட்டிருக்கிறார்கள். 

இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான முறை அந்தந்தக் காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது.  திருச்சபையின் தொடக்க காலங்களில் இருந்தது போலவே, இன்றைய நாட்களிலும் மக்களின் காணிக்கைதான் ஏறத்தாழ திருச்சபையின் ஒரே நிதி ஆதாரமாக இருக்கின்றது.  மேலும், குருக்கள் கடவுளுக்குரியவையும், ஆத்துமங்களின் பராமரிப்புக்கு உரியவையுமான காரியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் தங்கள் பிழைப்புக்காக உலகத்தன்மையான வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டிருக்கிறது.  எனவே, திருச்சபை தனது ஆறாம் கட்டளையில், தனது தெய்வீக ஸ்தாபகரால் விசுவாசிகள் மேல் சுமத்தப்பட்ட ஒரு கடமையை அவர்களுக்கு நினைவு படுத்துகிறது.

நீதியின்படி, குருநிலையினர்  தங்கள் மக்களால் ஆதரிக்கப்பட உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் சட்டபூர்வமான அதிகாரத்தால் ஒரு பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் படுகிற குருக்கள் விசுவாசிகளின் எல்லாத் தேவைகளிலும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.

திருச்சபையின் இக்கட்டளை  மிகக் கண்டிப்பான ஒன்று.  ஆனாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தக் கட்டளையை அனுசரிக்கத் தவறுவதால் சாவான பாவம் கட்டிக் கொள்ளப் படுகிறதா என்பதைத் தீர்மானிப்பது கடினம்.  அத்தகைய சூழலில் ஒரு பங்குக் குருவானவர் எந்த அளவு தேவையில் இருக்கிறார், அவருக்கு உதவி செய்யத் தவறுகிற பங்கு விசுவாசியின் நிதி நிலைமை என்ன ஆகியவற்றை அது பெருமளவுக்கு சார்ந்திருக்கிறது.  ஆயினும், பல வருடங்களாகத் தங்கள் வேதக் கடமைகளை அசட்டை செய்து வரும் அக்கறையற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் அயலார்களுக்குத் துர்மாதிரிகையாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் திருச்சபையின் ஆறாம் கட்டளைக்கு எதிராக, கடமையில் தவறுவதாகிய ஒரு சாவான பாவத்தையும் கட்டிக் கொள்கிறார்கள்.

திருச்சபையின் மேய்ப்பர்கள் நன்கு பராமரிக்கப் பட வேண்டும், தேவாலயங்களும், பள்ளிகளும் கட்டப்பட வேண்டும், தேவ வழிபாட்டோடு தொடர்புள்ள அனைத்தும் தகுதியுள்ள முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இந்த திருச்சபைக் கட்டளையின் நோக்கமல்ல, மாறாக, இந்தப் பூலோகத்தில் கிறீஸ்து அரசருடைய இராச்சியம், ஆத்துமங்களின் இரட்சிப்பிற்காக எங்கும் பரவ வேண்டும் என்பதும் அதன் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.  குருநிலையினரையும், விசுவாசிகளையும், பிறர் சிநேகத்தின் கடடுக்களால் ஒன்றிப்பதும் இந்தக் கட்டளையின் நோக்கமாக இருக்கிறது.  ஏனென்றால் இந்தப் பரஸ்பர நேசம் பலமுள்ளதாக இருக்கிற இடங்களில் எல்லாம், கத்தோலிக்க விசுவாசம் செழித்து வளர்ந்து பரவுகின்றது.   குருக்கள் தங்கள் பங்கு மக்களின் ஆதரவுக்கு பிரதிபலனாக, அவர்களுக்குப் போதுமானதைத் திருப்பிச் செலுத்துவதில்லையா? ஏனென்றால் அவர்கள் தங்கள் பங்கு மக்களின் ஞானத் தேவைகள் அனைத்திலும் அவர்களுக்கு உதவும்படி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லவா?  விசுவாசிகள் திருச்சபையின் மீது பொழிகிற சகல உபகாரங்களும், அவற்றைப் பெற்றுக் கொள்வோருக்கு மட்டுமல்லாமல், அவற்றைத் தருபவர்களுக்கும் நன்மை விளையச் செய்பவையாக இருக்கின்றன.  ஏனென்றால் திருச்சபையும், அது  கொண்டுள்ள சகலமும், மக்களின் நன்மைக்காகவே உலகில் நிலைத்திருக்கின்றன.

தேவ கற்பனைகளை விசுவாசிகள் அனுசரிப்பதை உறுதி செய்வதற்காகவும், மனிதனின் நிலையற்ற தன்மைக்கு எதிரான ஒரு தடையை எழுப்பவும், அவனது பலவீனத்தில் அவனுக்கு உதவவும், தனது சிருஷ்டிகரின் மட்டிலும், அயலார்கள் மட்டிலும், தன் மட்டிலும் அவனுக்குள்ள கடமைகளை அவனுக்கு நினைவுபடுத்தவும், தனது நித்திய இரட்சணியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவன் மேற்கொள்ள வேண்டிய வழிகளை அவன் அறியச் செய்யவுமே பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை இந்த ஆறு கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சபையின் வார்த்தைகளுக்குச் செவி சாய்த்து, சாகும் வரை கீழ்ப்படிதல் உள்ளவர்களாக, கிறீஸ்துநாதரின் நல்ல வீரர்களாக உழைப்பவர்கள் அனைவரும், “சர்வேசுரன் தம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவிய கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள்” (இயாகப்பர் 1:12).