“எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். எல்லாவற்றையும் தந்து விட்டேன். புதிய திருமுறை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதை என் ஞாபகமாகச் செய்யுங்கள். உங்கள் குருவைப் போல நீங்கள் தாழ்ச்சியுடனும், பரிசுத்தத்துடனும் இருக்கும்படி உங்களுக்குக் கற்பிக்க உங்கள் பாதங்களைக் கழுவினேன். ஏனென்றால் உங்களுக்கு இதோ சொல்கிறேன், சீடர்கள் தங்கள் குருவைப் போலிருக்க வேண்டும். அதை நினைவில் கொள்ளுங்கள். மனத்தில் பதியுங்கள். உங்கள் உயர்பதவிகளில் இருக்கும் போதும் இதை நினைத்துக் கொள்ளுங்கள்.
எந்த சீடனும் குருவுக்கு மேலானவனல்ல. உங்களை நான் கழுவியதுபோல் நீங்கள் ஒருவருக்கொருவர் செய்யுங்கள். அதாவது, சகோதரரைப் போல் ஒருவரையொருவர் நேசியுங்கள். மரியாதை செய்து உதவி புரியுங்கள். ஒருவருக்கொருவர் முன்மாதிரிகை காட்டுங்கள். பரிசுத்தமாயிருங்கள். மோட்சத் திலிருந்து இறங்கின உயிருள்ள அப்பத்தை உட்கொள்வதற்குத் தகுதியாயிருக்கும்படியாகவும் என் நாமத்திற்காக உங்களைப் பகைக்கும் விரோதமுள்ள உலகத்தில் என் சீடர்களாயிருக்க வேண்டிய தைரியத்தை உங்களிலும் இந்த அப்பத்தின் மூலமாகவும் பெற்றிருக்கும்படியாகவும் பரிசுத்தமாயிருங்கள்.
ஆயினும் உங்களில் ஒருவன் சுத்தமாயில்லை. உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான். அதனால் என் உள்ளம் ஆழமாய்க் கலங்கியிருக்கிறது... என்னைக் காட்டிக் கொடுக்கிறவனுடைய கரம் இதோ என்னுடன் இம்மேசையில் இருக்கிறது. என் அன்பும், என் சரீரமும் இரத்தமும் என் வார்த்தையும் அவன் தன் வழியைத் திருத்திக் கொள்ளவும், மனஸ்தாபப்படவும் செய்யவில்லை. அவனுக்காகவும் மரணத்திற்குச் செல்லும் நான் அவனை மன்னிக்க ஆசிக்கிறேன்.”
சீடர்கள் ஒருவரையொருவர் பயந்த பார்வை பார்க்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் ஆராய்கின்றனர். இராயப்பர் தம்முடைய சந்தேகங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு இஸ்காரியோத்தைக் கூர்ந்து நோக்குகிறார். யூதா ததேயுஸ் சடாரென எழுந்து மத்தேயுவைத் தாண்டி இஸ்காரியோத்தைப் பார்க்கிறார்.
ஆனால் யூதாஸ் எப்படி தன்னைப் பற்றி உறுதியாயிருக்கிறான்! அவனும் மத்தேயுவைச் சந்தேகிப்பது போல் பார்க்கிறான். பின் சேசுவை உற்றுப் பார்த்துக் கொண்டே:
“ஒருவேளை அது நானாயிருக்குமோ?” என்கிறான். தன் நேர்மையைப் பற்றி மிக நிச்சயமாயிருப்பவன் அவனே என்பது போல் காணப்படுகிறான். பேச்சு விடுபட்டுப் போகாதபடி அவனே அதைச் சொல்லிக் கேட்கிறான்.
சேசு முன்போலவே கரங்களை நீட்டி:
“சீமோனின் யூதாஸ்! நீதான் அப்படிச் சொல்கிறாய். நான் சொல்லவில்லை. நீ அப்படிச் சொல்கிறாய். உன் பெயரை நான் உச்சரிக்கவில்லை. நீ ஏன் உன்னையே குற்றஞ்சாட்டுகிறாய்? உன் அந்தரங்க எச்சரிப்பாளரைக் கேள் - உன் மனித மனசாட்சியை. நீ ஒரு மனிதனாக நடக்கும்படி பிதாவாகிய கடவுள் உனக்குக் கொடுத்த மனசாட்சி அது. அது உன்னைக் குற்றஞ் சாட்டுகிறதா என்று கவனி. நீதான் அதை முதலில் அறிந்து கொள்வாய். ஆனால் அது அப்படியல்ல என்று உறுதி கூறுமானால், ஒரு வேடிக்கையாகக் கூட சொல்வதற்கும், அல்லது நினைப்பதற்குமே தகாத ஒரு செயலைப் பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட நீ சொல்ல வேணடும்? ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்?”
சேசு அமைதியாகப் பேசுகிறார். ஒரு கற்றறிந்த மனிதன் தன் மாணவர்களுடன் ஒரு கொள்கையை ஆதரித்துப் பேசுவது போல் இருக்கிறது. குழப்ப நிலை கூடுதலாயிருந்தாலும் சேசுவின் அமைதி அதைச் சாந்தப்படுத்துகிறது.
புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479