சில விநாடிகள் மிக ஆழ்ந்த மவுனம் நிலவுகிறது. சேசுவின் தலை கவிழ்ந்திருக்கிறது.
பின் சேசு நிமிர்கிறார். தலையை உயர்த்தி சுற்றிலும் பார்க்கிறார். அவருடைய புன்சிரிப்பு சீடர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
“நாம் இந்த மேசையை விட்டுவிட்டு ஒரு தகப்பனைச் சுற்றி பல பிள்ளைகள் இருப்பதுபோல் எல்லோரும் நெருங்கி உட்காருவோம்” என்கிறார்.
மேசைக்குப் பின்னாலிருந்த சாய்மான இருக்கைகளை (அதாவது சேசுவுடையதும், அருளப்பர், யாகப்பர், இராயப்பர், சீமோன், பிலவேந்திரர், சேசுவின் சகோதரர் யாகப்பர் ஆகியோரின் இருக்கைகளை) எடுத்து மறுபக்கத்திற்குக் கொண்டு வருகிறார்கள்.
சேசு தம் இருக்கையில் அமர்கிறார் - முன்போல் யாகப்பருக்கும் அருளப்பருக்கும் நடுவில், அப்போது பிலவேந்திரர் யூதாஸின் இருக்கையில் உட்காரப் போகையில் சேசு சத்தமாய்:
“அதில் உட்காராதே”
என்று அவசரமாகச் சொல்லி விடுகிறார். இந்த உணர்வுபூர்வமான வார்த்தையைத் தடுக்க அவருடைய பெரும் விவேகம் வெற்றி பெறவில்லை. பின் அவர் தம் குரலை மாற்றிக் கொண்டு:
“நமக்கு இவ்வளவு இடம் தேவையில்லை. நாம் கீழே உட்கார்ந்தால் இவைகளே நமக்குப் போதும். இவை போதுமானவை. நீங்கள் எனக்கு மிகப் பக்கத்தில் அமர நான் விரும்பு கிறேன்” என்கிறார்.
அவர்கள் U வடிவமாகச் சுற்றி அமர்ந்துள்ளார்கள். சேசு நடுவில் இருக்கிறார். இப்பொழுது எந்தப் பொருளும் இல்லாத மேசையும் யூதாஸின் இருக்கையும் அவருக்கு எதிரே கிடக்கின்றன.
செபதேயுவின் யாகப்பர் இராயப்பரிடம்:
“நீர் இங்கே அமரும். நான் இந்த சிறிய முக்காலியில் சேசுவின் பாதங்களின் பக்கத்தில் இருந்து கொள்கிறேன்” என்கிறார்.
அதற்கு இராயப்பர்:
“யாகப்பரே, கடவுள் உம்மை ஆசீர் வதிப்பாராக! இதை நான் அதிகம் விரும்பினேன்”
என்று கூறி இராயப்பர் தம் ஆண்டவருடன் நெருங்கி உட்கார்ந்து கொள்கிறார். இப்பொழுது சேசுவை அருளப்பரும் இராயப்பரும் நெருக்கிக் கொள்ள, யாகப்பர் ஆண்டவரின் பாதத்தில் இருக்கிறார்.
சேசு புன்முறுவல் பூத்துக் கூறுகிறார்:
“நான் முன்பு கூறிய வார்த்தைகள் வேலை செய்ய ஆரம்பித்துள்ளதைக் காண்கிறேன். நல்ல சகோதரர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். யாகப்பா, நானும் உன்னைப் பார்த்து:
“கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக!” என்று சொல்லுகிறேன். உன்னுடைய இந்தச் செயலும் நித்தியரால் மறக்கப்படமாட்டாது. அதை நீ அங்கே மேலே கண்டு கொள்வாய்” என்கிறார்.
மேலும் தொடர்ந்து சேசு சொல்கிறார்:
“நான் கேட்கிற எல்லாவற்றையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியும். நீங்களே அதைப் பார்த்திருக்கிறீர்கள். சுதன் தம்மையே போஜனமாக மனிதர்களுக்கு வழங்க பிதா அனுமதிப்பதற்கு என்னுடைய ஒரு விருப்பமே போதுமானதாயிருந்தது. இப்பொழுது நடைபெற்றவற்றால் மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஏனென்றால், கடவுளின் சிநேகிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய புதுமையானது வல்லமைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. புதுமை எவ்வளவுக்குப் பெரிதாயிருக்கிறதோ, அவ்வளவிற்கு தெய்வீக நட்பு அதிக நிச்சயமாகவும், ஆழமாகவும் இருக்கிறது. இந்தப் புதுமையின் வடிவம், கால அளவு, தன்மை ஆகியவற்றாலும், அது எய்துகிற உச்ச அளவையும், எல்லைகளைப் பற்றியும் அது எவ்வளவு பெரிதானதென்றால் அதைவிடப் பெரிய புதுமை இருப்பது சாத்தியமில்லை.
நான் உங்களுக்குச் சொல்கிறேன். இது எவ்வளவு வல்லமை வாய்ந்தது, சுபாவத்திற்கு மேலானது, அகங்கார மனிதரால் சிந்திக்கக் கூடாததாயிருக்கிறதென்றால், வெகு கொஞ்சப் பேரே இதைக் கண்டுபிடிப்பார்கள். பலர் இதை மறுப்பார்கள். ஆதலால் நான் என்ன சொல்வேன்? அவர்களைக் கண்டனம் செய்யவா? இல்லை. நான் கூறுவேன்: அவர்கள் மேல் இரக்கங்கொள்ளுங்கள்".
புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479